மட்டுநகர் மகல் எழுதிய சாவுக்கு தேதி குறித்த சரித்திர வான்களே!

கானகம் பல ஏறி
கந்தக உடல் சுமந்து
காற்றிலே சாமரமாய் பறந்து
சத்திய வேள்வியில்
அக்கினியாய் உதித்த
சந்தன மேனிகளை வந்து
வணங்கிடும் வேளையில்
புஜங்கள் நிமிர்ந்து
புலனில் பராக்கிரமம் பதிந்திடும்
சாவுக்கு அஞ்சாது எம்
வாழ்வுக்கு வழி வகுத்து
கார்த்திகை நாயகர்களாய் ஒளிர்கின்றன

நாவுக்குள் தலைவனை தினம் ஓதி
சாவுக்கு தேதி குறித்த
சரித்திர வான்களே!
உங்களை நினைந்து உறுதி கொள்கின்றது மனது

காரிருள் சூழ கண மழை தூரும்
கல்லறைக் கடவுள்கள்
காற்றாய் உளம்புகுவார்கள்
விண்ணில் மின்னும் விண்மீன்கள் போல
தமிழ் மண்ணில் பிரகாசிக்கும்
வீரப்பிறப்பெடுத்த மறவர்கள்
உள்நெருப்பு ஒளி தரும்
உளம் வழி தரும்

மண்ணுள் புகாது புயலில் கலந்த புயல்களுக்கு நினைவுத்தடம் பதியும்
தோளில் சுமந்து வர
குருதி கசிந்துருகும்
தொலைத்தோமேன பதறி வரும் உறவுக்கு
புதைத்த அத்தாட்சியிலிருந்து
அத்தடம்மீது தொழுகைகள் தொடரும்

 ஆக்கம்  மட்டுநகர் மகல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக