சுவிஸ் நாட்டில் மாவீரர்களின் வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் களப் பலியான பெண் போராளி 2ஆவது லெப் மாலதி உட்பட 5 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வானது நேற்று (16) லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெற்றுள்ளதாக தமிழர் ஒருங்கிணைப்புகுழு அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வானது சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதன் போது சுடரேற்றலுடன் தமிழீழ தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடிய மாலதியின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மக்களால் மலரஞ்சலி, சுடர்வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் வணக்கப் பாடல்கள் கலை பண்பாட்டுக் கழக இசை கலைஞர்களால் இசைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவிதை, நினைவு உரை, சிறப்புரை இடம்பெற்றதுடன், நீதிக்கு முன்னால் எனும் கருப்பொளைக் கொண்ட எழுச்சி நாடகமானது நிகழ்வின் சிறப்பம்சமாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரமும் இடம் பெற்றுள்ளது.

தமிழீழப் பெண்களின் புரட்சிக்கு வித்திட்டவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக