சரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…!


கேணல் சங்கர் வீரமறைவின் போது தலைவர் மனதிலிருந்து உதித்தவை…
மனிதன் பிறக்கும்போதே சாவும் அவனோடு சேர்ந்து பிறப்பெடுக்கிறது. அந்தச் சாவின் பிடியிலிருந்து யாரும் தப்பிவிட முடியாது யாரும் ஓடியொழிந்துகொள்ளவும் முடியாது.
அது வாழ்வின் ஒரு நிகழ்வாக, என்றோ ஒருநாள் எதிர்கொள்ளப்படவேண்டியதுதான். இப்படிக்கூறி நாம் சங்கர் அண்ணையுடைய சாவிற்கு ஆறுதல் கூறமுடியாது.
அவரது சாவு தனி மனிதனின் மரணம் அன்று. ஒரு சகாப்தத்தின் முடிவும் அன்று. சரித்திரம் மறக்காத சோகநிகழ்வு. தமிழினத்தின் தேசிய ஆன்மாவை உசுப்பிவிட்ட நிகழ்வு. சுதந்திர வேட்கையைக் கொழுந்து விட்டெரியச் செய்த நிகழ்வு.
சங்கர் அண்ணையினது வாழ்வுப் பாதை வித்தியாசமானது. தனித்துவமானது. மனிதர்களது இருப்பைவிட மனிதர்களது செயற்பாடுதான் முக்கியமானது என வாழ்ந்து காட்டியவர். அவர் அறிமுகமான நாள் முதல் அவருக்குள் ஓர் அபூர்வ சக்தி இருப்பதைக் கண்டேன். அது அவரது அனுபவத் திரட்சியாகவும் ஆளுமை வீச்சாகவும் எல்லோரையும் ஈர்த்தது. அது எமக்கிடையே ஆழமான நட்பாக வளர்ந்தது.
எமது விடுதலை இயக்கம் நெருப்பாறுகளைத் தாண்டிய வேளைகளிலும் புயல்களையும் பூகம்பங்களையும் சமாளித்த வேளைகளிலும் எரிமலைகளை எதிர்த்து நின்று எதிர்நீச்சல் போட்ட வேளைகளிலும் அவர் என்னோடு உறுதுணையாக நின்றார்.
விதையாக இடப்பட்ட எமது இயக்கம் முளைத்து, துளிர்த்து, பெரு விருட்சமாக எழுந்து நிற்கின்ற ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் அவர் உறுதியாகப் பங்கெடுத்தார்.
அவர் கண்ணியமானவர். நேர்மையுள்ளவர். இரக்க சிந்தனையாளர். எல்லாவற்ருக்கும் மேலாக ஓர் இலட்சியவாதி. அந்த இலட்சியவாதியினது இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. அந்த இலட்சியவாதியினது வழியிலேயே அவரது குடும்பமும் ஒன்றிப் போயிருந்தது. அந்த வகையில் அவரது உடன்பிறப்புகளில் மூவர் இந்த விடுதலைப் போரிற்கு தம்மை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
அவரது மூளையத்தின் மென்மையான இழைகளில் தவழ்ந்த உள்ளத்து உணர்வுகளை நான் அறிவேன். அவரது பசுமையான நெஞ்சத்திற் பற்றி எரிந்துகொண்டிருந்த விடுதலை வேட்கையும் நான் அறிவேன்.
அவர் உண்மையில் இறந்துவிடவில்லை. எமது விடுதலை வரலாற்றின் உயிர்மூச்சாகத் தொடர்ந்து வாழ்கிறார்.
’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக