மனதில் எ(இ)ன்றும்.கவிதை நெடுந்தீவு தனு

குலவிளக்கின்
தியாகங்களை நாங்கள்
சொல்லியே ஆகவேண்டும்.
அதற்காக நாம்
ஆயுததாரிகளால்
சுற்றிவளைக்கப் பட்டாலும்
பரவாயில்லை...
மூத்தவள்
மூர்க்கமானவள்.
எதிலும் முன்கோபக்காரி.
படிப்பில் பற்றில்லாதவள்.
போராட்டங்களில்
அதிக நாட்டம் கொண்டவள்.
அந்தநாளும்
வழமை போலவே
விடிகையில்
படுக்கை பாயில் அவள் இல்லை.
சுயவிருப்பம் எழுதி முடித்த
காகிதமே சாட்சி சொல்லிற்று....
பயிற்சிகளில்
அதிக திறமையானவளாம்
சக போராளி
தினமும் சொல்வாள்.
கடல் என்றால்
அலாதி பிரியம்
அவளுக்கு.
மீன்களோடு பேசிடவும்
அலைகளோடு போராடவும்
அதிகம் கற்றுக்கொண்டவள்.
அரன்களை தகர்ப்பது
என்றால்
மிகவும் பிடிக்குமாம் அவளுக்கு...
எப்போதும்
துப்பாக்கியோடே நடைபயில்வாள்.
சில சமயங்களில்
துப்பாக்கியுடன் பேசிக்கொண்டிருப்பாள்.
அவள் துப்பாக்கி
ஒருமுறைகூட
கொள்கை முறை தவறியதில்லை.
துப்பாக்கிக்கும் அவளுக்குமிடையிலான
காதல் பலதடவை
பாராட்டுதல்களையும்
பெற்றிருந்தது...
குப்பி
அவளின் இன்னோர் இதயம்.
இதயம் காயப்படும்
பொழுதுகளில் எல்லாம்
குப்பி தடவியே
கொள்கை உரைப்பாள்.
குப்பிக்கும் அவளுக்கும்
அதிக நெருக்கம்...
ஆனால் அவள் ஒருபோதும்
குப்பியை எடுத்ததே இல்லை.
கழுத்தில் தொங்கினாலும்
கரங்களில் பலமும்
மனதில் உறுதியும்
உள்ளவரை துப்பாக்கியையே
அதிகம் காதலித்தாள்...
இறப்பு விதி
தெரிந்திருந்தும்
இறுதிவரை சமராடினாள்.
விதிமுறை மாறாமல்
முன்னகர்ந்தாள்.
தோட்டாக்கள் காயப்படுத்தியும்
மூச்சுள்ளவரை களமாடினாள்.
உன் துப்பாக்கி
உன்னாலே
வழியனுப்பப்பட
முதல் தடவை
குப்பியுடன் உரையாடினாள்.
மூத்தவளே
குலமகளே
வணங்குகின்றோம்.
மனதில் என்றும்...

ஆக்கம்  நெடுந்தீவு தனு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக