ஊர் அடங்கியபின்னர் ஊர்வலம் போன விடுதலைப் புலிகள்...!

அந்தக் கால சண்டைகளும் காவலரண் வாழ்வும்!!!
போராட்ட காலத்தில் நினைவில் இருந்து அழியாத நினைவுகள்
அரியாலை புலிகள் முகாம்..1986!
அப்போது அந்த முகாமில்10-15 போராளிகள்தான் இருந்தோம்..2-3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள நாவற்குழி.இராணுவ முகாமை காவல் காத்து இராணுவத்தை யாழ்ப்பாணத்துக்குள் வர விடாமல் பார்க்க வேண்டியதே எமது முக்கிய பணி.அதற்காக அரியாலைப் பக்கம் இரு இடங்களில் எங்கள் காவல் அரண்கள் போடப்பட்டிருந்தன.ஒவ்வொரு காவல் அரணிலும் 2-3 போராளிகள் இருந்தனர்.அவ்வளவுதான்!..4-5 தானியங்கிகள்..ஓர் ஜி.பி.எம்.,இவற்றைத் தவிர, எம் மன உறுதியும் எமது ஆயுதங்களில் ஒன்றாக அப்போது இருந்தது..
நாம் யாழ்ப்பாண பக்கம் உள்ள காவல் அரணில் தற்செயலாக கண் உறங்கிவிட்டால்,அரியாலைப் பக்கம் இராணுவம் நுழைந்து ஆயிரக் கணக்கான எமது மக்களைக் கொன்று சித்திரவதை செய்து இரவு வேளைகளில் அழித்து விடுவார்கள்.அதே வேளை தென்மராட்சிப் பக்கம் 'கேடியின்'படைப் பிரிவினர் காவல் காத்து வந்தனர்.
குறிப்பாகச் சொல்வதென்றால் அரியாலை மக்களின் உயிர் எங்கள் கையில்தான் அப்போது இருந்தது.அடிக்கடி நடை பயணமாக இரவு வேளைகளில் புறப்பட்டு அரியாலைப் பக்கம்,இராணுவம் நுழைய முயன்ற சமரில் அவ்வப்போது, பல போராளிகள் வீரச் சாவடைந்திருக்கின்றனர்.
நான் திருகோண மலையில் இருந்து மாற்றலாகி வந்து முதன் முதலாக அரியாலையில்தான் நின்றேன்..காவல் அரணுக்கு வெளியிலும் எங்கள் முகாம் ஒன்று இருந்தது.சிலவேளை யாராவது துரோகிகள் துப்புக் கொடுத்து எமது முகாமை இரவு வேளைகளில் இராணுவம் தாக்க முற் படும்போது,முழுப் பலத்துடன் எதிர்த் தாக்குதல் நடாத்த எம்மால் முடியாது.காரணம் அப்போது போதிய ஆயுதங்கள் அங்கே இல்லை..ஆனால் நாவற்குழி முகாமில் இருந்து வெளியேறும் இராணுவம்,அரியாலைப் பக்கம் நடையாகவோ,அல்லது வாகனங்களிலோ வந்தால்,அதற்கு ஏற்றவாறு வாகன நிலக் கண்ணிவெடிகளையும்,கால் நிலக் கண்ணி வெடிகளையும் புதைத்து வைத்திருந்தோம்..அதில் இராணுவம் மாட்டுபட்டால் சட்னிதான்'!
எனினும் ஒவ்வொரு அங்குலம்,அங்குலமாகப் புதைக்க முடியுமா என்ன?அதனால்தான் காவல் அரணுக்கு வெளியே மக்களின் குடியிருப்புகளோடு சேர்ந்தவாறு ஒரு முகாம் எப்போதும் இருந்தது. .அதில் இரவு நேர காவலை வலுப்படுத்தியிருந்தோம்.ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் இருவர் வீதம் தொடர்ச்சியாக ஆயுதத்துடன் அங்கே காவலில் ஈடுபடிருந்தோம்..
அது எல்லோருக்கும் தெரிந்த முகாம் என்பதால்,இரவு 11.30 கு பின்னர் எல்லோரும் எங்கள் மூட்டை முடிச்சுகளையும்,ஆயுதங்களையும் சுமந்துகொண்டு வீதி வீதியாக ஊர்வலம்போய், ஒரு பொது மகனின் வீட்டில் அன்று இரவு தங்கிவிடுவோம்.அது எப்போதும் எமது நெருங்கிய ஆதரவாளரின் வீடாகவே இருக்கும்.
அங்கும் தொடர்ச்சியாக காவல் காப்போம்.ஒருநாள் எமது முகாம் மீது யாரோ ஓர் துரோகி கொடுத்த துப்பின் மூலம்,இலங்கை வான் படையின் விமானங்கள்,பகல் வேளையில், சுற்றி வளைத்து தாக்க,உலங்கு வானூர்திகளில் ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் இராணுவம் அதிரடியாக தரை இறங்கி எமது முகாமை நோக்கி நகரத் தொடங்கியது.
நாமோ இங்கே குண்டுவீச்சு விமானகளின் தாக்குதலுக்கும்,பல உலங்கு வானூர்திகளின் தாக்குதலுக்கும் முகம் கொடுத்துப் போராடிக் கொண்டிருந்தோம்.
எமது கவனத்தை வான்பரப்பில் திருப்பி விட்டுத்தான் இராணுவம் மறைமுகமான எமது காவல் அரணுக்கு வெகு தூரத்தில் தரை இறங்கி எம்மைச் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றது .அப்போது நாம் இரு முனைத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கவேண்டியிருந்தது..தரை மூலமும் வான் மூலமும் ஓர் சிறிய முகாமுக்கு அருகே பயங்கரச் சண்டை நடை பெற்றது.அந்த வேளையில் 2-3 கிலோ மீட்டர் தூரத்தில்,யாழ் மாவட்டச் செயலகத்தில் இருந்த தளபதி கிட்டு அண்ணாவும் ,அவரது போராளிகளும்,எமது உதவிக்கு விரைந்து வந்தனர்.சில நிமிடங்களே நீடித்த அந்தச் சண்டையில் எமது படைப்பிரிவுகள் ஒன்று சேர்ந்து விட்டதை உணர்ந்த இராணுவம், வந்த வழியில் பின் நோக்கிச் சென்று விட்டது.ஆயினும் ஓர் திறமை மிகு போராளியை நாம் அந்தச் சண்டையில் பறிகொடுத்துவிட்டோம் என்பதே மிகுந்த வேதனை அளித்த விடயமாகும்.லெப்.கார்த்திக்தான் அது.என்னுடன் மலையில் பயிற்சி பெற்ற ஓர் போராளி!..எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சிதரும் ஓர் சிறந்த வீரன் அவன்.
அன்றுமட்டும் நாம் இராணுவத்தின் அதிரடியை தடுக்காமல் விட்டிருந்தால்,எம்மையும் அழித்து நூற்றுக் கணக்கான மக்களையும் அழித்திருப்பார்கள் சிங்கள இராணுவத்தினர்.
புலிகள் மக்களைக் காப்பவர்கள்..என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர்கள்..கார்த்திக்கின் உடலை மக்கள் பார்வைக்காக வைத்தபோது அப்பகுதி மக்கள் கதறிக் கதறி அழுதனர்.எங்களைக் காக்க உன்னை கொடுத்து விட்டாயே ஐயா" என்று அவர்கள் சொல்லிச் சொல்லி அழுதார்கள்..இதுதான் அன்றைய காலம்..புலிகளுக்கு ஒவ்வொரு நாளும் அரியாலை மக்கள் உணவு வகைகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.சிலவேளை அளவுக்கு அதிகமாக அவை இருக்கும்.சாப்பாடு என்றால் மிக தரமாகவும் சுவையாகவும் இருக்கும்..
நினைவில் இருந்து அழியாத நாட்களில் ஒன்று இது!:::::பாரிஷ் வல்லவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக