வரலாறு காணாத பேரணியாக தமிழ் மக்கள் அணி திரளட்டும் -எழுகதமிழா !!

வரலாறு காணாத பேரணியாக தமிழ் மக்கள் அணி திரளட்டும் - தமிழினமே சற்று விழித்தெழு காலம் அழைக்கின்றது.. எழுகதமிழா !!
அகிம்சை போராட்டம் தமிழ் மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. எனினும் அந்த அகிம்சை போராட்டங்களை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு மதிக்கத் தெரியாமல் போயிற்று.
இதன் அனுபவிப்புத்தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் ஜெனிவாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவரை மின்சார கதிரையிலிருந்து பாதுகாத்துள்ளோம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறும் அளவில் மிகப் பெரிய இன அழிப்பாளர்கள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் இருந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆம், வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்பு தொடர்பான சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடைபெறுமாக இருந்தால், இந்த நாட்டின் ஆட்சிபீடத்தில் இருந்தவர்களுக்கு மீட்சி இல்லை என்பதை இன் றைய ஆட்சியாளர்கள் தெட்டத்தெளிவாக உணர்ந்துள்ளனர்.
இதன் காரணமாகவே சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டாம் என்று அவர்கள் அடம் பிடிக்கின்ற னர்.
நாங்கள் தமிழ் மக்களுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை, அவர்களை அழிக்கவில்லை என்பதை சிங்கள மக்களும் ஆட்சியாளர்களும் உறுதிபட கூறுவார்களாயின் அதனை சர்வதேச விசாரணை மூலம் நிரூபிப்பதே உத்தமமானதாகும்.
எந்தத் தீங்கும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை என்றால், சர்வதேச விசாரணையை ஏற் றுக்கொள்வதில் பின்னடிப்புகள் தேவையாக இராது.நிலைமை இதுவாக இருக்கையில் சர்வதேச நாடுகளும் தமிழ் மக்கள் விடயத்தில் பாராமுகத்தைக் கொண்டுள்ளது என்ற உண்மையை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
அதேவேளை தமிழ் மக்கள் ஏதோ மகா குற்றம் இழைத்தவர்கள் போலவும் அவர்கள் மெளனமாக இருந்து ஆட்சியாளர்கள் தருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போலவும் தமிழ் அரசியல் தலைமைகள் நினைப்பதுதான் விசித்திரமாகவுள்ளது.
போரில் அழிந்தது நாங்கள்; இழந்தது நாங்கள்; பறிகொடுத்தது நாங்கள், போர்விதிக்கு முரணான ஆயுதங்கள் வீசப்பட்டது எங்கள் மண்ணில் இன்று வரை எம் சொந்த மண்ணில் குடியிருக்க முடியாமல் சதா துன்பப்படுபவர்கள் நாங்கள்.
தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையின்றி சிறைகளில் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கின்றனர்.
வன்னிப் பெரும் நிலப்பரப்பில் நடந்த நாசகாரத்திற்காக, ஜெனிவாவுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளது.
இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்கள், ஐ.நா பிரதிநிதிகள் அனைவரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று இலங்கை அரசிடம் சொல்லிவிட்டுப் போகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக இருப்பார்களாயின் அது அவர்களுக்கு இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற ஒரு செய்தியையே சொல்லி நிற்கும்.
ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்கவேண்டும். அந்தக்குரல் தீர்வை விரைவு படுத்துவதாக இருக்குமே அன்றி அது ஒருபோதும் தீர்வைக் குழப்பாது.இதைத்தான் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவரும் கூறிச்சென்றார்.
நீங்கள் உங்கள் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் குரல் கொடுங்கள். அப்போதுதான் நாங்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியும் என்று அவர் கூறியதன் மறு கருத்து, நீங்கள் பேசாமல் இருக்கும்போது நாங்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தேவையற்று மூக்கை நுழைக்கிறது என்றாகிவிடும்.
ஆகையால் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் தமிழ் மக்களும் அத்தனை தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் தாமாக ஒன்று திரண்டு எங்கள் நிலைமையை உலகிற்கும் இலங்கை அரசுக்கும் எடுத்துக்காட்ட வேண்டும்.
இந்தப் பேரணியில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்பாராயின் நிச்சயம் அதன் விளைவு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையும் என்பது உறுதி.
https://youtu.be/1fEVtpFWIUc
https://youtu.be/UvQKN9_J9oM
https://youtu.be/zrbXyZzHy0c

0 கருத்துகள்:

கருத்துரையிடுக