சிறீ சிறீஸ்கந்தராஜா எழுதிய “திலீபாஞ்சலி”

இதுவரை பார்த்தோம்
மற்றவர் மரணத்தை!
அன்றுதான் பார்த்தோம்
எங்களின் மரணத்தை!!

உண்மையில் அன்று...
இறந்தது நாங்கள்!
ஆனால் ஏனோ...
உன்னைப் புதைத்தார்?

சிதையில் தீமூட்டி உடலை எரிப்பர்!
நீயோ..
உயிரில் தீமூட்டி உன்னை எரித்தாய்!!

சாவுக்குப் பயந்த நாங்கள்
உன்னைச் சாகவிட்டுப்
பார்த்துக்கொண்டோம்!

சுதந்திர ஈழத்தை
நாம் பார்க்கவேண்டும் என்பதற்காகவா
உன் கண்களை நீ மூடிக்கொண்டாய்?

சுதந்திரக் காற்றை
நாம் சுவாசிக்கட்டும் என்பதற்காகவா
உன் மூச்சை நீ நிறுத்திக் கொண்டாய்?

இந்த மண்ணை! இந்த இனத்தை
நேசித்த உந்தனுக்கு
நாங்கள் பட்டினிச் சாவைத்தானே
பரிசளித்தோம்!!

உனக்கு வெறும்
கண்ணீர் அஞ்சலி மட்டும் போதாது!
நீ நேசித்த இந்த மண்ணை
அன்றைக்கே காணிக்கை
தந்திருக்க வேண்டும்!!

உன் எதிரியைக்கூட மன்னித்துவிடு!
வஞ்சனையாக
உன்னை வதைசெய்து கொன்ற எங்களை
மறந்தும் மன்னிக்காதே!!

போர்க்களம்!
அதுதானே நீ வாகை சூடவேண்டிய இடம்!
ஆனால்..
நல்லூர் வீதியிலே
ஏன் தொடுத்தாய் அறப்போரை?

நீ நினைத்திருந்தால்
துப்பாக்கி முனையிலேயே
எதிரியை நிறுத்தி இருக்கலாம்!
மாறாக...
உன்னோடு நீயே போர்தொடுத்து
ஏன் வென்றெடுத்தாய்
எங்கள் இதயத்தை??
 
ஆக்கம்   சிறீ சிறீஸ்கந்தராஜா
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக