வன்னியை எப்படி இந்த வேகமான, விவேகமான ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றப் போகிறோம்..? எழுத்தாளர் திருக்குமரன்

யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் சிங்களவரால் இப்போதைக்கு அவ்வளவு விரைவாக குடியேறி இனப்பரம்பலை மாற்றமுடியாது. 
காரணம் அங்கு எல்லாமே துண்டாடப்பட்ட தனிநபர் நிலங்கள் என்பதுடன் சாராசரிக்கும் கீழான பொருளாதார நிலையுள்ள சிங்களவர்களால் அந்த விலைக்கு நிலங்களை வாங்கிக் குடியேற முடியாது.
ஆனால் வன்னி பெருநிலப்பரப்பு அப்படியல்ல, அரசாங்கப் பத்திரங்களை உடைய நிலங்களும், குளங்களும் அங்கு இருப்பதால் காடுகளை அழித்து சேனைப்பயிற் செய்கை செய்து பிழைக்க சிங்களவர்களால் முடியும். அவர்கள் குடியமர்த்தப்படும்இடத்துக்கருகில் ஒரு பெளத்தகோயில், வைத்தியசாலை, பள்ளிக்கூடம் கட்டினால் போதுமானது.
வன்னிப்பெருநிலப்பரப்பின் எல்லைகளை ஊடறுத்து ஆர்ப்பாட்டமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களை விரைவுபடுத்தும் நோக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விரைவான போக்குவரத்துத் திட்டத்தின் ஓர் அம்சம் தான் ஆளில்லா ஊரில் மீள அமைக்கப்பட்டுள்ள #ஆனையிறவுபுகையிரத நிலையம், அத்துடன் எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்கப்பட உள்ள உப்பளம் மற்றும் கடல் சார்ந்த தொழில் வாய்ப்பையும் குறிவைத்தே இந்த புகையிரதநிலையம் அமைக்கப்படுகிறது.
தமிழர்கள் செறிந்து வாழ்ந்த ஈழத்தின் வரைபடத்தைப் பார்த்தீர்களென்றால் வடக்கிலிருந்து கிழக்கிற்கு எந்தவொரு சிங்களக் கிராமங்களையும் ஊடறுக்காமல் செல்லக் கூடிய கடற்கரைவழி நான்கு வழி போக்குவரத்துப் பாதையுண்டு. 
ஆனால் அதன் தாற்பரியத்தை உணர்ந்து அந்தப்பாதையை அமைப்பதற்கு எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் குரல் எழுப்பியதில்லை. சிங்கள அரசும் அப்படி ஓர் போக்குவரத்துப் பாதையை அமைக்காமல் வடக்கிலிருந்து கிழக்கிற்கு செல்லும் எந்தவொரு பாதையும் சிங்களக் கிராமமொன்றை ஊடறுத்துச் சுற்றிச் செல்லுமாறே அமைத்தார்கள். இப்போது எல்லைகள் தாண்டி உள்ளே பெருமளவில் சிங்களவர்கள் குடியேறிவிட்டதால் கடற்கரைச்சாலை போக்குவரத்துப் பாதை அமைப்பதில் இனி அவர்களுக்கு சிரமொன்றுமில்லை. தேவையும் இருக்கிறது.
எங்களிடம் கொஞ்சமாய் மீந்திருக்கும் பெரிய நிலப்பகுதியான வன்னியை எப்படி இந்த வேகமான, விவேகமான ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றப் போகிறோம்..?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக