உன் அன்னை .கவிதை நெடுந்தீவு தனு

மரணமென்றால்
அத்தனை
பற்றுனக்கு.
எத்தனை தடவைகளில்
மரணத்தோடு
நீ விளையாடி
வென்றிருப்பாய்.
ஒரு தடவை கூட
பின்வாங்கியதில்லை
நீ...
எத்தனை முட்கள்
உன் பாதங்களை கிழித்திட்டாலும்
முன் நகர்தலிலும்
நிதான அடி வைத்தலிலுமே
உனது கண்களிருந்ததாம்.
இரவு நேர தூக்கங்களை
அதிகமாக நீ வெறுத்திருந்தாய்.
பகலினை காப்பதை
விட இரவினையே
அதிகம் காத்திருந்து
காதலித்தாய்...
எப்போதும்
யாருடனும் அதிகம்
பேசிக்கொள்ளவே மாட்டாய்.
வீட்டில் எப்படியோ
அப்படியே
புகுந்த வீட்டிலும் நீ.
குண்டுப்பைகளோடே
அதிகம் பேசிக்கொள்வாயாம்.
சன்னங்களில்
உள்ளார்ந்த ஈர்ப்புனக்கு.
அவைகளின் மொழிகூட
நீ அறிந்து கற்றிருந்தாய்.
பல தடவை சிரித்துமிருக்கிறாய்.
சில நேரங்களில்
அழுதுமிருப்பாய்...
எனக்கு தெரியும்
போர்க்களம்
எப்படியானது என.
எதிரிகளின் நெறிமுறை தவறிய
போராட்டமும் எவ்வாறானதென...
உன் நண்பன் சொன்னான்
மரணம் உன்னுடன்
விளையாடி கொண்டிருக்கையில்
நீ சன்னங்களை
நெஞ்சினிலே
ஏந்திக்கொண்டாயாம்.
ஆனால் ஓர் தடவை கூட
அம்மா என்றதில்லையாம்.
உன் உதடுகள்.
ஈழம்
உன் அன்னையானதால்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக