கவிஞர் ரி.தயாநிதி எழுதிய உண்மையாய் நீ எழு ஊமையாய் இருந்திடாதே..!

தினம் உன் அதிகாலையின்
எழுகையில் ஒரு கணம் உன்
மனம் விரித்து எங்கள் உயிர்
மண்ணையும் மக்களையும்
நினைந்துருகு! கசிந்து கண்ணில்
நீர் சொரியும் வரை கலங்கு.!

விலங்கு போல் ஏதும்
விளங்காமலே திறந்த
வெளிச் சிறையில் சிதையும்
அவர் வாழ்வுக்கு வழி சமை.
வலி சூழ்ந்த வாழ்வில்
வரைந்திட முடியாத
வாக்கியங்களின் கண்ணீர்
தொகுப்பு தோப்பாகும்.

அழுகையில் ஒரு துளி
துடைத்து நிமிர்ந்திட
ஏது வழியெனத் தேடு.
கூடு உன் நட்புக்குள் நாடு.
பாடு அவர்கள் பாடுகளை
நம்பிக்கை வை! நம்பிக்கை கொடு!

சிறு துளியை பெரு வெள்ளமாக்கு.
எங்கள் நிலப்பரப்பினை
தக்க வைக்கும் உன்னதர்களை
தலை நிமிர வை.! உண்மைக்கு
உரமிடு.! கரம் கொடு!. தொண்டனாய்
நீ மாறு.! மாற்றங்களை உண்டாக்கு.
ஏற்றங்களுக்கு வழி சமை
சாமி தொழுகைக்கு மேலான
பணியிது! பயன் படுத்து.!

சுற்றங்களை சுகமாக்கு
பெற்றவர் இல்லாப் பிள்ளைக்கு
கல்வி கற்றிட கை கொடு
ஆளுக்கொரு பிள்ளையை
பாரமெடு!. தர்மம் உன்
தலை காக்கும்!. ஆடிக்
கலவரத்தை முன் நிறுத்து.!

நினைவுகள் கருகிடாதிருக்க
உயிர் கொடு! உண்மையாய்
நீ எழு..!ஊமையாய் இருந்திடாதே.!
 
 ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக