பவித்ரா நந்தகுமார் எழுதிய அக்கா உன் முகம் காட்டு அண்ணா உன் ஆயுதம் கொடு!

அக்கா உன் முகம் காட்டு
அண்ணா உன் ஆயுதம் கொடு!

அக்கா உன் முகம் காட்டு
மரணத்தின் நேரமறிந்தும்
உன் புண்ணைகையை
முத்தமிட
அண்ணா உன் ஆயுதம் கொடு
உன் திடம் நானும் கொள்ள
மரணத்தை மென்று
சுவைத்து எமக்கு
வழிகாட்டி உதிரம்
உறைய வைத்த
செங்கடல் சின்னங்களே
உமக்கு ஒரு நாள்
போதாது அர்ச்சனை
செய்ய
உளத்தினில் தினம் வைத்து
கோடி பூஜை செய்யப்படும்
மனித வடிவ
தெய்வங்கள் நீங்கள்

தாயவள் என்ன
நினைத்தாளோ
உறவுகள் என்ன
நினைத்தனரோ
அதுவும் அறியாய்
தலைவன் தாயாக
உமக்கு இறுதி உணவு
கொடுத்து
முதுகில் தட்டி
வருடும் போது
உன் அகமும்
முகமும் மலரும்
விடுதலை நாளை அல்ல
இன்றே என்று
அங்கே கறுப்பாக
உன் உடை மட்டுமல்ல
எதிரியின் கருவறையும்
அழியும் காட்சி
மனதினில் ஓடும்
இந்த உறுதி யாருக்கு
வரும் 


அங்கைய கன்னியவள்
பாதை காட்டி வைத்தாள்
மில்லர் அவன்
எதிரியை நடுங்க வைத்தான்
அங்கே எழுதப்பட்ட
கரும்புலி சரித்திரம்
ஈழம் விடியும் வரை
எதிரொலிக்கும்
எதிரியவன் சாவான்
அங்கே கரும்புலி
காவியத்தில்
புது ஒளி பிரசவிக்கும்
பீரங்கிகளாக!!!


காற்றே விடை கொடு
தமிழ் நிலமே விடை கொடு
தலைவன் வளர்த்த
பிள்ளைகளின் தரிசனம்
காண விடைகொடு
மண்ணுக்குள் உறங்கும்
விதைகளை விருட்சம்
காண விடை கொடு
தாய் நிலமே

துயிலும் இல்லமில்லை
உமக்கு பெயரும்
இல்லை
உமக்கு முகமும் இல்லை
சரித்திரம் மட்டுமே
எழுதப்படுகிறது
விடுதலை வரலாற்றில்
கந்தகம் சுமந்த
இருதயங்களே
கரிய உடை
தரித்த துடித்த
இரத்தங்களே
ஏங்குகிறோம் நாமும்
உமைப்போல் விடுதலை
வரும் என்று...

ஆக்கம்    பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக