வெற்றியின் முத்துக்கள்.கவிதை தனுக்குட்டி

மாண்டு போன
ஆண்ட பரம்பரையின்
வழித்தோன்றல்களில்
வந்த வீரம்
சொரியும் - எம்
வெற்றியின் முத்துக்கள்.
அடிமை விலங்குடைத்து,
எதிரியின் முகம் கிழித்து,
தமிழ் மண்ணின் மானத்தை
ஊருக்கு உரத்துச் சொன்ன
செம்மல் செல்வங்கள்
தாயில் கருவாகி,
தாய் மண்ணில் பயிராகி,
தமிழுக்கே உயிர் கொடுத்த
உத்தம வீரர்கள்.
எங்கள் கனவுகளை
நினைவாக்க...
தங்கள் கனவுகளைத்
தொலைத்தவர்கள்.
உங்கள் முகம் தேடி...
காந்தள் மலர்களும்
தன் கண்விழித்துத்
தவமிருக்கும்
கார்திகை மாதத்தின்
கடவுள் நீங்கள்.
உங்கள் கல்லறைகளில்
பட்டுச் சிதறும்,
மழைத்துளிகள் கூட
கண்கள் கலங்கி
கண்ணீர் வடிக்கும்.
மண்ணுக்குள் புதையும்
ஒரு துளி நீரும்
உங்கள் மூச்சில் கருவாகி,
வேர்களில் விழுதாகி,
விடுதலையின் வீச்சாகி,
நாளை....
வெற்றியின் வீரியம் பேசும்.
"மா" வீரனை
மரணம் தீண்டுவதில்லை.
ஆண்டாண்டு காலம் - ஆனாலும்
நீங்கள் காவியமான
கதைகளை,
எந்தன் மூச்சு உள்ளவரை
என் கவித்துளி,
இனி வரும் காலங்களிலும்
எடுத்துச் சொ(செ)ல்லும்....!

ஆக்கம்  அன்புடன் தனுக்குட்டி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக