கரும்புலிகள்…..

தமிழீழக் கடலின்
ஒவ்வோர் நீர்த்துளியும்
தன்னில் எரிந்த கரும்புலியின்
கதை சொல்லக் காத்திருக்கு……..

எதிரியிடம் சிக்கி
மானம் இழந்ததனால்
அது விடும் கண்ணீர்த்துளிகள் சேர்ந்து
ஆழிப்பேரலையாகக் காத்திருக்கு……

நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து
அதிலே எதிரியைப் பலிகொடுத்து
எங்கள் கடலை எதிரி தொடாமல்
எங்களுக்காய் வைத்திருந்த
இரும்பு மனிதர்கள்
எங்கள் கரும்புலிகள்……..

பிரயாணம் தொடங்கிவிட்டால்
அவனுக்கு புரிவதெல்லாம்
ஈழ விடுதலை……
தெரிவதெல்லாம்
எதிரியின் இலக்கு…….
அவன் இலட்சியம்
தான் எரிந்து எதிரியை எரிப்பது…..
தன் வாழ்வுக்காய்
தன் இனத்தை எரிப்பதல்ல….

காதல், வீரம், பாசம், சோகம்
எல்லாம் ஒன்றாய் சேர்த்த
ஓர் உறுண்டை அவன்…..
அது தனி மனிதருக்காய் அல்ல….
தான் பிறந்த மண்ணுக்காய்….

எரிந்த மனிதர்கள் எலும்பில்
குளிர்காய அவன் விரும்பியதில்லை…..
புலிதான் அவன்
ஆனாலும் பொறுக்கிப் போடப்படும்
இறைச்சி தின்னும்
புலியாய் இருக்கவில்லை…..
புல் மட்டும் உண்ணும்
பசுவாகவே இருந்தான்……
நாட்டுக்காய் தன் உயிரையே
பாலாகக் கொடுத்தவன்…..

செம்மொழி மாநாட்டின்
(அ)சிங்கமாய் இருக்க
அவன் விரும்பியதே இல்லை….
தன் மொழி உயிரோடிருக்க
தன்னுயிரை உருக்கி
படிக்கல்லாய்க் கட்டியவன்…..

அவனின் இலக்கணங்கள்
சுய நலமென்றால் என்ன என்றால்
பதில் தெரியாது முழிப்பான்…….
போர் என்ற சொல் கேட்க முதல்
அவன் துப்பாக்கி
குண்டுகளால் நிரம்பிவிடும்…..
இரவுத் தூக்கமின்றி
ஆந்தைபோல் விளித்திருப்பான்….
ஆனாலும் காலைப் பொழுதாகிவிட்டால்…
வாசல் நோக்கி அவன் கண்கள்
தபால்காரனை நோக்கியே இருக்கும்
காதலியிடமிருந்து கடிதத்துக்கல்ல…..
அம்மாவின் பாசமடலுக்கல்ல….
தலைவனிடமிருந்து மட்டும்
தன் யாத்திரைக்கு
திகதி குறிக்கும் மடலுக்காக மட்டுமே…..

மரண பயத்துக்காய்
தினம் தினம் மாண்டுபோகும்
மனிதரின் மத்தியில்……
மண்ணுக்காய் தான் மரணிக்கப் போகும்
தாமதிக்கும் கணங்களுக்காய்
தினம் தினம் செத்த
ஓர் தியாகக் குழந்தையவன்…..

இவன் உயிரை உருக்கி
நெருப்பில் காய்ச்சிய இரத்தத்தில்
உல்லாசக்குளியல் போடும்
சுயநலக் குப்பைகள்
கரும்புலியின்
தியாக வெம்மையில் கருகும்
தேதியொன்று வரும்……
அங்கே அக்கினனிப் பறவைகளாய்
மீண்டெழும் தமிழினத்தின்
விடுதலைக் கரங்கள்
பாதையோரம் காத்திருந்து வணங்கும்
ஈழ விடுதலைக்கு
பாதையமைத்துத் தந்தவனுக்காய்…….

–கவிதை ஆக்கம் இளங்கவி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக