ஐங்கரன்- எழுதிய கார்த்திகை - கண்ணீர்த்திரை.....

காலம் காலமாய்
அடிமைப்பட்ட ஓர் இனத்தை
தன் காலத்திலேயாவது
தலை நிமிர்ந்து வாழவைத்த
தன்மானத் தமிழன்
தரணியில் மலர்ந்த மாதம் !!!

தலைவனின் பெருங்கனவுக்காய்
தன்னுயிர்களைத் தியாகம் செய்த
மாவீரச் செல்வங்களை
மனதில் ஏந்தும் மாதம் !!!

காட்டிக் கொடுத்தவனெல்லாம்
கண்ணியவானாக வலம்வர
கடைசிவரை களத்தில் நின்றவர்
சோற்றுக்கு வழியின்றியிருக்க !!!

மாற்று அரசியல் எனும் பெயரில்
மடையர்களாய் தமிழர்களை பார்க்கும்
கூட்டுக் குள்ளநரிகளின் கும்மாளம் கண்டு
கொதித்துப் போனவரின் ஆறுதல் மாதம் !!!

மறியலில் இருந்து வருகின்ற தமிழர்கள்
மாதக் கணக்கில் மாய்ந்து போகின்றனர்
சமகளமாடினர் சகோதரிகள் அன்று -சதைப்
பிசாசுகளுக்கு இரையாகின்றனர் இன்று !!!

அங்கு தொட்டு இங்கு தொட்டு
ஆட்டம் போட்ட காடையர் கூட்டம்
அத்துமீறி ஆக்கிரமித்து விட்டார்கள்-யாழ்
பல்கலைக்கழக வளாகத்தையும் இன்று !!!

வானத்தை நோக்கிச் சுட்ட தோட்டா
வளைந்து வந்தா உயிர் பறித்தது ?
கேட்கின்றவன் இல்லாத காரணத்தால்
கேள்விக்குறியாய் ஈழமாணவர் வாழ்வும் !!!

இன்று வரும் நாளை வரும் விடிவென்று
எதிர்பார்ப்புடனேயே ஏழு வருடங்கள்.....
இந்த வருடமும் கார்த்திகை வந்தாச்சு -இனி
கண்ணீரில் இம்மாதம் கரைந்து மறையும் !!!

இயலாமை, மற்றும்
இன ஒற்றுமையின்மை
முடியாத தொடர்கதையாய்
முண்டியடிப்பது குறைச்சலில்லை !!!
 
ஆக்கம் -ஐங்கரன்-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக