புத்தர் சிலையை அமைக்கமுடியம் என்றால், ஏன் மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கமுடியாது??

பௌத்தர்களே வாழாத இடத்தில் பல்வேறு காரணங்களைக் கூறி விகாரைகள் அமைக்கமுடியுமாயின் ஏன் மாவீரர் துயிலுமில்லங்களை அமைக்கமுடியாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயூரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரணைமடுவில் விகாரை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இரணைமடு தமிழ் மக்களின் பிரதேசம் இல்லை எனவும், வடக்கு மாகாண முதலமைச்சரின் தேவைக்கேற்ப ஆடமுடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாகாண சபை உறுப்பினர் மயூரனால் இன்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தர்களை மேற்கோள்காட்டி புத்தர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வருகின்றர். தமிழ் மக்கள் புத்தபகவானுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோன்று இன்றும் பௌத்தர்கள் இந்துக் கடவுளர்களை வணங்கி வருகின்றனர்.

எனவே மதம் சார்ந்து எந்த முரண்பாடுகளும் இல்லாத இந் நாட்டில், சில பேரினவாதிகள் மக்கள் மத்தியில் மதவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுகின்றனர். புத்தபெருமானை வணக்கத்திற்குரிய கடவுளாக அன்றி வடக்கு கிழக்கின் ஆக்கிரமிப்பு சின்னங்களாக மக்கள் மத்தியில் தோற்றுவிக்கின்றனர். இதனை பேரினவாதிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில், ரஞ்சன் ராமநாயக்க தனது சிங்கள மேலதிக்க எண்ணத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்.

பௌத்தர்களே இல்லாத இடங்களில் விஹாரைகளை
 அமைக்க முடியுமாயின், மாவீரர்களுக்கு ஏன் வடக்கு கிழக்கில் தூபிகளை அமைக்க முடியாது? எனவே தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடாக, மாவீரர் நினைவுத்தூபிகள் உருப்பெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக