நினைவாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இம் மாதம் வீரச்சாவடைந்த மாவீர்களை நினைவுகூர்ந்து, மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ மாவீரர் நினைவாலையத்தில் உணர்வுபூர்வமாக (25-06-2016 சனிக்கிழம ) நடைபெற்றது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான, தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக நீண்டது. அந்த உன்னத இலட்சிய பயணத்தில் சாதனைகளும், அற்புதங்களும், தியாகங்களும் கொண்டு ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் வியத்தகு வண்ணம் இன்று உலகின் முன் நிமிர்ந்து நிற்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களினதும், இரண்டு இலச்சம் வரையிலான கொல்லப்பட்ட மக்களதும் உன்னதமான குருதியால் எழுதப்பட்டிருக்கிறது.
தமிழீழ மண்ணின் விடுதலைக்கு காப்பரணாக நின்று களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், விடுதலைப் போராட்டத்திற்கு தோளோடு தோள் நின்று பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி மண்மீட்புப் போரில் சொல்லொனா இன்னல்களையும், வேதனைகளையும், வடுக்களையும் சுமந்து போரில் சாவடைந்த மக்களையும் நினைவுகொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகிறது.
பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்று, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வளர்ந்துவரும் உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒவ்வொரு மாதமும், மண்மீட்புப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அம் மாதத்தில் போரில் சாவடைந்த மக்களையும் நினைவுகொள்ளும் வகையில் மாதாந்த வணக்க நிகழ்வை ஒழுங்கமைந்து உலகமே உறைந்து போன மிகப்பெரும் இனப்படுகொலையை சந்தித்த தமிழரின் துயரம் சுமந்த மாதமான “மே” மாதம் முதல் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைவாக (யூன்) ஆனி மாதத்திற்குரிய நினைவு வணக்க நிகழ்வு 25-06-2016 சனிக்கிழமை  மாலை 5:30 மணிக்கு ஒக்ஸ்பேட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது (மாவீரர் நினைவாலையம்) (World Tamils Historical Society, OX17 3NX)
இன்று நடைபெற்ற வணக்க நிகழ்வில் இம் மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களதும், போரில் கொல்லப்பட்ட மக்களதும் குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் அவர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தி நினைவுகூர்ந்தனர்.
இன்று நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு பொதுச் சுடர் ஏற்றவுடன் ஆரம்பமாகியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதன்மை போராளிகளில் ஒருவரும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நெருங்கிய நண்பருமான திரு.சத்தியசீலன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றிவைத்திருந்தார். பிரித்தானிய தமிழர் பேரவையின் நிறுவுணர்களில் ஒருவரும், பிரித்தானிய தொழில்க் கட்சி உறுப்பினருமான சென்.கந்தையா அவர்கள் பிரித்தானிய தேசியக் கொடியை ஏற்றிவைத்திருந்தார்.
நிகழ்வில் மாவீரர்களுக்கான நினைவுரையினை போராளி திரு. வெற்றி அவர்கள் நிகழ்த்தியிருந்தார். மாவீரர் நினைவுசுமந்த பாடல்களும் இளையோர்களால் பாடப்பட்டது உணர்வுபூர்வமாக அமைந்தது.
மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் மாதங்களில் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது, மாதாந்தம் நடைபெறவுள்ள மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும், உணர்வோடும், உரிமையோடும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக உறுதி ஏற்புடன், தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.
நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக