முதல் முறையாக சுதுமலையில் பிரபாகரன் மக்கள் தோன்றினார்!!

முதல் முறையாக சுதுமலையில் பிரபாகரன் மக்கள் தோன்றினார்!! : பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதுமலையில் கூடினர்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 95)

  பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது.

• ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள் இயக்கத்தினர்.
•சுதுமலையில் பிரபா

பிரபாகரன் சுதுமலையிலிருந்து தான் ஹெலிகொப்டர் மூலமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே சுதுமலையில் ஆகஸ்ட் 2ம் திகதி பிரபாகரனை கொண்டுவந்து இறக்கியது இந்திய ஹெலிகொப்டர்.
சுதுமலையில் பிரபாகரன் இறங்கியபோது யாழ் குடாநாடெங்கும் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சந்திகள் தோறும் ஆயுதம் தாங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் பாதுகாப்புபுக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஊடங்கு உத்தரவை அமுல்படுத்தும் பொறுப்பு சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டிந்தது.
சுதுமலையில் இறங்கிய பிரபாகனை இந்தியப் படையினர் தமது கவசவாகனமொன்றில் ஏற்றிச் சென்றனர். பிரபாகரனோடு அப்போது தமிழ்நாட்டிலிருந்து கிட்டுவும் வந்திருந்தார்.
புலிகள் இயக்க அலுவலகத்தில் பிரபாகரனை மாத்தையா வரவேற்றார்.
ஆயுதங்களை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு புலிகள் இயக்கத்திற்குள் அதிருப்திகள் ஏற்பட்டிருந்தன.
திருமலை மாவட்டத் தளபதி புலேந்திரன் ஆயுத ஒப்படைப்புத் தொடர்பாக மனச் சோர்வடைந்தவராகக் காணப்பட்டார்.
திருமலையில் உள்ள நெருக்கடிகள் தீரவில்லை. இந்நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது சரியாக இருக்காது என்றார் புலேந்திரன்.
ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் பிரபாகரனுக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆயினும் இந்தியாவோடு பேச்சில் உடன்பாடு தெரிவித்தாயிற்றே.
எனவே முதல் கட்டமாக ஒரு தொகுதி ஆயுதங்களை ஒப்படைக்கலாம். அதன்பின்னர் சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தார் பிரபாகரன்.

ஆயுத ஒப்படைப்பு

ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள் இயக்கத்தினர்.
ஏனைய இயக்கங்களை தடைசெய்த போது கைப்பற்றிய ஆயுதங்களில் பாவனைக்கு உதவாதவை பல இருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
இயக்கத்திடம் கைப்பற்றிய மோட்டார் ஷெல்கள் பார்வைக்குப் பொலிவாக பெருமளவில் இருந்தன. அவை உத்தரவாதம் இல்லாதவை என்பதால் பாவிக்கப்படாமல் கிடந்தன. புலிகள் இயக்கத்தினரிடமும் பாவனைக்கு உதவாக ஆயுதங்கள் இருந்தன.
அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி அவற்றோடு சில நல்ல ஆயுதங்களையும் கலந்து ஒப்படைக்கத் திட்டமிட்டனர் புலிகள்.
ஆகஸ்ட் 6ம் திகதி பலாலி இராணுவத் தளத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கச் சென்றார் யோகி.
புலிகள் இயக்க முக்கிய தளபதிகள் எவரும் செல்லவில்லை. யோகியைத்தான் அனுப்பி வைத்தனர்.
ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக தனது பிஸ்டலை ஜெனரல் சேபால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார் யோகி.
அதனைத் தொடர்ந்து கொண்டு சென்ற ஏனைய ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.
தொலைக்காட்சிக்காரர்களும், புகைப்படப்பிடிப்பாளர்களும் ஆயுத ஒப்படைப்பைப் படமாக்கினார்கள்.
பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் ஆயுத ஒப்படைப்புப் பற்றிய செய்திகளை பத்திரமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.



ஆயுதங்களை  மேலோட்டமாகப் பார்வையிட்ட செய்தியாளர்களுக்கு ஆச்சரியம். முதுல் தொகுதியாக ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களே இத்தனையா?
‘கிட்டத்தட்ட பெரும்பாலான ஆயுதங்களையும் ஒப்படைத்துவிட்டார்கள் போலத் தான் இருக்கிறது’ என்றெல்லாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆயுதங்களைப் பொறுப்பெடுத்தவர்களுக்கும், ஒப்படைத்த புலிகள் இயக்கத்தினருக்கும் தான் அந்த ஆயுதங்களின் தரம் பற்றிய இரகசியம் தெரியும்.
இலங்கை அரசாங்கத்துக்கு புலிகள் முதற்கட்டமாக ஒப்படைத்த ஆயுதங்களின் தரம் தெரிந்தாலும் அது பற்றி வெளியே சொல்லமுடியாத தர்மசங்கட நிலமை.
வெளியே சொன்னால் ஒப்பந்த எதிர்ப்பாளர்களுக்கு மெல்ல அவல் கொடுத்த மாதிரியாகிவிடுமே.
படமெடுக்க பொலிவாகத் தெரிகிறதே இப்போதைக்கு அது போதும் என்ற நிலையில் தான் இருந்தது அரசாங்கம்.
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்ததைத் தொடர்ந்து ஏனைய இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைக்க தமது பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
ஆயுத ஒப்படைப்போடு வடக்கு-கிழக்கில் காலூன்றிவிடவேண்டும் என்பதுதான் ஏனைய இயக்கங்களின் நோக்கம்.
அந்த நோக்கத்தை எப்படியாவது முறியடித்துவிடவேண்டும் என்பதில் புலிகள் இயக்கத்தினரும் கவனமாக இருந்தனர்.
இந்தியப் படையினரின் வருகையோடு படையினர் ‘ஒப்பரேசன் லிபரேச’னில் நிலை கொண்ட பகுதிகளில் இருந்து வெளியேறி முன்னைய முகாம்களுக்குத் திரும்பினர்.
சுத்தப்படுத்தல்
யாழ் கோட்டை இராணுவ முகாம் முன்பாக இருந்த மிதிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியப்படையினர் ஈடுபட்டனர்.
அந்தப் பணியில் இந்தியப் படைவீரர்கள் சிலர் மிதிவெடியில் சிக்கிப் பலியானார்கள்.
அந்தச் செய்தி இந்தியப் படை மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுக் காயமடைந்த இந்தியப் படை வீரர்கள் யாழ் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பிக்கப்பட்டனர்.
விபரம் அறிந்து பொதுமக்கள் பலர் மருத்துவமனைக்கு முன்னர் திரண்டு விட்டனர்.
காயமடைந்த படைவீரர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காகவே மக்கள் தாமாக முன்வந்து சென்றிருந்தனர்.
இத்தனைக்கும் இரத்தம் தேவையென்று வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை. மக்களின் கரிசனை இந்தியப் படையினரை நெகிழவைத்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு இலங்கையில் தென் பகுதியில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
ஒப்பந்தம் தமிழ் மக்களுக்குச் சாதகமானது என்ற எண்ணம்தான் எதிர்ப்புக்கான முக்கிய காரணமாக இருந்தது.
இதே சமயம் தமிழ் நாட்டிலும் ஒப்பந்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன.
ஒப்பந்த்துக்கு எம்.ஜீ.ஆரும் ஆதரவு என்பதால், ஒப்பந்தம் அநீதியானது என்று பிரசாரம் செய்வது தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு – அவரது சொந்த அரசியல் நலனுக்கு ஏற்றதாக இருந்தது.
பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது.
தீக்கிரையான பிரதிகள்
தமிழ் நாட்டில் ஒப்பந்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதை புலிகளும் விருமிபினார்கள்.
கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்துக்கும் பிரபாகரனின் தெரியப்படுத்தப்பட்டது. திராவிடர் கழகத்தோடு நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் பேபி சுப்பிரமணியம். அவர்தான் புலிகள் இயக்க அரசியல் செயலாளராகவும் இருந்தவர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப் பிரதிகளை தீக்கிரையாக்கும் போராட்டம் ஒன்றை நடத்தியது திராவிடர் கழகம். மதுரையில் நெடுமாறனும் ஒப்பந்தப் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. எடுத்த நிலைப்பாடு கொஞ்சம் சுவாரசியமானது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து பண்டிருட்டி ராமச்சந்திரனும், நெடுஞ்செழியனும் கருத்து வெளியிட்டனர்.
அ.தி.மு.க. அமைச்சரவையில் இருந்த காளிமுத்து ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டங்களில் பேசினார். இரண்டு கருத்துக்களையும் எம்.ஜி.ஆர். அனுமதித்தார்.
மத்திய அரசை திருப்திப்படுத்த பண்டிருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரின் கருத்து பயன்பட்டது. தி.மு.க.வுக்கு ஈடுகொடுக்க காளிமுத்துவின் பேச்சுக்கள் பயன்பட்டன.
இதனைக் கிண்டல் செய்து ‘துக்ளக்’ சஞ்சிகை ஒரு கார்டூணை வெளியிட்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்கு ஆறு முகங்கள். அந்த ஆறு முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியைச் செய்வது போல கிண்டலடித்திருந்தார் சோ.
ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர் எதிர்க்கவில்லை. ஆனாலும் பிரபாகரனுடன் இருந்த தனது நல்லுறவை எம்.ஜி.ஆர். துண்டிக்கவுமில்லை.
சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராஜீவ் காந்தியும்-எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் ராஜீவ் எம்.ஜி.ஆரைப் பற்றி போற்றிப் பேசினார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக எம்.ஜி.ஆர்தான் காரணம் என்று பாராட்டினார் ராஜீவ்.
தமிழகத்தில் ஒப்பந்தத்துக்கு எதிரான எதிர்ப்புக்களைப் பலவீனப்படுத்தவும், நெருங்கிவந்த தேர்தலுக்கு ஒப்பந்தப்பலனை வைத்து தமிழக மக்களின் ஆதரவைத் திரட்டவுமே அக்கூட்டம் நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆரின் கரத்தோடு தனது கரத்தைக் கோர்த்து, கூட்டத்தின் முன்னர் கரங்களை உயர்த்துக்காண்பித்தார் ராஜீவ் காந்தி.
சுதுமலையில் கூட்டம்
யாழ்ப்பாணம் சுதுமலையிலும் ஒப்பந்தம் தொடர்பாகவும், ஆயுத ஒப்படைப்பு தொடர்பாகவும் விளக்கமளிக்க ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள் புலிகள்.
முதல் முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றப் போகிறார் பிரபாகரன்.
பிரபாகரனைப்பற்றித் தெரியாதவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரபாகரனை நேரில் கண்டவர்கள் குறைவு.
முதல் முறையாக பகிரங்க இடத்தில் பிரபாகரன் தோன்றப்போகிறார் என்ற செய்தி பரவியதும் சுதுமலையில் பல்லாயிரம் மக்கள் கூடினார்கள்.
சுதுமலை அம்மன் கோவில் அருகே உள்ள வயல் வெளிகளில் மக்கள் வெள்ளம்.
(தொடர்ந்து வரும்)
எழுதுவது அற்புதன்

பிரபா தொடர்பாக ராஜீவ் அனுப்பிய இரகசியக் கடிதம்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -94)
ராஜீவ் காந்தியை துப்பாக்கி முனையால் குத்திக் கொலை செய்ய திட்டமிட்ட இலங்கை கடற்படை வீரர்கள்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 93)
கடலின் நடுவில் கடும் சமர் காட்சி
முல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான தாக்குதல் 18.07.96 அன்று அதிகாலையில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
‘ஓயாத அலைகள்’ என பிரபாகரனால் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் மிகப்பாரிய வெற்றியாக அமைந்தது.
1991 இல் ஆனையிறவு இராணுவமுகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். ‘ஆகாய கடல் வெளிச் சமர்’ என்று அழைக்கப்பட்டது.
கடல்வழியாக தரையிறங்கி அரச படைகள் புலிகளின் முகாம் முற்றுகையை முறியடித்தன.
கடற்புலிகள் அமைப்பு பலமாக இன்மையினால் கடல் வழியாக படையினர் தரையிறங்கியதை புலிகளால் தடைசெய்ய முடியவில்லை.
முல்லைத்தீவு ‘ஓயாத அலைகள்’ தாக்குதலில் புலிகளின் ‘கடற்புலிகள்’ முக்கிய பங்கை வகித்தனர்.
கடற்பரப்பில் கடற்புலிகளின் வெடிகுண்டுப்படகுகள் அலைந்து திரிந்தன. கடற்பரப்பில் கடற்புலிகள் ஏற்படுத்திய தடைகள் காரணமாக வான் வழியாக படைகள் தரையிறக்கப்பட்டன.
கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும், கடற்படையினருக்கும் இடையே கடும் சமர் இடம்பெற்றது.
தரைச்சமரைவிட ஆபத்தானது கடற்சமர். பரந்த கடலில் பதுங்கிக்கொள்ளவோ, போரை ஆரம்பித்துவிட்ட பின்னர் சுலபமாக பின்வாங்கிச் செல்லவோ வாய்ப்பிருக்காது.
முல்லைத்தாக்குதலில் 19ம் திகதி மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற கடற்சமரின் சில காட்சிகள் இங்கே விரிகின்றன.
முல்லைத்தீவு முகாமில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளான படையினருக்கு உதவ விரைந்து செல்கிறது ‘ரணவிரு’ பீரங்கிக் கடலூர்தி.
கடற்புலிகள் தாக்கலாம்.
கடற்கரும்புலிகள் மோதவரலாம்
அதனை எதிர்பார்த்து பீரங்கிகள் வாய்திறந்து காத்திருக்கின்றன.
‘ரணவிரு’ கடலில் செல்ல, அதற்கு மேலாகப் பறந்து ஹெலிகொப்டர் வான்வழிப்பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தது.
‘ரணவிரு’ கடற்கரையை நெருங்கத்தொடங்கியது. இன்னமும் கடற்கரையிலிருந்து இரண்டு கடல்மைல் தூரம்தான்.
ஆனால் கடற்படையினர் எதிர்பார்த்தது போலவே கடற்புலிகளது படகுககள் ரணவிருவை குறிவைத்து விரைந்து வருகின்றன.
‘ரணவிரு’வின் பீரங்கிகள் முழங்கத் தொடங்குகிறது. ரணவிருவை கடற்குலிகள் நெருங்கமுடியாதவாறு வேட்டுக்களால் கப்பலைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பப்படுகிறது.
கடற்புலிகளின் படகுகளில் இருந்து ரணவிருவை நோக்கி தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஹெலிகொப்டரை நோக்கியும் கடற்புலிகளது படகில் இருந்து சுடப்படுகிறது.
ஹெலிகொப்டர் மேலே உயர்ந்து பறக்கத்தொடங்குகிறது. கடற்புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை இருக்கலாம். இருந்தால் ஹெலி சுடப்படலாம்.
ஹெலிகொப்டரை காப்பாற்றுவதற்காக அதனை உயர்த்தி கடற்புலிகளின் இலக்கில் இருந்து விலக்கிக் கொள்கிறார்கள்.
கடற்புலிகளின் படகுகள் ரணவிருவை நான்கு பக்கங்களிலும் சுற்றிவளைக்கின்றன. கடும் சமர் நடந்து கொண்;டிருக்கிறது.
கடற்புலிகளின் மத்தியில் இருந்து ஒரு படகு உச்ச வேகத்தில் புறப்பட்டு ரணவிருவை நோக்கிப் பாய்கிறது.
அது கடற்கரும்புலிப்படகு.
கண்ணபிரான், பார்த்திபன் என்னும் இரண்டு கடற்கரும்புலிகள் படகில் இருக்கிறார்கள்.
கடற்கரும்புலிப்படகு தம்மை நோக்கி வருவதைக் கண்டுவிட்டனர் கடற்படையினர்.
படகைக்குறிவைத்து சரமாரியாகச் சுடுகின்றனர். ரணவிருவை நெருங்க இன்னமும் ஐந்து மீற்றர்தான். தாண்டிவிட்டால் மோதிவிடும்.
கடற்படைத் தாக்குதலில் சிக்கிக்கொண்ட கடற்கரும்புலிப்படகு கடலில் வெடித்துச் சிதறுகிறது.
அதேநேரம் மற்றொரு திசையில் இருந்து ரணவிருவை நோக்கிப் பாய்ந்து சென்றது மற்றொரு கடற் கரும்புலிப்படகு.
மிதுபாலன், இன்னிசை (பெண் கடற் கரும்புலி) என்னும் இரண்டு கடற்கரும்புலிகள் அப்படகில் இருக்கின்றனர்.
குறி தப்பவில்லை.
ரணவிருவில் மோதுகிறது கடற்கரும்புலிப்படகு. ஆனால்!
குண்டு வெடிக்கவில்லை.
மோதிய படகு முன்பக்கத்தால் உடைந்து போனது. நீர் படகுக்குள் புகுந்தது.
படகை ஓட்டிச் சென்ற மிதுபாலன் படகை மீண்டும் பின்னே இழுத்துச் பின்வாங்குவது போல காவனை காட்டிவிட்டு மீண்டும் முன்னோக்கி உச்சவேகத்தில் ரணவிருவை நோக்கி படகைச் செலுத்தி மோதுகிறார்.
பலமாக மோதியது.
ஆனால் இம்முறையும் குண்டு வெடிக்கவில்லை.
குண்டுத்தயாரிப்பில் ஏற்பட்ட கோளாறு ஏமாற்றிவிட்டது.
கடற்படைத்தாக்குதலில் படகில் இருந்த இன்னிசையும் காயமடைந்தார்.
படகை மீண்டும் பின்னோக்கி இழுக்கிறார் மிதுபாலன். பாதுகாப்பாக பின்வாங்க ஆரம்பிக்கிறது கடற்கரும்புலிப்படகு.
அப்படகை தாக்கி அழித்துவிட கடற் படையினர் கவனம் செலுத்திக்கொண்டிருக்க, இன்னொருபுறமிருந்து வந்து மோதியது மற்றொரு கடற்கரும்புலிப்படகு.
இம்முறை குறி தப்பவில்லை.
ரணவிருவின் இயந்திரப் பகுதி நொருங்கியதால், கடலில் தடுமாறத்தொடங்கியது ரணவிரு.
அதே நேரம் ரணவிருவின் நேர் எதிர்;ப்பக்கமாக மற்றொரு கடற்கரும்புலிப்படகு உச்சவேகத்தில் வந்து இடித்தது. வெடித்தது.
செல்லப்பிள்ளை, சுடரொலி (பெண்), பதுமன் ஆகிய மூன்று கடற்கரும்புலிகள் பலியானார்கள்.
‘ரணவிரு’ மூழ்கத்தொடங்க கடற்புலிகளின் படகுகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. கப்பலில் இருந்த படையினரை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன.
ரணவிருவை மோதி வெடிக்காத படகுடன் மிதுபாலன், இன்னிசை ஆகியோர் தப்பிக் கொண்டனர்.
ஐந்து கடற்புலிகள் பலியானார்கள். கப்பலில் 40க்கு மேற்பட்ட படையினர் பலியானார்கள். மூழ்கிய கப்பலின் பெறுமதி 10 கோடி ரூபாய்.
24.07.96 அன்று மற்றொரு கடற்சமர்! தரையிறக்கும் கப்பல் ஒன்றை குறிவைத்து விரைந்தது கடற்கரும்புலிப்படகு.
‘ரணவிரு’ தாக்குதலில் பங்குகொண்ட கடற்கரும்புலி மிதுபாலன் படகை ஓட்டிச் செல்ல சயந்தன் என்னும் மற்றொரு கடற்கரும்புலியும் படகில் இருந்தார்.
கடற்கரும்புலியை தூரத்தில் இருந்தே கவனித்துத் தாக்கத்தொடங்கினார்கள் கடற்படையினர்.
தரையிறக்கக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட குண்டுபட்டு வெடித்துச் சிதறியது படகு.
கப்பலில் இருந்து 40 மீற்றர் தூரத்தில் வெடித்துச் சிதறிய படகில் இருந்த மிதுபாலன், சயந்தன் ஆகிய கடற்கரும்புலிகள் பலியானார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக