சிறீ சிறீஸ்கந்தராஜா எழுதிய தங்கத் தமிழ் தாயகமே!

எங்கள் திருநாடே!!
ஈழவளநாடே!!
பொங்கு தமிழ்கண்டு
புகழ்பெற்ற பெருநிலமே!

அன்னை உந்தன் விலங் கொடிக்க
தன்னைத் தந்த மறவர் வாழ்க!
தரணி போற்றும் தானைத் தலைவன்
தளபதிகள் நீவிர் வாழ்க!

தலைநகரே! திருமலையே!
தாவிவரும் கடலலையே!
தமிழ் மண்ணை முத்தமிட
தவமென்ன நீ செய்தாய்?

செந்தமிழே யாழ்நிலமே!
சிறப்பான தமிழ் மண்ணே!
சந்ததிகள் பல போற்றும்
சங்கிலியன் திருநாடே!

வீரம் விளைகின்ற
விலை போகாப் பெருநிலமே!
வன்னி வயல்பரப்பே!
வளம்கொழிக்கும் தாயகமே!!

முத்து விலைநிலமே!
மன்னார் கடல் அலையே!
மூழ்கிக் குளித்துவரும்
முத்தமிழே நீ வாழி!

கட்டவிழ்ந்த போதும் எமைக்
காத்து நின்ற தமிழ் மண்ணே!
மொட்டவிழ்ந்த தாமரையே!
மட்டுநகர் நீ அழகே!

முல்லை நிலமே!
மூத்த தமிழ்க்குடியே!
உன்னைப் பிரிந்ததனால்
உயிரை நாமிழந்தோம்!

மண்ணில் புதைத்துவிட்டோம்
மறத்தமிழர் குலம் உன்னை!!
நீ சிந்திய இரத்தத்தில்
சிவந்தது தமிழீழம்!

தங்கத் தமிழ் தாயகமே!
தரணி புகழ் பாடிடுமே!!
சங்கெடுத்து நீ ஒலித்தால்
சங்கத்தமிழ் முழங்கிடுமே!! 
 
 
ஆக்கம் சிறீ சிறீஸ்கந்தராஜா
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக