எழுக தமிழ் வெற்றிகரமாக மட்டுநகரில் தமது தடத்தினை பதித்திருக்கிறது. எம் மக்கள் உணர்வால் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை இன்று நிரூபித்திருக்கின்றனர்.
இதன் போது பங்களிப்பு செய்த அரசியல் தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதோது சமூக இணைய தளங்களில் பங்களிப்பும் ஏராளம். அவர்களுக்கும் நன்றிகள். கௌரவ விக்னேஸ்வரன் ஐயா உற்பட கஜேந்திரகுமார், வியாழேந்திரன் போன்றோரையும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
கால நிலையையும் பாராது குழந்தைகள் முதல் வயோதிபர் வரை இந்த உணர்வு மிக்க பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இதனை பார்க்கும் போது கடந்த காலங்கள் பொங்கு தமிழாக எழுச்சி பெற்றவை நினைவு வருகிறது. தமிழினம் உறங்கவில்லை என்பதை நினைக்க பெருமையே
மட்டு நகரில் மாபெரும் பேரணியாக எழுக தமிழை மாற்றுவோம். அனைவரும் வாரீர்!
எமது உடமைகளுக்கான, எம் சுதந்திரத்திற்கான குரலாக எழுக தமிழ் எம் மண்ணில். அனைவரும் ஒன்றாக ஒரே அணியாக உத்வேகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.


யாழ்ப்பாணத்திலிருந்து எழுகதமிழிற்கான போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் அறியத்தந்துள்ளனர்.
சுயமுனைப்பில் உணர்வாளர்கள் இந்த பயண ஒழுங்கை மேற்கொண்டிருப்பதாகவும்,

இரண்டு அல்லது மூன்று பஸ் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் எனவும், எழுக தமிழ் முடிந்த கையோடு மீண்டும் யாழ் திரும்பும் எனவும் அறியத்தந்துள்ளனர்.

ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது தங்களுக்கான பயணச்செலவை அளித்து உதவுமாறு கேட்கப்படுகின்றனர்.
Bring your own food and for others too !!
தொடர்பு இலக்கம் பயணப்பாதை,
கிளிநொச்சி வவுனியாவில் உள்ளவர்கள் ஏறக்கூடிய வசதிகள் பற்றி தெரியவந்தால் , உடனடியாக பதிவேற்றம் செய்யப்ப்டும்
1957 மாசித்திங்கள் 8 ஆம் நாள் தமிழீழம் என்ற தாயகம் தமிழனுக்கு கட்டாயமானது என்றும் அதற்கு அறநெறி முறைகளோ அமைதிவழிகளோ என்றும் உதவாது என்பதை புரிய வைத்த நாள். ஆயுதம் ஒன்றே எமக்கான தன்னாட்சி தனியுரிமை தாயகத்தை எமக்கு பெற்றுத்தரும் என்பதில் இளையவர்கள் உறுதி கொள்ள முதன்மை பெற்றதும் ஆயுதப்போராட்டத்தை கோடிட்டு காட்டியதும் இன்றைய நாள் தான்.
இலங்கையின் 1956இல் ஆட்சியைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கையில் எடுத்த ஆயுதம் 'சிங்கள-பௌத்த தேசியம்'. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பொறுத்தவரையில் "தனிசிங்களச்சட்டம்" என்று கூறப்படும் தனி சிங்கள மொழிமட்டும் அரசகரும மொழி என்ற புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி பெரிய வெற்றியை அடைந்தார்.1948ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என நம்பஇக்கை தரப்பட்டிருந்தது.
1949ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில்கூட இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
ஆனால் 1956 தேர்தலையொட்டி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது 'சிங்கள-பௌத்த' தேசியவாதக் கொள்கையைப் பலப்படுத்துவதற்காக சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனம் செய்வேன் என சூளுரைத்தார். அதை அவர் ஆட்சிக்கு வந்தவுடனே நிறைவேற்றினார்.
இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட புள்ளியாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 'தனிச் சிங்களச் சட்டம்' அமைந்தது.
பண்டாரநாயக்கவின் புத்துணர்ச்சியுடன் எழுச்சிபெற்ற 'சிங்கள-பௌத்த' தேசியவாதம் ' எமது விடுதலைக்கான நியாயப்பாட்டை எடுத்துக்காட்டியது.
இந்த சட்டமே அன்றைய இளையவர்களை முதன்முதலாக தமிழ்தேசிய விடுதலைக்காக ஆயுதவழி பாதையை தேர்ந்தெடுக்க இனங்காட்டியது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பொழுது பிரித்தானியாவின் நேரடிக்கண்காணிப்புக்களுடன் உருவாக்கப்பட்டிருந்த யாப்புக்களின் சரத்துக்களை எல்லாம் மீறியே இந்த சட்டத்தை நிறைவேற்றினார் பண்டாரநாயக்க...
அதாவது இந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சோல்பரி யாப்பில் 29(2) சரத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றது. 29(2) சரத்தானது மதச் சுதந்திரத்தைத் தடுக்கும் எந்தவொரு சட்டத்தையும்; ஒரு குறிப்பிட்ட இனத்தை, சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறைபாடுகளுக்கு அல்லது தடைகளுக்கு உட்படுத்தும் எந்தவொரு சட்டத்தையும்; அல்லது குறிப்பிட்ட இனத்தை, சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏதேனும் சலுகை அல்லது சாதகத்தன்மை அளிக்கும் எந்தவொரு சட்டத்தையும், எந்தவொரு மதநிறுவனத்தின் யாப்பையும் அதன் இசைவின்றி மாற்றும் எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் உருவாக்க முடியாது என்கிறது. இதை விட முக்கியமாக 29(2) சரத்தை மீறி இவ்வாறு குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்படுமானால் அவை வலுவற்ற சட்டமாகும் என 29(3) சரத்து கூறியது.
ஆனால் இவற்றை எல்லாம் மீறி தனிச்சிங்களச்சட்டம் என்ற புதிய வரைவு ஒன்றை தமிழினத்துக்கு எதிராக அறிமுகப்படுத்தி சிங்கள இனத்துக்கு சாதகமான விளைவுகளை உருவாக்கினார் குமாரதுங்க. இதன்மூலம் தமிழ் இனத்துக்கு பாரிய துரோகத்தை செய்தார்.
இதை எதிர்த்த அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை செய்தனர். ஆனால் போராட்டத்தை முடக்குவதற்கு அன்றைய அரசு பல முறைகளை கையாண்டது. உண்ணாநிலை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட இடங்கள் வன்முறையாளரால் அடித்து நொருக்கப்பட்டு போராட்டக்காறர்கள் அடித்து வதைக்கப்பட்டனர். அவர்களின் வாய்களில் சிறுநீரை கழித்து சிங்கள ஆட்சியாளர்களின் படு கோர முகத்தை வெளிக்காட்டினர் வன்முறையாளர்கள். அன்று தமிழர் தலைவர்களாக இருந்த ஜீ.ஜீ பொன்னம்பலம், சுந்தரலிங்கம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் எதுவுமே பலன்றறு போனது
எமது தலமைகளோ இந்தியாவை மட்டும் நம்பி இருந்தார்கள். இந்திய அரசு இலங்கை விவகாரங்களில் தலையிட்டு தமக்கு பெரும் சாதக பதிலை தரும் என்று நம்பினார்கள். ஆனால் 1958 ஆம் ஆண்டு கொழும்பில் வசித்த தமிழர்கள் வன்முறையாளர்களால் அடித்து வதைக்கப்பட்டு இனக்கருவறுப்பு ஆரம்பித்த போது, இனக்கலவரம் என்ற பெயரில் தார்ப்பீப்பாக்களில் தமிழ் குழந்தைகள் உருகிய போது இன்று எப்படி மௌனித்து இருக்கிறதோ அதே பொலவே இந்திய அரசு சத்தமற்று மௌனித்து கிடந்தது.
இந்த காலங்களில் பிறந்து நான்கு வயதாகி இருந்த தமிழீழ தேசியத்தலைவர் இவற்றை எல்லாம் கற்றுக் கொள்ளக்கூடிய வயது வந்த போது மொழிச்சட்டம் அதன் பின்பான இனக்கருவறுப்பு என்பதை எல்லாம் அறிந்து திடமாகினார். இங்கே ஏற்படுத்திய முதல் தாக்கம் அதன் பின்பான காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கான பாதையை திறந்து விட தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்மை அதி உன்னத இலட்சியத்துக்கான பாதையில் ஈடுபடுத்தி கொண்டார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். தமதுயிரை துச்சமென மதித்து தம் மொழிக்காக ஆயிரம் ஆயிரம் இளையவர்கள் விழி மூடி போனார்கள். தமது உன்னத இலட்சியமாம் தனித்தாயகத்துக்கான போராட்டத்தில் சிங்களத்தை எதிர்த்து நின்ற வேங்கைகள் விழி மூடினார்கள்...
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை விடிகின்ற தமிழாகி விழுதாகி நிற்கும் இந்த மாவீரர்களுக்கெல்லாம் இன்றைய நாளே போராட்ட பாதையை இனங்காட்டிய நாளாகும்..
2005 மாசித்திங்கள் 7 ஆம் நாள் இலங்கை அரசு தான் சண்டைப்பிரியர்கள் என்று உறுதிப்படுத்திய நாள். தமிழீழத்திற்கு பெரும் சோகத்தை தந்து தனக்கும் நடந்த துயரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உள்ளுக்குள் வெற்றி பெற்றதாக நகைத்துக் கொண்ட நாள்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்களத்தின் ரணில் அரசுக்கும் இடையில் சர்வதேச நாடுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட சண்டை நிறுத்தம் 2002 ஆம் வருடம் ஆரம்பித்த போது தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது இராணுவ ஆளுகைக்குள் இருந்த பகுதிகளிலும், விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் அரசியல் வேலைகளுக்காக சென்று வரலாம் என்ற ஒரு நடைமுறையை சண்டைநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து ஒன்று ஏற்று கொண்டிருந்தது. இதன் பிரகாரம் நோர்வே நாட்டின் தலமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த காலத்தில் போராளிகள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அரசியல் வேலைகளோடு நின்றனர்.
அதில் ஒருவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பொறுப்பாளனாக மக்கள் பணியில் இருந்த போராளி தான் லெப்டினன் கேணல் கௌசல்யன். தமிழீழ அரசிற்குரிய நிர்வாக கட்டமைப்புக்குட்பட்ட அரசியற்துறை சார்ந்த அனைத்து நிர்வாகங்களும் சரியான வகையில் மட்டு அம்பாறை மாவட்டங்களில் நடைமுறையில் செயற்படுத்த வேண்டுமென உறுதியாக நின்றவன் சமாதான காலப்பகுதியில் மக்களுக்கான உச்சமான அரசியல்ப் பணியினை செயற்ப்படுத்த அரசியல்துறைக்கு உட்பட்ட தமிழீழத்தின் அனைத்துக் கட்டமைப்புக்களையும் மட்டக்களப்புக்குள் நகர்த்தி மக்களுக்கான அரசியற் பணியை முன்னெடுத்தார்.
அரசியல்துறை மட்டுமல்லாது புலனாய்வுத்துறை தமிழீழ காவற்துறை, நீதி நிர்வாகத்துறை, நிதித்துறை, படைத்துறை, அனைத்துலக தொடர்பகம் என்று எந்த துறை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் தளபதிகளுடன் இணைந்து தாயாக விடுதலை வீச்சை விரைவு படுத்துவதில் முக்கிய போராளியாகி இருந்தவர். அதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.
இந்த காலத்தில் தமிழ், முஸ்லீம் மக்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களை வேறுபாடுகள் அற்று ஒன்றுபடுத்துவதிலும் வெற்றி காணத்துடித்து செயற்பட்டார். அதை விட எமது அமைப்பின் மீது கறை படிந்த பல துரோகத்தனங்கள் முளை விட்டு வளர்வதும் அதை உடைத்தெறிவதும் வரலாறு. அந்த வரிசையில் தென் தமிழீழத்தில் 2003 ஆம் வருட காலத்தில் நடந்த துரோகத்தனத்துக்கு பின் எமது போராட்டம் மீது சர்வதேச அளவில் ஏற்பட்ட அதிர்ப்த்தியை களைய வேண்டிய பாரிய பொறுப்பும் கௌசல்யனுக்கு வந்திருந்தது.
இதை எல்லாம் உடைத்து பயணித்த அரசியல் போராளிக்கு எதிர்பார்க்காத பெரும் அதிர்ச்சியும் சுமையும் கடல் மடியில் சுனாமி என்ற உருவத்தில் வந்து சேர்ந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் கடலால் வலுவிழந்து போன போது, இந்திய இலங்கை அரசாங்கங்கள் கூட திணறிக்கொண்டிருந்த மீள்கட்டுமான, ஆற்றுகைப்படுத்தல் பணிகளை உலகம் வியக்கும் வகையில் விடுதலைப்புலிகள் செய்து முடித்திருந்தனர். அதில் முக்கிய பங்கு கௌசல்யனுக்கு உண்டு.
இத்தகைய ஆளுமை மிக்க போராளிக்கு தேசியத் தலைவரின் பணியகத்தில் இருந்து அழைப்பு வந்திருந்த போது தனது போராளிகள் மூவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு ஆகியோருடன் வன்னி சென்று தலைவரையும் அரசியல்துறை பொறுப்பாளரையும் சந்தித்து விடைபெறுகிறார். வவுனியா இராணுவ தடைமுகாமில் போராளிகளின் பயணிப்பை உறுதிப்படுத்தி கொள்கிறது சிங்கள படை.
தடைமுகாமில் இருந்து திட்டமிட்ட தொடர் கண்காணிப்பு வளையத்துக்குள் இவர்களது வாகனத்தை வைத்திருக்கிறது சிங்கள புலனாய்வு பிரிவு. வெலிகந்தையில் வைத்து இவர்களை நயவஞ்சகமாக கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிடப்பட்டு சிங்கள புலனாய்வாளர்களும் தேச விரோத கும்பலும் வெலிக்கந்தையில் காத்து கிடக்கின்றனர்.
நிராயுத பணிகளாக வந்த கௌசல்யனின் அணி எதுவும் அறியாதவர்களாய் பயணத்தை தொடர, கோழைத்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் அவர்களை.
மண்ணின் விடுதலைக்காக லெப்.கேணல் கௌசல்யன்,மேஜேர் புகழவன்(சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜேர் செந்தமிழன்(தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2லெப்.விதிமாறன்(சிவபாதம் மதன் செட்டிபாளையம்) ஆகிய வேங்கைகள் அந்த இடத்திலையே வீரச்சவடைய வாகன சாரதி எஸ்.விநாயக மூர்த்தியும் சாவடைகிறார். மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு படுகாயமடைந்து அடுத்த நாள் மருத்துவமனையில் சாவடைகிறார்....
இந்த சம்பவத்தை சர்வதேசமே அதிர்சசியோடு பார்ததது... ஐ.நா செயலராக இருந்த கோபிஅனான் கண்டனத்தினூடாக சிங்களத்தின் மிலேச்சத்தனத்தை வெளியிட்டிருந்தார்...
கவிமகன்


1998.02.02 கிளிநொச்சி நகரை கைப்பற்றி அதனூடாக சிங்களத்தின் சுதந்திர தினக்கொண்டாட்டத்திற்காக மக்களை கண்டி வீதியால் கொண்டுவருவோம் என்று இறுமாப்பு கொண்ட சிங்களத்தை கிளிநொச்சி நகரை அண்மிக்க கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. தமிழீழத்தை கட்டி எழுப்புவதற்காக தமது இன்னுயிர்களை கொடுத்து எங்கள் தேசத்தின் இருப்பை நிலை நிறுத்தினார்கள் மானமாவீரர்கள்.

சிங்களத்தின் அனைத்து திட்டங்களையும் உடைத்தெறியும் வல்லமை மிக்க படைத்தளபதிகள் அனைவரும் தமது அணிகளோடு காத்திருந்தார்கள். கிளிநொச்சி பரந்தன் படைமுகாமை தாக்கி அழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி சிங்களத்தின் எண்ணத்தில் தீயை வைத்தனர்.
சண்டை எமக்கு சாதகமற்று போனாலும் சிங்களத்துக்கு புலிகள் பலம் இன்னும் குறையவில்லை நாம் இன்றும் பலமானவர்களாகவே இருக்கின்றோம். உன் அதீத பாதுகாப்பு வளையங்களை தாண்டி உன் பிடரியில் கைவைக்க எம்மால் முடியும் என்ற செய்தியை சொல்லி சென்ற சண்டையாக இது அமைந்தது. இச்சண்டையில் 150 போராளிகளுக்கு மேல் களச்சாவு அடைந்தனர்.

இதில் மேஜர் பகலவன் என்ற மாவீரனும் ஒருவன். பெயருக்கேற்ற பண்புள்ளவன் தமிழீழ கலையுணர்வுகளுக்கு வெளிச்சமூட்டும் நல்ல ஒளியாளனாக பகலவன் மிளிர்ந்தான்.

சிறுவயது முதல் தமிழ் தேசியம் மீது பற்று கொண்டவனாகவும் கலைகள் மீது ஈடுபாடு கொண்டவனாகவும், நல்ல அரசியல் பேச்சாளனாகவும் இருந்தான் நாகராசா பாஸ்கரன் என்ற இளைஞன். பள்ளி காலத்தில் தமிழின் கலைகள் அத்தனையையும் வெளிக்காட்டும் ஒரு நற்பண்புள்ள மாணவன். கறுத்த உருவமெனிலும் வெண்மையான உள்ளம் கொண்டவன். வடமராட்சி மண்ணின் கரவெட்டி மண் பெற்றெடுத்த நல்ல புதல்வனாக நாகராசா மணவிணையரின் மகனாக தவழ்ந்தான் பாஸ்கரன். இரு தங்கைகள் இரு தம்பிகளின் அண்ணனாக பிறந்தாலும், தமிழீழ மக்கள் அனைவரினதும் நேசத்துக்குரிய அண்ணனாகவே வளர்ந்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு விழுதாக தன்னை மாற்ற வேண்டிய தேவையை பள்ளிக்காலத்தில் உணர்ந்து கொண்டான்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியான சூசை அவர்களின் கீழ் வடமராட்சி பகுதி நடவடிக்கைகள் இருந்த காலம் தொட்டு பள்ளி மாணவனாக கலைத்திறன்களூடாக தனது போராட்ட பணிகளை செய்ய தொடங்கினான். திரைப்படம் தொடக்கம் மேடைப்பேச்சு, கவியாடல் , நாடகங்கள் என்று தனது போராட்ட பணிகளை கலைகளூடாக செய்து வந்தவன் அதோடு மட்டும் இருந்து விடாது தனது இயக்க வாழ்க்கையை கழுத்தில் நஞ்சை கட்டிய போராளியாக தொடங்க ஆசை கொண்டான். சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நெறிப்படுத்தலில் பகலவன் என்ற பெயரைத்தாங்கி விடுதலை பாரத்தை சுமக்கும் பெரு விருட்சத்தின் விழுதாக பகலவன் மாறிப்போனான்.

சிறிது காலத்திலேயே கலைபன்பாட்டுக்கழகத்தின் வடமராட்சி கோட்ட பொறுப்பாளனாகி எமது கலையுணர்வுகளை வளர்க்கும் பெரும் பணியை செய்து வந்தான் பகலவன். தமிழீழ கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை அண்ண தொடக்கம் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணை முதல் தேசியத்தலைவர் வரை கலையுணர்வுகள் மூலம் கவனத்தை பெற்றவனாக தனது பணியில் இருந்தான் பகலவன். அடிக்கடி தேசியத்தலமை தனிப்பட்ட ரீதியில் சந்திப்புக்கள் மூலம் கலை பண்பாட்டை கட்டி எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்திய போதெல்லாம் அதற்கு செயல் வடிவம் கொடுத்த பெரு வேங்கை.

சிங்களத்தின் கைகளில் யாழ்ப்பாணம் வீழ்ந்த போது நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்தும் வன்னிக்கு நகர்த்திய புலிகளின் அணியில் பகலவனும் நகர்ந்திருந்தான். பரப்புரைகள், ஆற்றுகைப்படுத்தல்கள் என்று வன்னியில் தொடர்ந்த இயக்கப்பணிகள் அனைத்திலும் ஒரு மக்கள் சேவையாளனாக மக்களோடு மக்களாக நிற்கும் தோழனாக நின்றான். அவனை சிறந்த கலையாளனாக இனங்காட்டியது அவன் நடித்த திரைப்படமான "திசைகள்வெளிக்கும்" சமூகவியல் முழு நீள திரைப்படம். இவ்வாறான கலையுணர்வு மிக்க போராளி சண்டைக்கான தருணத்தை எதிர்பார்த்திருந்த போது,

கிளிநொச்சி பரந்தன் இராணுவ முகாம் தகர்ப்பு நடவடிக்கைகளுக்காக அணிகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆயுத தளபாட மருத்துவ வழங்கல் அணி ஒன்றுக்கான வேலை இவரிடம் கொடுக்கப்படுகிறது. சண்டை அணிகளுக்கு தேவையான ஆயுத வழங்கல் மற்றும் மருத்தவ வழங்கல் போன்றவற்றை ஒழுங்கு படுத்துதலே இவர்களின் பணி.

ஒரு சண்டைக்கு தேவையான வளங்கள் தடைப்படும் போது அந்த சண்டை அணி வென்றதான சரித்திரம் உலக போரியலில் இல்லை. அதே போலவே எமது படையணிகளுக்கு தேவையானவற்றை தேவையான இடங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி அவர்களுக்கான சகல வளங்களையும் நிறைவுபடுத்த வேண்டிய முக்கிய பணி இவர்களுடையது. ஒரு ஆயுத ரவைப்பெட்டி கிடைக்க வேண்டி இடத்திற்கு போய் சேரவில்லை என்றாலும் அந்த சண்டையின் போக்கே மாறிவிடும் அத்தகைய முக்கிய பணியில் இருக்கும் வழங்கல் அணியினரே எதிரியின் முக்கிய இலக்குகளும் கூட. அத்தகைய முக்கிய பொறுப்புடன் சண்டைக்கு சென்ற யான் பகலவன்.

சண்டை தொடங்கி குறிகிய நேரத்திலையே களத்தில் இருந்து பின் கொண்டுவர வேண்டிய காயமடைந்த போராளிகளை நகர்த்தி கொண்டு மருத்துவ தேவைகளை நிறைவேற்றி கொண்டிருந்த போது, நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போல சிங்களத்தின் விமான மற்றும் எறிகணை செலுத்திகள் இவர்களது இலக்கை இனங்காணுகின்றன.

ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாக மருத்துவ உதவிகள் மற்றும் வழங்கல் அணியினர் மீது சிங்களம் பெரும் தாக்குதல் ஒன்றை செய்கிறது. அங்கு வீழ்ந்து வெடித்த சிங்களத்தின் எறிகணைகள் மற்றும் விமானங்களின் குண்டு சிதறல்களை தனது உடலில் தாங்கிய தன் அணியனரை மீட்க முன்னரங்கப்பகுதில் இருந்து வந்த பகலவனும் சண்டை வெற்றிக்காக தம் தோழர்களோடு விழி மூடிப்போனான். தாகம் தமிழீழம் என்று தனது நெஞ்சில் சுமந்த வீர வேங்கை தன் கனவுகளை கிளிநொச்சி மண்ணில் விதைத்து தமிழீழ தேசத்துக்காக விழி மூடிப் போனான்....
நினைவு பகிர்வு கவிமகன்.இ
02.02.2017
1998 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழீழத்தின் கழுத்துப்பகுதியாக இருக்கும் ஆனையிறவு படை முகாமை நோக்கிய தாக்குதல் ஒன்று நடைபெற்றுருந்தது. வருகின்ற சுதந்திர தினத்தைக்கு மக்களை கிளிநொச்சி ஊடாக கண்டி வீதியில் இருந்து கொண்டுவருவோம் என்று கூறி "சத்ஜெய "படை நடவடிக்கையை எடுத்து வந்த சிங்களத்தின் முதுகெலும்புடைக்க திட்டமிடப்பட்ட சண்டை ஒன்றுக்கான வலுவேற்றும் சண்டையாக இன்றைய நாள் ஆனையிறவுப்படை முகாமுக்குள் பெரும் பூகம்பத்தை விளைவிக்க கரும்புலிகள் அணி ஒன்று உள்நகர்ந்திருந்தது.
லெப்டினன் கேணல் சுபேசன் அல்லது கிள்ளிவளவன் தலமையில் கரும்புலிகளான மேஜர் குமுதன், மேஜர் ஜெயராணி, மேஜர் ஆசா, மேஜர் மங்கை, கப்டன் குமரேஸ், கப்டன் இந்து, கப்டன் நளாயினி, கப்டன் தனா கப்டன் உமையாள், கப்டன் செங்கதிர் ஆகிய வேங்கைகள் தாக்குதலுக்கான கட்டளைக்காக காத்திருந்தனர். கட்டளைப்பீடத்தில் இருந்து கட்டளை வந்த போது எரிமலையாக குமுறிய கரிய புலிகள் ஆனையிறவு தளத்தை துவம்சம் செய்தனர்.
சிங்களப்படையின் முதுகெலும்பை உடைக்க ஆனையிறவு படைத்தளத்தில் ருத்ர தாண்டவம் ஆடனர் கரும்புலிகள். தாம் வெடித்து இனங்காத்த மாவீரங்களாக ஆனார்கள். தமிழீழ தேசத்துக்காக இரத்த சிதறல்களாக காற்றோடு கலந்து விட்டார்கள் எம் கரிய புலிகள். அவர்களின் உயிர் தியாகம் எம் தமிழீழத்தை உயிர்ப்பிக்கும் என்பது திண்ணம்...
சண்டை நடந்து கொண்டிருக்க கொடுக்கப்பட்ட இலக்குகளான ஆட்லறி தளத்தினை முற்றுமுழுதாக தகர்த்தெறிந்த கரும்புலிகள் அடுத்த நகர்வுக்காக காத்திருந்தனர். ஆனால் கரும்புலிகளை தளம் திரும்புமாறு கட்டளை வந்த போது, வீரச்சாவடைந்த தமது தோழர்களை நினைவோடு சுமந்து கொண்டு தளம் திரும்புகின்றனர்.
அணித்தலைவனான சுபேசன் நெஞ்சிலும் காலிலும் பாரிய விழுப்புண் பட்டிருந்ததால் அவனால் நகர முடியாத நிலை ஆனால் அவனை தூக்கி கொண்டு செல்ல முனைகின்றனர் அணியினர். " இல்ல என்னை விட்டிட்டு நீங்க போங்கோ" அவன் கத்துகிறான். இல்ல உங்கள விட்டு போக மாட்டம். அவனை விட்டு செல்ல விரும்பாத அணி அவனிடம் கெஞ்சுகிறது. "நீங்கள் நிறைய சாதிக்க வேண்டியவர்கள் என்னை தூக்கி செல்வதால் தாமதமாகி நீங்களும் காயப்பட வேண்டாம் அண்ணனை கவனமா பாருங்கோ நான் சார்சர் இழுக்கப் போறன். அவன் கட்டளை இடுகிறான். அவனை விட்டு பிரிந்த சில வினாடிகளில் அதிரந்த வெடியோசை ஊடாக சுபேசனின் ஓங்கி ஒலித்த குரலும் ஓய்ந்து போனது. அணி தளம் மீளகிறது... அணியின் இருந்து களத்திடை வெடித்த 11 கரும்புலிமறவர்களின் தியாகத்தை சுமந்தவாறு


களுவாஞ்சிக்குடிபிரதேசங்களில் “எழுகதமிழ்” பரப்புரை
மட்டு நகரில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று செவ்வாய்கிழமை
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் கொக்கட்டிச்சோலை நகர்களில் “எழுக தமிழ் “பரப்புரை அணியினர் ஈடுபட்டனர். இவ் பரப்புரையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதலைவர் செயலாலர் அங்கததவர்கள் என பெரும்பங்களிபுடன் செயல்லாற்றினார்கள்.மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் அவர்களும் இணைந்திருந்தனர்.

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்…
கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)
மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)
கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)
கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)
கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)
கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.
வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன.
கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன்.
இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார்.
எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன.
தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது.
வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.
துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாகனத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார்.
அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.
இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.
யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ்.
கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார்.
இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.
தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார்.
சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது.
அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார்.
களத்தில், எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது.
அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்.
யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.
கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.
இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும்.
அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது.
போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.
இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
-ஈழம் ரஞ்சன்-
கிட்டண்ணா எங்கள் ஆச்சரியம்...
https://www.youtube.com/watch?v=nbFKD7uyklQ
தளராத துணிவோடு களமாடினாய்
https://www.youtube.com/watch?v=XaIIFcMtuzs
கேணல் கிட்டுவும் அவர் ஒன்பது தோழர்களும் 1993
https://www.youtube.com/watch?v=s8He6qloBgI&t=185s
கேணல் கிட்டு அண்ணா நினைவாக ..
https://www.youtube.com/watch?v=SkEi5wbtNqU&t=7s
 கனடிய மண்ணுக்கு வருகை தந்து கடந்த ஒன்றரை வாரமாக தமிழ் மக்களையும் கனடிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து வந்த வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்கள் இன்றைய நாளில் தனது முதலாவது கனடிய மண்ணிற்கான வருகையை முடித்து கொண்டு தாயகத்திற்கு திரும்பி செல்ல முன்பாக இறுதி மக்கள் சந்திப்புடனான உரையை மக்களுக்கு ஆற்றியதோடு மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.

 ரவேற்பு நடனம் என்பனவற்றை தொடர்ந்து முதல்வர் உரை இடம்பெற்றது.
தொடர்ச்சியாக பல சந்திப்புகள் ஊடாக மக்களை சந்தித்து வந்தவர் என்ற வகையில் இன்றைய நாளில் தனது பயணத்தின் முன்பாக மக்களை ஆவலாக உடல் நிலை சுகயீனமுற்ற நிலையிலும் சந்தித்த அவரை மக்களும் பிரியாவிடை கொடுத்து மதிப்போடு அனுப்பி வைத்தார்கள்.
கனடிய மண்ணிற்கான தனது வருகை அதன் பயன்கள் மக்களை சந்தித்ததன் கருத்து உள்வாங்கல்கள், கனடிய அரசியல் பிரமுகர்கள் சந்திப்பின் பயன்கள் என பல்வேறு விடயங்களும் இன்றைய முதல்வரின் உரையில் எடுத்து வரப்பட்டது.
மக்களின் கேள்விகளை துண்டுகள் கொடுத்து எழுதி பெற்று கொண்ட ஏற்பாட்டாளர்கள் அவற்றில் இருந்து தமக்கு பிடித்த 10 கேள்விகளுக்கு மட்டுமே பதில்களை அவரிடம் கேட்டிருந்தார்கள்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் அவர்கள் உண்மையாக தெளிவாக பதில் சொல்லி இருந்தாலும் பதிலளிக்கப்படாத என் கேள்வியான
” தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்கள் மூடப்பட்டு ஆண்டு கணக்காக வாடி வதைக்கப்படும் ஈழ அகதிகள் விடுதலையாக வேண்டும் என்ற விவகாரத்தில் ஏன் எமது தலைவர்கள் எவரும் இந்திய இலங்கை அரசுகளுக்கு அழுத்தத்தை கொடுத்து முகாம் சிறப்பு முகாம்களில் தமிழகத்தில் வேதனைப்படும் உறவுங்களை விடுவிக்க குரல் கொடுத்து சிறப்பு முகாம்களை மூட செய்யவில்லை?” என நான் எழுதி கேட்ட என் கேள்வி அவரது செவிக்கு சென்றடைய வாசிக்கப்படவே இல்லை என்பது வேதனைக்குரிய விடயம். ஆனால் அவர் உடல் நிலை காரணமாக கூறப்பட்டது. இதே போல் கட்டு காட்டாக கேள்விகள் மக்களிடம் இருந்து கேட்கப்பட்ட பொழுதும் அவை யாவற்றுக்கும் பதில் எடுத்து வர வாய்ப்பு இருக்கவில்லை.
குறுகிய காலத்தில் மக்களை முதல்வர் சந்திக்க பல சந்திப்புகளை ஒழுங்கமைத்திருந்தார்கள் ஏற்பாட்டு குழுவினர். ஆனால் அதே போல் சில முக்கிய சந்திப்புகளை ஏற்படுத்த தவறியமையும் குறையாக பார்க்கப்பட்டது.
முதலமைச்சர் அவர்கள் மக்களிடம் பலவற்றை மனம் விட்டு பேசியிருந்தார். மக்களும் அவருக்கு மதிப்பளித்திருந்தார்கள்.
மக்களை சந்தித்து மக்களோடு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, சமூகம், அரசியல் சார் பல்வேறு கருத்து பகிர்வுகளை வெளிப்படையாக உணர்த்திய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பேசப்பட்ட குறைகளை தீர்த்து வைக்க செயல்கள்கட்டமைப்புகளை உருவாக்கி திட்டங்கள் வகுத்து தருவதாக உறுதி பூண்டார்.
தமிழ் மக்களுக்குள் ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய முதலமைச்சர் அவர்கள் சமகால தமிழ் மக்களின் இன்னல்களை சர்வதேச சமூகத்திற்கு குறிப்பாக கனடிய அரசியல் தலைவர்களுக்கு எடுத்து கூறி புலத்தில் வாழும் தமிழர்களின் போராட்டத்திற்கு வலுசேர்த்த்துள்ளார்.

விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது. நின்றும்நகர்ந்தும் அதி வேகமான பாய்ச்சலுடனும் தேங்கியும் பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்று தேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்துவிடுகின்றன.அத்தனை அர்ப்பணமும், ஈகமும்,தியாகமும் அவர்களின் வரலாறு முழுதும் நிறைந்தே கிடக்கும்.அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான்.
தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி-ஆயுதங்களுக்கு பொறுப்பாளன்முதலாவது யாழ்மாவட்ட பொறுப்பாளன் மத்தியகுழு உறுப்பினன் என்று விடுதலைக்கான பல பாரிய பொறுப்புகளை தனது முதுகில் சுமந்திருந்த இந்த மாவீரன் தமிழீழமண்ணில் ஆகுதியாகி 32 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
பண்டிதரை பற்றிய நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது என்பதே ஒரு சுகமான சுவாரசியம்தான்.
அவன் தனது பதினாறுவயதின் இறுதிலேயே தமிழீழவிடுதலை என்பதில் ஆழமான ஈடுபாடு கொண்டவனாக இருந்திருக்கிறான். விடுதலைக்கான பாடல்களை எழுதி தனது பாடசாலை கொப்பியில் அழகாக வைத்திருப்பதில் ஆரம்பித்து விடுதலைக்காக ஆயுதபோராட்டஅமைப்பை ஆரம்பித்திருந்த தேசியதலைவரை 1977ல் சந்தித்து தன்னையும் தலைவருடன் இணைத்துகொள்ள வேண்டுகோள் விடுத்ததுவரை அவனது ஆரம்பம் இருந்திருக்கிறது.
எடுத்தவுடன் எவரையும் தன்னுடன் இணைத்துக்கொள்ளாமல் அவர்களை கவனித்து அவர்களின் உறுதியை சோதித்து அதன்பின்னரே தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தலைவரின் இயல்புக்கேற்பவே முதன்முதலாக தலைவருக்கும் பண்டிதருக்குமான அந்த சந்திப்பு இருந்திருக்கிறது.ஒரு கைத்துப்பாக்கியின் விசையை இழுக்கமுடியாத அளவுக்கு மிகவும் மெலிந்தவனாகவும் இருந்த பண்டிதரின் நெஞ்சுக்குள் இருந்த விடுதலைக்காக போராடும் உறுதி என்பது மலையளவு உயர்ந்ததாக அப்போதே இருந்ததை கவனித்த தலைவர் பண்டிதரை சிறிது காலம் வீட்டில் சென்று இருக்கும்படியும் நேரம்வரும்போது அமைப்பில் இணைத்துக்கொள்வதாகவும் உறுதிசொல்லி திருப்பி அனுப்பபட்டிருந்தான்.
மாதக்கணக்கில் ஆரம்பித்து சிலவேளைகளில் வருடக்கணக்குகூட இப்படி காத்திருக்கவேண்டிவரும்.ஆனால் இந்த காத்திருப்பு காலத்தில்தான் ஒவ்வொருவரையும் தலைவர் அடையாளம்காணுவார்.உணர்ச்சிவசப்பட்டு விடுதலைக்கு வருபவர்களில் இருந்து உணர்வுபெற்று விடுதலைக்காக வருபவர்களை வடிகட்டி எடுக்கும் தலைவரின் ஆரம்பகால இந்த அணுகுமுறைதான் விடுதலைப்புலிகளின் தோற்றத்துக்கும் உறுதியான அத்திவாரத்துக்கும் வலுச்சேர்த்தது 78ல் பண்டிதரும் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டான்.
எந்தநேரமும் வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்த்மாநோயுடன் அவன் விடுதலைக்காக முழுநேரமானான்.
அவன் நிறையவே தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டான்.அவரிடம் இருந்து எளிமை.அவரிடம் இருந்தே ரகசியம்பேணும் தன்மை.அவரிடம் இருந்தே மக்களை ஆழமாக நேசிக்கும் பண்பு..என்று எல்லாமே அவரைப்போலவே அவனும்..எல்லாவற்றிலும் பார்க்க தலைவரிடத்தில் இருந்த நேர்மைதான் அவனில் இன்னும் ஆழமாக புகுந்துகொண்டது..!
இதனை அவதானித்த தலைவர் 1980 ஆரம்பத்தில் அவனிடம் இயக்கத்தின் முழு நிதி பொறுப்பையும் கொடுத்திருந்தார்.எல்லோருக்கும் மாதம் முதல்திகதியில் அந்த மாதத்துக்கான கொடுப்பனவு பண்டிதரால் கொடுக்கப்பட்டுவிடும்.தினசரி சாப்பாட்டுசெலவு பத்துரூபாவீதம் கணக்கு பார்த்துகொடுக்கப்படும் இந்த பணத்துக்கான செலவுகணக்கு மாதமுடிவில் பண்டிரிடம் கொடுத்தால்தான் மறுமாதத்துக்கான பணம் பெறமுடியும்.தலைவர்உட்பட அனைவருக்கும் இதே வரையறையைதான் பண்டிதர் வகுத்திருந்தான்.
ஒவ்வொருவரின் கணக்குதுண்டுகளையும் பார்த்து அதில் இருக்கும் அதிகமான செலவுகளை குறைப்பது சம்பந்தமாக அவர்களுடன் அவன் கதைக்கும் பாங்கு இன்னும் நினைவுக்குள் நிற்கின்றது.
பகல்முழுதும் சைக்கிளில் அங்கும் இங்கும் என்று இயக்கவேலைக்களுக்காகவும்மக்களை சந்திப்பதற்காகவும் அதிகாலைமுதல் நள்ளிரவுவரை ஓடிக்கொண்டே இருப்பான்.இரவு அவன் தங்குமிடத்தில் அனைவரும் தூங்கியபின்னரும் இவன் தனித்து ஒரு குப்பிவிளக்கு ஒளியிலோமெல்லிய வெளிச்சத்திலோ அன்றைய கணக்குகளை எழுதிக்கொண்டிருப்பான்.
மிகவேகமாகவே பண்டிதர் அனைவரதும் தேவைகளையும் அனைவரதும் கோரிக்கைகளையும் உள்வாங்கி இயக்கத்தை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான்.
நிதியை திறம்பட கையாண்ட அவனிடம் மீண்டும் ஒரு பொறுப்பை தலைவர் 80களின் ஆரம்பத்தில் வழங்குகிறார்.அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தினதும் பொறுப்பாளனாகிறான் பண்டிதர்.
நிதிபொறுப்பு என்பதைவிட ஆயிரம்மடங்கு கடினமானது ஆயுதபொறுப்பு.அந்தநேரம் இருந்த ஆயுதங்களில் ஒருபகுதி எந்தநேரமும் நிலத்துகீழாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.அப்படி புதைத்துவைத்திருக்கும் ஆயுதங்களின் விபரங்கள்அவை வைக்கப்பட்;ட திகதிமீண்டும் எடுத்து மீளவும் சரிபார்க்கப்பட்டு வைக்கப்படவேண்டிய திகதி என்று அனைத்தும் அவனால் மிகவும் அழகானமுறையில் எழுதப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.ஆனால் என்ன.. அதை வேறுயாருமே படிக்கமுடியாது.இத்தகைய ஆவணம் எதிரியின் கையில் கிடைத்தால் அனைத்து ஆயுதங்களும் பிடிபட்டுவிடும் என்பதால் பண்டிதர் ஒரு இரகசிய சங்கேத எழுத்துமுறையை கண்டுபிடித்தான் அதில்தான் எழுதுவான்.இதனை படிக்ககூடியவர்களாக இயக்கத்தில் தலைவரும்,லெப்.சங்கரும்,ரங்சன்லாலாவுமே விளங்கினார்கள்.
அதனைபோலவே இயக்கத்தின் முதலாவது ஆவணப்பொறுப்பாளனாகவும் அவனே இருந்திருக்கிறான்.விடுதலைஅமைப்பு சம்பந்தமான செய்திகள்தமிழர்கள் மீதான சிங்களபேரினவாத தாக்குதல்கள் செய்திகள் என்று அனைத்தையும் வெட்டிஎடுத்து அழகாக தொகுத்து ஒட்டிஅவன்தான் இதனை ஆரம்பித்தான்.
1983 இனப்படுகொலைநிகழ்வுகளின் பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும்ஆதரவால் அங்கு எமது விடுதலைஇயக்கத்தின் முக்கிய கட்டமைப்பு நகர்ந்தபோது எமது விடுதலைப்போராட்டம் பற்றிய பழைய செய்திகளை ஆர்வத்துடன் கேட்ட பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுப்பதற்கு பண்டிதர் சேகரித்துவைத்திருந்த ஆவணங்கள்தான் மிகவும் உதவின.
ஒரு பெரும் விடுதலைஅமைப்பை கட்டிவளர்ப்பதில் தலைவருக்கு மிகவும் நெருக்கமாக நின்று உழைத்தவன் அவன்.
இப்படி இந்த விடுதலைக்கான பெரும் பயணத்தின் முதல் பயணவீரர்களின் வரிசையில் முன்னோடியாக நின்ற அந்த வீரன் 1985ம்ஆண்டு ஜனவரி 9ம்திகதி அதிகாலையில் அச்சுவேலிப்பகுதியில் நடந்த ஒரு முற்றுகைக்குள் விட்டுவந்த ஆவணங்களை எடுக்க மீண்டும் அதே முற்றுகைக்குள் நுழைந்து வீரச்சாவடைந்தான்.
தூக்கம்,சோர்வுஉணவு என்று எல்லாம் மறந்து எந்நேரமும் இயங்கிவந்தவன் அவன்.அவனுக்குதான் தினமும் எத்தனை வேலைகள்.கடலால் வந்திறங்கும் சாமான்களை இறக்கி சரியான இடத்தில் வைக்கவேண்டுமா..அங்கும் பண்டிதர்தான்...
தென்தமிழீழத்தில் இருந்துவரும் ஒரு நிதி சம்பந்தமானதோ ஆயுதம் சம்பந்தமானதோ அதுவும் அவன்தான் கவனித்தான்...
போராளிகளுக்கு சப்பாத்துகள் கிழிந்துவிட்டனவா..கூப்பிடு பண்டிதரை...
ஒருசிறு முகாம் அமைக்கவேண்டுமா அதுவும் அவனே போய்பார்த்து சரி செய்யவேண்டும்...
தமிழகத்தில் ஒரு பெரும்தொகை அமைப்புக்கு வழங்கப்படுகிறதா...
பண்டிதர்தான் அங்கும் சென்று அதனை கணக்கில் வைக்கவேண்டும்...
இத்தனையும் செய்துகொண்டு அவன் ஒரு பழைய சாரத்துடனும்சிலவேளைகளில் கசங்கிய ரவுசர் உடனும் திரிந்து எளிமையானவனாகவே இருந்திருக்கிறான்.
மிக எளிமையான அவனுக்குள் இருந்ததுவோ மிக ஆழமான விடுதலை இலட்சியம்.
அது என்றும் சாகாது.
திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நாளா – மேஜர் வஞ்சியின்பன் ஆகியோரின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.
சமாதானத்தில் எமக்கிருந்த அக்கறையாலும், ஆர்வத்தாலும் எமது தாக்குதல்களை தரையில் மட்டுமல்ல, கடலிலும் ஒப்பந்த விதிகளை மீறாமல் நடைமுறைப்படுத்தினோம்.
திருமலையில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்ய முற்பட்டவேளை தம்மையும் அழித்து, டோறா எனப்படும் சிறிலங்கா கடற்படையின் அதிவேக தாக்குதற் கலங்களில், திருமலைத் துறைமுகத்தின் விசேட பாதுகாப்பிற்கான பொறிமுறைகளைக் கொண்ட கலத்தை மூழ்கடித்து, அதிலிருந்த 2 கடற்படை அதிகாரிகள் உட்பட 14 கடற்படையினர் கொல்லப்பட தங்கள் உயிர்களை வெடியாக்கிய லெப் கேணல் நளா, மேஜர் வஞ்சி ஆகிய எம் வீரமறவர்களுக்கு இன்றைய நாளில் தலைவணங்குகின்றோம்.
கேணல் சாள்ஸ் உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களிற்கு எங்கள் வீரவணக்கம்.