தமிழர் இதயங்களில் உறைந்திருக்கும் தமிழ்ச்செல்வன் அண்ணா !!


பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் வீற்றிருக்கின்ற நித்தியப் புன்னகை அழகன். தமிழ்மக்களின் விடுதலைக் கனவைச் சுமந்து விடுதலைப் போரில் பயணித்த ஆயுத – அரசியல் போராளியான இவர் ஏழுவருட காலங்கள் வரையில் ஆயுதப் போராளியாகவும், இருபத்தியொரு வருட காலம் அரசியல் போராளியாகவும் உலகத் தமிழ்மக்கள் மத்தியில் வலம் வந்தவர்.
விடுதலைப் போராட்டத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தனக்கிட்ட பொறுப்பைத் தமிழினத்தின் கட்டளையாக ஏற்று புயலாகச் செயற்பட்டதோர் இராஜதந்திரப் போராளியான தினேஷ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்ச்செல்வன் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிகாலைவேளைப் பொழுதில் விமானப் படையினரின் குண்டு வீச்சுத் தாக்குதலில் அவரது உயிர் பறிக்கப்பட்டது. இன்று நித்தியப் புன்னகை அழகனின் எட்டாவது ஆண்டு நினைவு நாளாகும். தினேஷாகப் பதினெட்டு வயதில் இளைஞனாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு ஆயுதப் போராளியானார்.
ஒரு போராளியாக உருவெடுத்த தமிழ்ச்செல்வனின் தாக்குதல் திறமைகள், செயல்கள் யாவும் ஒருங்கே அமைந்திருந்தமையால் விடுதலைப் புலிகளின் தலைவரால் இவர் மீது பெரும் மதிப்பு இருந்தது.
தமிழ்ச்செல்வன் ஏழு வருடகால ஆயுதப் போராளியாகப் பரிணமித்தவர். விடுதலைப் புலிகளின் தலைவரால் விடுதலைப் போரில் அரசியல்துறையை முக்கியத்துவப்படுத்துவதற்கு திறமையான தீர்க்கதரிசனமிக்க, ஆளுமைகொண்ட போராளியாகத் தமிழ்ச்செல்வனைக் கண்டு கொண்ட பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ்ச்செல்வன் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் இவரது அரசியல் பணியானது 2007 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி வரையில் விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு பரிமாணங்களை ஏற்படுத்தியிருந்தது.
ஏனெனில் உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப் பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தபோது, அரசியல் பணியை துணிச்சலோடு முன்னெடுக்க வேண்டிய சூழல், ஆளுமை அவருக்கு அமைந்திருந்தது. தமிழ்ச்செல்வன் தான் பொறுப்பேற்றுக் கொண்ட அரசியல் பணியை மேற்கொள்வதென்பது சாதாரணமானதாக இருக்கவில்லை. தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழுகின்ற மக்கள் மத்தியில் அரசியல் பணியை ஆற்ற வேண்டுமென்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. அதனைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்துச் சென்றார்.
விடுதலை இயக்கத்தின் கொள்கை, இலட்சியம் என்பவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் அவர் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியிருந்தார். 1995 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரணதுங்கவின் ஆட்சி யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மக்களை இடம்பெயர வேண்டியதோர் நிலையை உருவாக்கியது. சுமார் ஐந்து லட்சம் மக்கள் ஒரே இரவில் வன்னியை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்தநேரத்தில் தமிழ்ச்செல்வன் அதனை எதிர்கொண்டார். தமிழ்ச்செல்வனின் எதற்கும் கலங்காத மனமும், பிரச்சினைகளைச் சுமூகமாக அணுகும் திறனும் இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்ற மக்களுக்கு ஆறுதலை அளித்திருந்தது.
உறுதியையும், பலத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்துக்கு எதிரான அனைத்துலகத்தின் இராஜதந்திரங்களுக்கு நேரடியாக முகம் கொடுப்பது, இலட்சியம் மற்றும் கொள்கைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பது, பற்றுறுதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொள்வது, மக்களை ஒன்றுபடுத்துவது போன்ற கட்டமைப்புகளை உருவாக்கி அதன் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் செயல் வடிவம் கொடுப்பது எனப்பரந்துபட்ட வேலைத்திட்டங்களை தமிழ்ச்செல்வனால் முன்னெடுக்க வேண்டிய தேவையுமிருந்தது.
வேலைத்திட்டங்களுக்குத் தலைமை தாங்கியதுடன் அத்தனை விடயங்களையும் தீவிரமாகவும் செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளையும் வெற்றிகரமாகச் செயற்படுத்தினார். இந்தக் காலப்பகுதிகளில் மிகப்பெரிய போர், இடப்பெயர்வு, இயற்கை அழிவுகள் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்த வேளைகளில் அதனையும் செய்து முடிக்கின்ற பணியும் அவரது கைகளில் தங்கியிருந்தது. ஒரு புறத்தில் போர். மறு பக்கத்தில் அரசியற்பணி. இவ்விரண்டுக்கும் நடுவில் தமிழ்ச்செல்வன் வன்னிப்பெரு நிலப்பரப்பை அரசியல் ஆளுமைக்குள் உட்புகுத்தி தென்னிலங்கை அரசியல்வாதிகளை மிரள வைத்தவர். தமிழ்ச் செல்வனின் நிதானமானபோக்கு, மென்மையான அணுகுமுறை அவரிடம் காணப்பட்ட செயல் பூர்வமான சிந்தனைகள், அரவணைத்துச் செல்லுகின்ற மனப்பான்மை, மனதில் உதிர்ந்து வருகின்ற கருத்தாற்றல்கள் அனைத்தும் மறுவடிவமாக தமிழ்ச்செல்வன் இயக்க அரசியல் தளத்தில் மட்டுமன்றி உலகத் தமிழ்மக்கள் மத்தியிலும் உச்சத்தைத் தொட்டு நின்றார்.
யாழ்.மாவட்ட மக்களின் இடப்பெயர்வுகளையும் 2004 டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை இடர்களையும் எதிர்கொண்ட தமிழ்ச்செல்வன் தென்னிலங்கை அரசியல் நகர்வுக்கு சமமாக இந்த விடயங்களை சமமாக எண்ணியபடி அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டி துரிதகதியில் மீள் நிலைக்குக் கொண்டுவருகின்ற செயற்றிட்டத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்டு அனைத்துலக சமூகத்தின் பாராட்டுதலைப் பெற்றிருந்த தமிழ்ச்செல்வன் மீது அனைத்துலக சமூகம் தமது கவனத்தை ஈர்த்துக் கொண்டது. தமிழ்ச்செல்வனது அரசியல் தளத்தையும் தமிழ் மக்களின் மீதான ஈடுபாட்டையும் அரசியல் ரீதியிலான கொள்கைத் திட்டங்களையும், பணிகளையும் சந்திரிகா அரசு பார்த்து வியந்ததில் ஆச்சரியமில்லை. தமிழ்ச்செல்வனின் ஒவ்வொரு செயற்பாடுகளும் சாதனையாகவே அமைந்திருந்தது.
தமிழ்ச்செல்வனின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு மத்தியில் அரசியல் துறைக்கான நிர்வாகக் கட்டமைப்புகள் சீர்குலையாமலிருந்தன. ஆகவே அனைத்துப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டபோது தடங்கல்களுக்கு இடமின்றி முழுமை பெற்றிருந்தது. ஒர் இறைமை கொண்ட அரசானது இடர்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகளின் பொறுப்புகளும் கடமைகளும் எப்படி அமைந்துள்ளதோ அதேபோலவே அந்தப் பணிகளை மேற்கொண்ட நிலையில் இலங்கையை விஞ்சும் அளவுக்கு ஆளுமை கொண்டவராக உயர்ந்து நின்றார். தமிழ்ச்செல்வனின் துரிதகால செயற்பாடுகளே பாதிக்கப்பட்ட அத்தனை மக்களையும் துரித கதியில் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆக்கபூர்வமாக இருந்தது மட்டுமன்றி விடுதலைப் போராட்டத்துக்கும் வலுவாக அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது பாதிக்காலமானது மக்களோடு மட்டும் சேர்ந்ததாகவும் அர்ப்பணிப்புள்ளதாகவும் இருந்தது.
பின்னர் இவரது அரசியற்பணி இராஜதந்திர நகர்வுகளையும் நோக்கிச் செல்லும் காலகட்டத்துக்குள்ளும் தள்ளப்பட்டார். அதற்குக் காரணம் தமிழ்ச்செல்வனின் அரசியற் பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியே இராஜதந்திர செயற்பாடுகளில் இறங்க வைத்தது. 1987 ஆம் ஆண்டுப் பகுதியில் இந்தியாவிலிருந்து புலிகளின் இயக்கத் தலைவர் நாடு திரும்பியிருந்தார். இயக்க வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். மகளிர்களுக்கான அரசியற் பிரிவு உண்டாக்கப்பட்டது. அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. உலகில் யாராலும் எங்கிருந்தாயினும் தமிழ் மக்களை வரவேற்று உள்வாங்கித் தொடர் போரினால் மக்கள் பட்ட அவலத்துக்குச் சிகிச்சையாக, புத்தூக்கமாக அதனை மாற்றிப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையிருந்தது.
ஆனால் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கக் கூடியதாக, தோற்கடித்துவிடக் கூடிய சூழ்ச்சியாக இது உருவெடுக்க விடாமல் அதனிடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய தேவையுமிருந்தது. இந்த இரண்டுக்குமிடையில் ஒரு சமன்பாட்டைக் கண்டறிந்து அதனை நிர்வகிப்பதற்கான கட்டமைப்புக்களை உருவாக்கி அதை வெற்றிகரமாகக் கையாண்ட தமிழ்ச்செல்வன் ஒரு திறமையாளனாவார். 2004 ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா – ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாகக் கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களைத் துரித கதியில் மீள் நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது, அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டுதலையும் கவனத்தையும், தமிழர் தாயகத்தை நோக்கி ஈர்த்த பெருமை அவருக்குண்டு.
இதன் பின்னர் தமிழ்ச்செல்வனின் ராஜதந்திர அணுகுமுறைகளை சர்வதேசம் வித்தியாசமாக உணர்ந்து கொண்டது. விட்டுக் கொடுப்புகள் என்பதை சாதாரணமாகத் தமிழ்ச்செல்வன் கையாளவில்லை. இணைந்து செயற்படுதல் என்ற போர்வையில் சிங்கள அரசின் மடியில் விழவில்லை. காலடிக்கு போகவுமில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை ஓர் அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவர சர்வதேசம் விரிக்க முயற்சித்த சதி வலைக்குள் சிக்கிக் கொள்ளலாம் என்ற போலிக் கனவையும் உடைத்துச் சிங்கள அரசுக்கும், சர்வதேசத்துக்கும் தெளிவுபடுத்தியவர். சர்வதேச இராஜதந்திரங்களுக்கு ஈடுகொடுத்து கொள்கையையும், இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும், பாதுகாக்கின்ற இராஜதந்திரப் போராளியாகவும் இருந்துள்ளார்.
தமிழ்ச்செல்வனிடம் இராஜதந்திரக் குணாதிசயங்கள் இயல்பாகவே இருந்தன. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகளுக்கும் – சிங்கள அரசுக்கும் பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பல தடவைகளில் பேச்சு வார்த்தைகளில் கலந்துகொண்டிருந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் அந்த இடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வனால் நிரப்பப்பட்டது.
ஜெனிவா – 02 பேச்சுவார்த்தை அரச தரப்புப் பேச்சுத் தரப்பினர் சந்தோசத்துடன் அங்கு சென்றிருந்தனர். காரணம் புலிகள் தரப்பில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் சாவடைந்துவிட்டமையினால் பேச்சுவார்த்தை பலவீனமானதாக இருக்கும். புலிகள் தரப்பை எளிதில் மடக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தனர் அரச தரப்பினர். அன்றைய பேச்சுவார்த்தைக்குப் புலிகளின் சார்பில் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பேச்சின் நிகழ்ச்சிநிரல் முன் கூட்டியே தீர்மானிக்கப்படாமல் நடக்கப்போகும் பேச்சுவார்த்தையாகும். அப்படி நடந்த பேச்சுவார்த்தையில் தமிழ்ச்செல்வனின் சாதுரியமும், துணிச்சலும், எல்லோர் மத்தியில் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பேச்சு வார்த்தைகள் இருதரப்பினருக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அரச தரப்பினர்கள் கடும் போக்கில் புலிகள் தரப்பினர் மீது நடந்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பித்தபோது அரச தரப்பினர் கடும் விவாதங்களை முன்வைக்க இருந்தவேளையில் அரசியல் பிரச்சினைகள் குறித்தே பேசவேண்டும் என்ற போது தமிழ்ச்செல்வன் சம்மதிக்காத நிலையில் அரச தரப்பினரைப் பார்த்துப் போலியாகவே சமாதானம் சம்பந்தமாகப் பேச்சைக் கையாளுகின்றனர் என்றார்.
அரச தரப்பினர் அன்றாடப் பிரச்சினையைத் தவிர்த்து அரசியல் பிரச்சினைக்கான தீர்வு பற்றியே பேச வேண்டும் என்றார். புலிகள் அரசியல் பிரச்சினைகள் சம்பந்தமாகப் பேசுவதற்குச் சம்மதிக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகள் தமிழீழக் கொள்கையிலிருந்து விலகாதவர்கள். அதிலிருந்து இம்மியளவேணும் விலகாத புலிகள் எப்படி அரசியல் பிரச்சினைகள் சம்பந்தமாகப் பேசுவார்கள் என்ற போலித்தனத்துடன் நம்பியிருந்த அரச தரப்பினரிடம் பந்தை வீசியிருந்த தமிழ்ச்செல்வன் உங்களால் கொண்டுவரப்பட்ட அரசியல் தீர்வு யோசனையை முன்வையுங்கள் பேசத்தயாராகவுள்ளோம் என்றவுடன் அரச தரப்புக்குழுவுக்கு தர்மசங்கடமாகவிருந்தது. தமிழ்ச்செல்வன் ஏவிய அம்பு அரச தரப்பினரை நோகவைத்தது. எந்தவொரு தீர்வு முயற்சி சம்பந்தமான விடயங்களையும் அரச தரப்புப் கொண்டு வரவில்லை. எங்களது முன்மொழிவு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை நாங்கள் முன்வைத்துள்ளோம். அரசியல் தீர்வு பற்றிபேச வந்த உங்களது முன்மொழிவு எங்கே? என்று கேட்டு அரச தரப்பினரை திக்குமுக்காட வைத்தார்.
அரச தரப்பினர் இப்போதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். விரைவில் தயாரித்துவிடுவோம் என்றனர். அதற்கு தமிழ்ச்செல்வன் தயாரித்துக்கொண்டு வாருங்கள் அடுத்த பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பற்றி பேசலாம் திகதி தருகின்றோம் என்று கூறினார். தமிழ்ச்செல்வன் ஜெனிவா பேச்சு வார்த்தையின் போது, அரச தரப்பினரை சர்வதேச அரங்கில் அரசின் போலித் திரையைக் கிழித்தெறிந்து உண்மைநிலையை விளக்கியிருந்தார். அரச தரப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கின்ற முயற்சிகளில் சிறிதளவேணும் நாட்டம் கொள்ளாது ஏமாற்றவே பார்க்கின்றனர். அவர்களது நோக்கமும் அதுவாகும் என அந்த இடத்தில் தெரிவித்திருந்தார். அரசு விரித்த பொறியில் அரச தரப்பினரை விழவைத்த இராஜதந்திரியாகவே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தார். அதுவே இறுதிப் பேச்சுவார்த்தையாகவுமிருந்தது. தமிழ்ச்செல்வன் மீது சுமத்தப்பட்டிருந்த பணிகள் சிக்கல் மிகுந்ததாக இருந்தாலும் அந்தப் பணிகள் யாவும் சுமையாக அவருக்குத் தெரியவில்லை. அரசியல் பலம்மிக்க சக்தியாக புலிகளின் தலைமை தமிழ்ச்செல்வனை வளர்த்தெடுத்திருந்தது.
பேச்சு மேசையயன்றாலும் சரி, ஊடகவியலாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி, புன்னகையில் மலரும் அவரது முகம் ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தி நிற்கும். ஓர் அரசியற்றுறைப் பொறுப்பாளராகவோ அல்லது ஒரு போராளியாகவோ எவரும் அவரைக் கணிப்பதில்லை. ஒரு நிர்வாக உத்தியோகத்தராகவே காட்சியளிப்பதே அவரது குணாதிசயத்திற்கும், உயர்ந்த பண்புக்கும் நல்லெடுத்துக்காட்டாகும். தமிழ்ச்செல்வன் தனது 28 வருடகால ஆயுத, அரசியல் போராளியாக இருந்த காலகட்டப் பகுதிகளில் முன்னாள் ஐனாதிபதியான காலஞ் சென்றவர்களான ஜேர்.ஆர்.ஜெயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா, டி.பி.விஜயதுங்கா மற்றும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குப் பெரும் போரை நடத்திய சந்திரிகா குமாரதுங்கா, மகிந்த ராஜபக்ச ஆகியோர்களது ஆட்சிக்காலத்தில் தமிழினம் ஏமாற்றப்பட்டு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட வரலாறுகள் யாவற்றையும் மட்டுமன்றி முதல் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்காவின் தமிழினத்தின் மீது எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகள், அப்போதைய தமிழர் தரப்புத் தலைமையின் போக்குகளையும் ஒற்றைவிரல் நுனியில் அறிந்து வைத்திருந்தார். ஓர் இளம் அரசியல்வாதியாகத் தோற்றப்பாடு கொண்டவராக இருந்தாலும் ஓர் அரசியற் தலைவராகவே பார்ப்பவரைப் பிரமிக்கச் செய்கின்றவாறு எளிமையான பிரமுகராகக் காட்சியளிப்பார்.
இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருந்த மாகாணசபை முறைகள், முன்னைய அரசு கொண்டுவந்திருந்த மாவட்டசபை முறைகள் பற்றிய கருத்துக்கள் யாவும் இன்றுவரையில் சர்வ அரசியல் ஆய்வாளர்களால் மட்டுமன்றி புத்திஜீவிகளாலும் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. நோர்வே தொடங்கி ஒஸ்லோ வரைக்கும் மட்டுமன்றி ஏனைய நாடுகள் வரை சென்று தமிழ் மக்களின் விடுதலைக் கனவைச் சுமந்து சென்றவர். இன்றைய உலக யதார்த்தத்தில் புரட்சிகர இராஜதந்திரப் பணியை விடுதலைப் போராட்டத்துக்கு மத்தியில் சளைக்காது முன்னெடுத்திருந்தார்.
தமிழினத்தின் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்களின் நிமிர்வுக்கும், அரசியலில் பலமாக உயர்ந்து நிற்பதற்கும் உரமிட்ட ஒரு சாணக்கியன் தமிழ்ச்செல்வன். தமிழ்ச்செல்வனிடத்தில் காணப்பட்ட சிறப்பான குணமும் ஒன்று. மாதத்தில் மூன்று, நான்கு தடவைகள் முதியோர் இல்லம் சென்று அவர்களிடம் அளவளாவி, சிரித்து மகிழ்வது உணவருந்துவது பெற்ற தாய் தந்தையரைப் போல் அன்பு பாராட்டுவது இவைகளை யாராலும் எளிதில் மறந்துவிடமுடியாது. நவம்பர் மாதம் 2007 ஆம் ஆண்டு 2 ஆம் திகதி அதிகாலை வெள்ளிக்கிழமை ஈழத்தமிழர்களின் கண்கள் தன்னையறியாமல் கண்ணீர் பெருக பேரிடியாக அந்தச் செய்தி வருகின்றது.
எந்தத் தமிழராலும் நம்பவே முடியவில்லை. சு.ப சாவடைந்து விட்டார். வான்படையினரால் கொல்லப்பட்டார். தமிழர்கள் வீடுகள் தோறும் சோகம்… முகாரி ராகம் காணுமிடமெங்கணும் ஒலிக்கின்றது. பிரிந்துவிட்டார் தமிழ்ச்செல்வன். தன் அரசியல் அனுபவத்தாலும், ஆளுமையாலும் தமிழினத்தின் போராட்ட விடுதலையின் நியாயங்களை அதன் தாற்பாரியங்களை, கொள்கைகளை திசைகள் எட்டுத்திக்கிலும் கொண்டு சென்று செவ்வனே புரியவைத்திருந்தவர். குண்டு வீச்சில் தமிழ்ச் செல்வனது உயிர் பறிக்கப்பட்டாலும் தமிழ்மக்களிடமிருந்து இன்றுவரையில் எவராலும் பிரிக்க முடியாது. அவர் கூறிய கருத்துக்களை அழிக்கவும் முடியாது. நித்தியப் புன்னகை அழகன் அவன். தமிழர்களின் இதயங்களில் உறைந்திருக்கும் தமிழ்ச்செல்வன் இவன்.
- மு.ஈழத்தமிழ்மணி -

0 கருத்துகள்:

கருத்துரையிடுக