மீண்டும் இராணுவ அடாவடித்தனம் முல்லைத்தீவில் பதற்ற நிலையில் தமிழ்மக்கள்!-

மீண்டும் முல்லைத்தீவு பகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களும் இளைஞர்கள் காணாமல் போகும் சம்பவங்களும் தொடர்வதால் அங்கு மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 29.07.2016 அன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நோபேட் பெனடிட் புஸ்பராசா தேவகி என்பாருடைய வீட்டை முற்றுகையிட்ட இராணுவத்தினர், வீட்டினுள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும் மீண்டும் புலிகள் இயக்கத்தினை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இவருடைய வீட்டினுள்ளும்,தொட்டப்பகுதிகள் அனைத்திலும் தேடுதலில் ஈடுபட்டனர்.
ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மறுநாள் காலையில் மீண்டும் இவருடைய வீட்டுக்கு வந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அவருடைய மகன்களான அனோத்கிரதீஸ், புவிறீகன் ஆகிய இவருடைய புகைப்படங்களையும் காண்பித்து இவர்கள் பிரித்தானியாவில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை உருவாக்கும் சில அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றனர் எனவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் புதுக்குடியிருப்பு மக்கள் நல்லாட்சி அரசு எனக்கூறும் மைத்திரி அரசின் மீது நம்பிக்கையிழந்து போயுள்ளதாகவும் மீண்டும் பல முன்னாள் போராளிகள் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தோடு இருப்பதாகவும் புதுக்குடியிருப்பில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்
அத்துடன் கடந்த 11.04.2014 அன்று தேவகியின் கணவரான நோபேட் பெனடிட் புஸ்பராசா மற்றும் மகன் அனோத் கிரதீஸ் ஆகியோர் இரணைப்பாலை கடையில் வேலை செய்துகொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் கடத்திசெல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக