நாடு கடந்த தமிழீழ அரசும் ”எழுக தமிழ்” பேரணிக்கு ஆதரவு

தமிழ் மக்கள் பேரவையினால் இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள “எழுக தமிழ்” எழுச்சி நிகழ்விற்கு நாம் எமது பூரண ஆதரவை வழங்குவதோடு நாம் எமது தோழமை உணர்வையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வி.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தமிழ் செயற்பாட்டு கவுன்சில், உலக தமிழ் அமைப்பு, அமெரிக்க தமிழ்ச்சங்க ஆகியன இது தொடர்பில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எழுக தமிழ்” தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் தாயகப் பாதுகாப்பையும், வாழ்வாதார உரிமைகளையும் வலியுறுத்தும் கோரிக்கைகளை முன் வைத்து இந்த பேரணி அமையவுள்ளது.
தமிழ் மக்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துவதற்குப் போதுமான அரசியல் தீர்வு இல்லாத காரணத்தினால் பேரணியின் அரசியல் தீர்வு தொடர்பான கோரிக்கை சமஷ்டி வடிவில் முன் வைக்கப்படுவதை நாம் புரிந்து கொள்கின்றோம்.
தமிழ் மக்களின் முழுமையான சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவதற்கு தேவையான அரசியல் தீர்வினை உருவாக்குவதற்கு “எழுக தமிழ்” போன்ற மக்கள் எழுச்சி வழிவகை செய்யும் என நாம் நம்புகின்றோம்.
“எழுக தமிழ்” உரிமை வேண்டி நிற்கும் ஈழத் தமிழ் மக்களது உணர்வின் வெளிப்பாடு. தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படும் இக்கால கட்டத்தில் தாயகத்தில் எமது மக்களுக்கு கிடைக்கும் வரையறுக்கப்பட்ட அரசியல் தீர்வுக்குள் அவர்கள் வெளிப்படுத்தும் உரிமைக்குரல் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக