கவிமகன்.இ எழுதிய விழி திறக்காதே மாவீரா...!

மாவீரரே...
கொஞ்சமும் கண்
விழித்து பார்க்காதீர்
நீங்கள் கனவாய் கண்ட
தேசம் பூக்களாய்
பூத்து குலுங்குது...

அழகான ரோசா செடி
வான் நோக்கி
நிமிர்ந்திருக்குது
பூக்களின் வாசம்
நாசியை துளைக்குது
ஆனாலும் அது
உங்களுக்கு வேண்டாம்

தேசத்தின் பூஞ்செடிகளின்
அழகை நீங்கள்
அறிய வேண்டாம்
அவன்றின் மீது ஊற்றப்பட்டு
கிடக்கும் வஞ்சக
குளிர்மையை உணரவே
வேண்டாம்

நீங்கள் நின்மதியாய்
உறங்குங்கள்
ஆழ கிடங்கு படுக்கைக்குள்
சுருண்டு கிடக்கும்
உங்களுக்கு எதுவுமே
தெரிய வேண்டாம்

பச்சை வர்ணம் பூசப்பட்டு
சூரிய ஒளி கீற்று புகுத்தப்பட்டு
பருவக்காற்றில் பறந்த
மகரந்தங்கள் பரவி
பூஞ்சோலை
உருவாக்கப்பட்ட போது
நாங்கள் கிளிசல்
துணியாகினோம்
அதையும் நீங்கள்
அறிய வேண்டாம்

வந்தவன் பூக்களை
நுகரத் தொடங்கிய போது
நாம் வெறும் பேச்சானோம்
அப்போதும்
கிளறப்பட்டுக் கொண்டிருந்த
பூந்தொட்டிகளுக்கு கீழ்
உறைந்து கிடந்த
தமிழனை யாரும்
அறியவே இல்லை

உங்களுக்கு மட்டும் தான்
தெரியும் அதன்
வேர்களிடையே நீங்கள்
ஊற்றிய குருதியின் அளவு
நீங்கள் எருவாக்கிய
உங்கள் உயிர்களின் கணக்கு
நீங்கள் விதைத்த
வித்துக்களின் தொகுப்பு

நீங்கள் விழி திறக்காதீர்கள்
நின்மதியாய் தூங்குங்கள்
அப்போதுதான் நிலத்தின் மேல்
அரங்கேற்றப்படும்
சுழல்முறை விவசாய
பதனிடல்
எம் உடல்களை தின்று
சுழன்று கொண்டே இருக்கும்.
ஆக்கம் கவிமகன்.இ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக