அ.பவளம் பகீர். எழுதிய எல்லை தாண்டி சிட்னி முருகன் வீதியிலும் திலீபா நீ வாழ்கின்றாய்...!!

அரும்பிய மீசையென்றாலும்
அவனிடத்தில் இருந்ததே
இரும்பையொத்த உறுதியது,
அவன் விரும்பியதெல்லாம்
சுதந்திரமான அழகிய தேசமே....!
உணர்வை விதைத்திட
நல்லூரின் வீதியதில் நாளும்
உருகி உருகி எரிந்தாயே
உனக்காய் அல்ல ஏனோ
உன் எல்லாக் கனவுகளும்
எம் இனத்தின் விடுதலையே
மண்ணை நேசித்த
அண்ணனின் பிள்ளை உனை
எண்ணிப் பார்க்கின்றேன்.....!

அன்று வெறும் 24 வயதே
இன்று இருந்திருந்தால் நீயோ
ஈழத்தின் மிகப்பெரிய
வைத்திய நிபுணராகியிருப்பாய்
இல்லையே அதனால்
தியாகத்தின் எல்லையானாய்......!
சாவிற்கே உனை அர்ப்பணித்து
சத்தியத்திற்காய் நாளும் போராடி
கூடி அழுதே புலம்பிய கூட்டத்தின் முன்
மேடையினில் கூன் விழுந்தவனாய்
பன்னிரு தினங்கள் சுருண்டு கிடந்தாய்
பட்டினி கண்டும் பாரதம் பதறவில்லை
காந்தியம் பேசிப் பேசியே
கடைசிவரை கொன்றார்கள்
மாறிடும் பாரதமென நம்பினோம்
மனச்சாட்சியின்றியே மரணத்தின்
பாய்தனில் உனைச் சாய்தனர்.....!

ஆறிடும் வேதனை இதுவல்ல
காந்தி தேசமே காறி உமிழ்கின்றோம்
மஹாத்மாவின் சாயம் வெளுத்தது
மரணத்தால் பாரதம் தோற்றே போனது
நல்லை முருகன் வீதியிலே கிடந்தாய்
இன்று ஈழத்தின் எல்லை தாண்டி சிட்னி
முருகன் வீதியிலும் திலீபா நீ வாழ்கின்றாய்...!!
ஆக்கம்  அ.பவளம் பகீர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக