யோ.புரட்சி எழுதிய திலீபம் சாவதில்லை.

பசி வந்தால்
பத்தும் பறந்திடுமெனும்
பழமொழியை
பார்த்தீபன் பொய்யாக்கினான்.

தேசம் பசித்திருக்கலாகாதென‌
உந்தன் தேகம் பசித்திருந்தது.

பல்கலையில் மருத்துவம்
படித்த உனக்கு
நாளொன்றுக்கு பருகும் நீரளவு
நன்றே தெரியுமே.
அது தெரிந்துதானே
பன்னிரெண்டு நாட்களும்
நீரும் ஆகாரமும்
நிராகரிப்புச் செய்தாய்.

திருவிழா காணும் நல்லூர்
தியாக விழா கண்டதே.
ஆலய பூசை மறந்து உறவுகள்
அண்ணா உன்முன் திரண்டதே.

காந்தி அன்று இருந்திருந்தால் உன்
காலடிக்கே வந்திருப்பார்.
திலீபன் உன் செய்கை கண்டு
கிரீடம் தந்திருப்பார்.

தியாகத்தை பருகியதால்தானா
சிறுதுளி நீரும் பருகவில்லை.
மெழுகாய் உருகியதால்தானே
உணவு கேட்டு உருகவில்லை.

மரணத்துக்கு போகையில்
யாரும் மாலை சூடுவரோ..
இறக்கப் போகுமுன்
எனக்குப் பொட்டிடுங்கள் என்பரோ.
அன்புத் தாயொருத்தி
பொட்டிட்டு மாலையிட‌
புன்னலையோடு போய்
உன்னணையில் இருந்தீரே..
மன்னவனுன்னுயிர் போகும்வரை
மானம் காத்தீரே.

ஒவ்வொரு கணத்திலும்
உயிர்த்துளிகள் போய்க்கொண்டிருக்க‌
உணர்வுத்துளிகள்
போய்விடாமல் இருந்தீரே.

தேசத்தாகம் உமக்குள் இருந்ததால்
தேநீர்த்தாகம் வரவில்லை.
கொள்கைப்பசி உம்மைச் சூழ்ந்ததால்
கொடும்பசி மூடவில்லை.

இந்தியாவே..
உன் தேசமெலாம் ஓடிய நீர்
இதயத்தில் ஓடாமல் விட்டதென்ன?
அகிம்சையை சுட்ட உனக்கு
அகிம்சையை சாக விடுதல் பெரிதோ?

திலீபன் சாகவில்லை.
திலீபம் சாவதில்லை.
 
 
 ஆக்கம் :யோ.புரட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக