வல்வைப் படுகொலைகள்! – 27 ஆவது நினைவு தினம்

வல்வைப் படுகொலைகள்! -மனைவியைப் பிணமாகத் தேடிய கணவனும்,கணவனை பிணமாகத் தேடிய மனைவியும்..சோகத்தையும் சொத்துகளையும் இழந்த நாட்கள் அவை! -அமைதிப் படையின் அட்டூழியங்கள்!-

எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படை,அமைதிப் படை என்னும் முத்திரையைக் குத்திக் கொண்டு ஈழத்தில் புரிந்த அட்டகாசங்கள் ஒன்றா இரண்டா?..எண்ண முடியாது..
அமைதிப் படை என்பது தமிழர்களை அழிக்கும் படையாகி,தம் முகாம்களில் இருந்து வெளியேறி,அங்குலம் அங்குலமாக சோதனை என்னும் பெயரில் மக்களை கொன்று குவித்த வரலாறும்,அவர்களின் சொத்துகளைச் சூறையாடிய வரலாறும்,எமது பெண்களை வகை தொகையின்றி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி சீரழித்த வரலாறும்,
தமிழனின் நினைவுப் பெட்டகத்தில் இருந்து ஒருபோதும் அழிந்து விடாது!
ஆம் ..அமைதிப் படையின் அட்டகாசங்களை தட்டிக் கேட்டவர்கள் புலிகள்தான் .முகாம்களில் இருந்து வெளியேறிய படைகள் மீது நிலக் கண்ணி வெடிகளை வைத்தும்,நேரடிச் சமரில் ஈட்பட்டும்,.அமைதிப் படைக்கு பதிலடி கொடுத்தார்கள் புலிகள்..அப்படித்தான் வல்வையிலும் அன்று நடந்தது.எமது மக்களை சீரழிக்க வெளியேறிய படையினர்மீது எதிர்த் தாக்குதல் நடாத்தினர்.
அது நடந்தது 1989 ஆம் ஆண்டில்..அதில் 9 சீக்கிய இராணுவத்தினர் கொல்லப் பட்டனர்.அதற்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் வல்வையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த அமைதிப் படை முகாம்களில் இருந்து,வல்வையைச் சுற்றியிருந்த கிராமங்களில், சாச் சங்குகள் ஊதப் பட்டன..
சாச் சங்குகள் என்றால் அநேகம் பேருக்கு தெரியாமல் இருக்கலாம்,தமிழர் வாழும் நாடுகளில் சாச் சங்கு என்பது இயற்கையாக செத்த ஒருவர் பற்றிய அறிவிப்பை,அந்தக் காலத்தில் மட்டுமன்றி, இன்றும் தமிழ் நாட்டில் உள்ள சில கிராமங்களில் பொது மக்களுக்கு சங்கை ஊதியவாறு ஒருவன் வீதி வீதியாக சென்று அறிவிப்பான் .அதுவே சாச் சங்கு என்று அழைக்கப் படும்!
ஆனால்,அமைதிப் படையின் சாச் சங்குக்கு ஓர் தனி மவுசு உண்டு..
அமைதிப் படை நிலை கொண்டிருந்த பகுதிகளில் உள்ள ,முகாம்களில் குறிப்பிட்ட தரம் உள்ள கப்டனோ,அல்லது அதற்கும் மேலான ஒருவரோ,தாமாகவே சில பிரதேசங்களை உள்ளடக்கிய ஊர்களில் உள்ள மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு,போடுவார்கள்.அமைதிப் படையின் வாகனங்கள் அதை ஊரின் முக்கிய பகுதிகளுக்குச் சென்று அறிவிக்கும்..
இந்திய அரசின் எழுதப் படாத தர்பார்களை மன்னர் காலத்தில்தான் அமுல் படுத்தினார்கள் என்பது தெரியும்.ஆனால், ஈழத்தில் தமிழர்களின் தலைகளை எடுக்கும் நிகழ்வுக்கு,தமிழ்ப் பெண்களின் மானத்தை சிதைக்கும் நிகழ்வுக்கு , ஆயத்தமாக புறப்பட்டுச் செல்லும் நிகழ்வுக்கு பெயர்தான் ஊரடங்கு உத்தரவு! அப்படித்தான் அன்று மூன்று நாட்கள் ,அதாவது ஆவணி மாதம்,1989 இல், 2,3,4 ஆகிய
திகதிகளில்,வல்வையில் உள்ள அமைதிப் படை முகாம்களான,பொலிகண்டி,ஊரிக்காடு முகாம்களில் இருந்து எம தூதுவர்கள்,பாசக் கயிறுகளுடன் உயிர் எடுப்பு நடவடிக்கைக்கு புறப்பட்டனர்.கப்டன் கோபால கிருஷ்ண மேனன், கப்டன் கபூர் , ஆகியோரின் தலைமையில் இரு குழுக்கள் வீடு வீடாகச் சென்று அந்த
சாச் சங்குகளை ஊதினர்..யாருக்கு தெரியும் இது உலகில்?..எந்த ஊடகமாவது அப்போது இவைகளை வெளியிடும் நிலையிலா ஈழத்திலோ அல்லது இந்தியாவிலோ இருந்தன?ஒரேயொரு ஊடகம்தான் முதன் முதலில் இந்த வல்வைச் சாச் சங்கு விடயத்தை உலகுக்கு ஊதிக் காட்டியது.அதைத் தொடர்ந்து வேறு ஒருசில வெளிநாட்டு ஊடகங்கள் மட்டும் ,அதை வெளிப்படுத்தின.அதில் ஒன்றுதான் லண்டன் பைனான்சியல் டைம்ஸ்’ ஆகும்.
இல்லையெனில் அந்த சோக நிகழ்வுகள், அமைதிப் படையின் அட்டூழியங்கள் காற்றோடு கரைந்து போயிருக்கும்- கடலோளோடு அமிழ்ந்து போயிருக்கும்.ஆம்..மூன்று நாட்கள் மக்களை வெளியில் செல்லாதவாறு முடக்கிவிட்டு,சக்கரவர்த்தி ராஜீவ் மன்னரின், வீரப் படைகள் புரிந்த அட்டூழியங்களை கீழே படியுங்கள்!
(1) மாணவர்கள், பெண்கள்,முதியோர் உட்பட 63 வல்வை மக்கள் அமைதிப் படையால் கூரிய கத்திகளால்.வெட்டியும்,துப்பாக்கிகளால் சுட்டும் கொல்லப் பட்டிருந்தனர்..பலர் உயிரோடு கொழுத்தப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது!
(2)–சுமார் 15 கு மேற்பட்ட திருமணமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர்.
(3)–50 கு மேற்பட்ட இளம் பெண்கள் மான பங்கப் படுத்தப் பட்டிருந்தனர்.
(4)–நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.
(5)–நூற்றுக் கணக்கான பொது மக்களின் வீடுகள் எரிக்கப் பட்டிருந்தன..
(6)–40 கு மேற்பட்ட கடைகள் எரித்துச் சூறையாடப் பட்டிருந்தன.
(6)–150 கு மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் அழிக்கப் பட்டிருந்தன.
(7)–பொது மக்களின் உடைமைகளான தொலைக் காட்சிப் பெட்டிகள் ,டெக்குகள் ,மற்றும் விலை மதிக்க முடியாத உடைமைகள்,பணம், நகை என்பன அமைதிப் படையால் கொள்ளை அடிக்கப் பட்டிருந்தன.
(8)–வடமராச்சியின் சிறந்த நூலகங்களில் ஒன்றான வல்வை பொது நூலகம் எரித்து சாம்பராக்கப் பட்டிருந்தது.அதில் இருந்த 1000 கணக்கான நூல்கள் அந்தச் சாம்பரில் மிதந்தன.அந்த நூலகத்தில் மாட்டப் பட்டிருந்த காந்தி,நேதாஜி,இந்திராகாந்திபோன்றவர்களும், கொழுத்தப் பட்டவர்களில் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது.
அட காந்தியை,நேதாஜி சுபாஷ் சந்திரபோசைக் கூட மதிக்காத அக்கிரமக் காரர்கள் அமைதிப் படையில் இருந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு ஏன் ஒவ்வொரு இந்தியனும் அப்போது தற்கொலை செய்யவில்லை? என்பது எனக்குத் தெரியவில்லை..
எங்கு பார்த்தாலும் சடலங்கள்,அழிவுகள்,நெருப்புச் சுவாலைகள்,என்று மூன்று நாட்களுக்கு பின்னர் ஊர் திரும்பிய வல்வை மக்கள் ஒப்பாரி வைத்துக் கதறினர் .நிலத்தில் விழுந்து புரண்டனர்.விம்மினர் ..தேம்பினர் ..உறவுகளின் உடலங்களைத் தேடி உயிரோடு இருந்த ஜீவன்கள் தெருத் தெருவாய் அலைந்தன.கணவனின் உடலைத் தேடி மனைவியும்,மனைவியின் உடலைத் தேடி கணவனும், பிள்ளைகளின் உடல்களைத் தேடி பெற்றோரும் கதறிக் கதறி அழுத காட்சியை அப்போது கடற் குருவிகள் மடுமே அங்கு படம் பிடித்தன..அவற்றுக்கு வாய் இருந்தால் பக்கம் பக்கமாக அந்தச் சோக நிகழ்வுகளை எடுத்துச் சொல்லியிருக்கும்.
ஆம்..’வல்வைப் படுகொலைகள்’ இந்திய அமைதிப் படையால், தமிழர்களின் முதுகுகளில்,முதுகு எலும்புகளில் பொறிக்கப் பட்ட பாசிச முத்திரை ஆகும்..அன்று வாழ்ந்த தமிழ் இனமும் ,இன்று வாழும் தமிழ் இனமும்,எதிர் கால தமிழ் இனமும், என்றும் மறக்க முடியாத-மறக்க கூடாத சோக கீதங்கள் அவை!

மு.வே.யோகேஸ்வரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக