இரத்தினம் கவிமகன் எழுதிய மறக்கத்தகுமா? மேஜர் பசீலன்...

மறக்கத்தகுமா? 08.11.2016
************************
மேஜர் பசீலன்...
யாழ்ப்பாண பக்கம் பயங்கர சத்தங்களா கேட்குது எங்கட பெடியள் கோட்டையில சண்டைய தொடக்கீட்டாங்களாம். ஏதோ புதுச்சத்தம் காத செவிடாக்குதாம் என்னத்த அடிக்கிறாங்கள் என்று புரியாம திணறுதாம் இராணுவம். எங்கட பெடியள் என்னத்த புதுசா வெளிநாட்டில இருந்து இறக்கினாங்களோ? அன்றைய பொழுதில் கேட்ட வெடி அதிர்வுகளை கேட்டு மக்கள் ஒருபுறம் சந்தோசமா இருக்க யாழ்ப்பாண கோட்டையில் இருந்த சிங்களத்து கொடியவர் எங்கள் விடுதலை அமைப்பால் கோட்டைக்குள் விதைக்கப்பட்ட புது வகை எறிகணையின் வீரியத்தால் திகைத்து கிடந்தனர். சிங்களத்தலமை தன் படைகளை காத்திட முடியாத நிலையில் அதிர்ந்து கிடந்தது. கோட்டையின் ஒவ்வொரு அங்குலமும் அந்த எறிகணை அதிர்வை ஏற்படுத்தி, யார் பெயரை தான் தாங்கி நின்றதோ அவன் சிங்களத்துக்கும் இந்தியத்துக்கும் காட்டிய வீரத்தை இன்று சிங்களத்துக்கு கூறிக் கொண்டிருந்தது.
மரபுவழி இராணுவ கட்டமைப்பாக கெரில்லா அணியாக இருந்த அமைப்பு வளரத் தொடங்கிய காலம், ஒரு படையியல் கட்டமைப்பில் இருக்க வேண்டிய அத்தனை கட்டுமானங்களையும் உருவாக்கி அதன் மூலம் விடுதலை அமைப்பின் உன்னத குறிக்கோளை அடைய வேண்டிய நிலையில் அமைப்பு இருந்தது. அப்போது அதற்கான பல கட்டமைப்பு பணிகளை பொறுப்பெடுத்திருந்த கேணல் ராஜு தலமையில் உருவாக்கப்பட்ட அந்த புது பொறிமுறை எறிகணையான பசீலன் 2000.
பசீலன் என்ற அந்த உன்னதமானவனின் பெயர் தாங்கி அவனைப் போலவே வீரத்தை உரைத்து நின்றது பசீலன்2000
பசீலன்... வன்னி மாவட்டத்தின் சிங்கள இந்திய இராணுவங்கள் கேட்டு பயந்த ஒரு பெயர். எதிர்மறை போரியல் நுட்பங்களை புகுத்தி எதிரி நினைக்காத பல தாக்குதல்களில் வெற்றியீட்டிய தமிழீழ தாய் பெற்ற புனிதன். எங்கு எப்போது எப்பிடி நடக்கும் என்று எதிரியால் கணிக்க புடியாத புது நுட்பங்களை புகுத்தி எதிரியின் முடிவுக்கும் எங்களின் விடிவுக்கும் வழி தந்தவன். அவன் பெயர் தாங்கிய எறிகணையும் அவனின் போரியல் நுட்பங்களில் புது வகையாகவே எதிரியை திணறடித்தது வரலாறு. கோட்டை, மாங்குளம், கொக்காவில் என்று படை முகாம்களை தகர்த்தெறிந்து வெற்றிக்கு வழி தந்தது பசீலன் 2000 எறிகணை என்றால் அது மிகையாகாத நியம். அப்படியான எறிகணையின் நாமத்துக்கு காரணமான பசீலன் மறக்க முடியாத புலி வீரம்.
"துணிந்தவன் வெல்வான்" இது பசீலன் எடுத்த வெற்றிக்கான வழிகாட்டி. அதனால்தான் பல தாக்குதல்களில் வெற்றியை மட்டும் சுவைத்தது தமிழீழ மண். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சம்பவத்தை குறித்தே ஆக வேண்டும். சிங்களத்து படைகளுக்கு எதிரான ஒரு கிளைமோர் தாக்குதல். வழமையாக எந்த போராட்ட அணியாக இருந்தாலும் அல்லது இராணுவமாக இருந்தாலும் அந்த கிளைமோரை பொருத்திய பின் அது வெடித்து குண்டு சிதறல்கள் சிதறும் திசைக்கு எதிரான திசையில் அதாவது கிளைமோருக்கு பின்பக்கமாக அல்லது இடது பக்கமாக தாக்குதல் அணி நிலை எடுக்கும். ஆனால் பசீலன் இட்ட திட்டம் முற்றுமுழுதாக மாறுபட்டிருந்தது.
இதன் நுட்பம் எதிரியும் நன்கறிவான் எனபதை பசீலன் உணர்ந்தே இருந்தான். அதனால் கிளைமோரின் வெடிப்புத் திசையில் அந்த தாக்குதல் அணி நிலை எடுக்க வேண்டும். என கட்டளை வழங்குகிறான். கிளைமோர் வெடித்த பின் எந்த பகுதியை எதிரி பாதுகாப்பு வலையமாக கருதி நிலையெடுப்பானோ அந்த பகுதியை கொலைவலையமாக்கி முழு இராணுவத்தையும் இல்லாமல் செய்தல் வேண்டும். இதுவே பசீலனின் புது முறை தாக்குதல் திட்டம்.
எதிரி இதை அறிய வாய்ப்பே இல்லை. சிறு தவறு நடந்தாலும் போராளிகள் அனைவரும் இழக்கப்படுவர். என்ற பாரிய ஆபத்து நிறைந்து கிடந்த போதும் பசீலன் திட்டத்தை மாற்றவில்லை. கனகச்சிதமாக தாக்குதலை நடத்துகிறது பசீலனிடம் வளர்ந்த போர்வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ் தலமையிலான அணி. பகைவன் திணறிப் போக வெற்றியோடு தளம் வந்தனர் புலிகள்.
இவ்வாறான தாக்குதல் திட்டங்களின் சொந்தக்காரனான பசீலன் இந்திய வல்லாதிக்கத்தின் எதிர்பார்ப்புக்களை தகர்க்கும் ஒரு ஈழத்தின் சுமைதாங்கியாகவே தன் தேச விடுதலைக்காக துணிந்து நின்றான். 1987 ஆம் வருடம் இந்திய வல்லாதிக்கத்தின் சிங்களத்துடனான கை கோர்ப்புக்கு பின் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வடிவங்களில் சில மாறுதல்கள் வந்த போதும். கோப்பாய் பிரதேசத்தில் இந்தியத்தை எதிர்த்து நின்ற பசீலன் இந்திய போர் டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி இந்தியத்துக்கு விடுதலை அமைப்பின் உச்ச போர் தந்திரத்தை கூறி அச்சமூட்டினான்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றின் தடை நீக்கியாகவும் தேசத்தின் தலைமகனின் நம்பிக்கையாளனாகவும் எதிர் படையின் கனவுகளை சிதைத்து சாவின் வாசலை திறந்து விடும் ஈழத்தின் திறவுகோலாகவும் வலம் வந்தவனின் தாக்குதல் நடவடிக்கை ஒன்று அவனை மேஜர் பசீலனாக எம் மனங்களில் இருத்தி சென்றதை ஏற்க மனம் தவிக்கிறது.
முல்லைத்தீவில் நடந்த இந்தியத்துக்கு எதிரான அந்த தாக்குதலில் இந்தியத்தின் எறிகணை சிதறலை தாங்கி எந்த மண்ணை நேசித்தானோ அந்த மண்ணை 1987 கார்த்திகை திங்கள் 08 ஆம் நாள் வித்தாகி போனான். அவன் நினைவுகள் அழியாத நடைப்பிணங்களாக அலைகிறோம் தாயகம் கடந்த வெறும் ஏதிலிகளாக நாம்...ஆக்கம் இரத்தினம் கவிமகன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக