தாயகத்தில் நடைபெற்ற திலீபன் நினைவு அஞ்சலி !!


தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலிகள் தாயகத்தில் பல இடங்களில் இடம் பெற்றது.
முக்கியமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் உணருப்பூர்வமாக தமது அஞ்சலிகளை செய்தனர்..
தமிழினத்தின் வாழ்வுக்காக ஊண் உறக்கம் மறந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய ஒரு தியாகியின் எண்ணங்கள், சிந்தனைகள், நோக்கங்கள் ஒருபோதும் வீண்போகாது என்பது சர்வநிச்சயம்.
ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காக மகாத்மா காந்தி உண்ணா நோன்பு இருந்தார். அந்தத் தியாகம் பாரத தேசத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது.
பிரித்தானியக் காலனித்துவத்துக்கு எதிராக சத்தியவழியில் போராடிய காந்தியின் சிலை இன்று பிரித்தானிய மண்ணில் நிறுவப்பட்டுள்ளது.
எந்த நாட்டுக்கு எதிராக மகாத்மா காந்தி நாற்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தாரோ அந்த நாடு இன்று காந்தியின் உருவச் சிலையை தன் நாட்டில் நிறுவி காந்தியத்துக்கு - அகிம்சைக்கு மதிப்பளித்துள்ளது.
மகாத்மா காந்திக்கு இப்போது பிரித்தானியா வழங்கிய கெளரவத்தை அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனால் இன்று மகாத்மா காந்தியின் உருவச் சிலை லண்டனில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாயின் அதற்குள் இருக்கக் கூடிய ஆன்மிக தத்துவங்கள், தியாகத்தின் பெறுமதிகள் என்பவற்றை நாம் உணர்ந்தாக வேண்டும்.
இதே போன்றுதான் தியாகி திலீபனின் தியாகமும் இந்த இலங்கை மண்ணில் என்றோ ஒரு காலத்தில் போற்றப்படும். இந்த நாட்டின் தென்பகுதியில் கூட தியாகி திலீபனின் சிலை நிறுவப்படும்.
பாடப் புத்தகங்களில் திலீபன் என்ற தியாகியின் வரலாறு இந்த நாட்டின் மாணவர்களால் படிக்கப்படும்.இதை நாம் இப்போது கூறும் போது இது நடக்கக் கூடிய விடயமா? என்று பலரும் கேட்கலாம்.
ஆனால் என்றோ ஒரு காலத்தில் நாம் கூறிய மேற்போந்த விடயங்கள் நடந்தேயாகும்.
இதைச் சொல்லும் போது இதற்கு ஏதேனும் சான்றாதாரங்கள் உண்டா? என்று கேள்வி எழுப்பப்படலாம். இதற்கான பதில் மெளனமாகவே இருக்கும்.
ஆனால் உலகில் எந்தத் தியாகமும் வீண்போனதாகச் சரித்திரம் இல்லை.அதேபோல எந்த நடிப்புகளும், போலித்தனங்களும் நீண்ட காலம் நிலைத்ததான வரலாறுகளும் இல்லை.
தியாகி திலீபனின் தியாகத்தை இந்த நாட்டின் அனைத்து மாணவர்களும் கற்கின்ற காலம் வருகின்ற போது இப்படியொரு தியாகி இருந்தாரா? என்று கேள்வி எழுப்பும் அந்த மாணவர்கள், அந்தத் தியாகியின் தியாகத்தை இலங்கை ஆட்சியாளர்கள் போற்றத் தவறியது மகா தவறு என்றும் குற்றம் சாட்டும்.
ஆக, தியாகி திலீபன் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை எமக்குரியது. எவராலும் நினைக்க முடியாத தியாகம்.
அதிலும் தன் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தன்னுயிரை ஆகுதியாக்க வேண்டும் என்ற நினைப்பும் அந்த நினைப்பை நினைவுபடுத்துவது என்பதும் சாதாரணமானவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயமாகும்.
அந்தளவிற்கு திலீபனின் தியாகம் போற்றுதலுக்குரியது. எதிர்காலத்து சந்ததி இப்படியொரு தியாகத்தை யாரும் செய்ய முடியுமா? என்று கேட் கின்ற அளவில் தியாகி திலீபனின் தியாகம் போற்றப்படும், வழிபடப்படும். இது உண்மை.
ஒட்டுமொத்தத்தில் தூய சிந்தனையுடன் கூடிய தியாகங்கள் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை.
அவை உயிர்ப்புப் பெற்று நீடூழி வாழ்பவை. அந்த உயிர்ப்புக்கு முற்பட்ட காலம் உயிர்ப்புக்கான உறங்கு நிலையாகவே இருக்கும்.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக