மாவீரர் தின நிகழ்வுகள் நல்லூரில் : அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு !


தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணம் நல்லூரில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீர்ர் தின நினைவு நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோயிலில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.30க்கு மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் என்றும், அதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவு தினத்தைக் கொண்டாட புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் முன்வரும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து நினைவுகூர தாம் தயார் எனத் தெரிவித்த அவர், மாவீர்ர் துயிலும் இல்லத்தில் மாத்திரம் அஞ்சலிகூர வேண்டும் என்ற அவசியம் இல்லையெனவும் தெரிவித்தார்.
புலம்பெயர் நாடுகளில் பெரும் எடுப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துபவர்கள், அந்த நிகழ்வுகளை சிக்கனமாக செய்து அதன்மூலம் மீதப்படுத்தப்படும் நிதியை, மாவீரர் குடும்பங்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துமாறும் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக