நான் போராளியானது தான் என் தவறு!

நான் போராளியானது தான் என் தவறு

யுத்தம் ஓய்ந்த பின்னரான இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழே அதாவது அன்றாட வாழ்வாதாரத்தைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் வாழும் மக்களில் 90% வீதமான மக்கள் யார் என்று விசாரித்துப் பார்த்தால் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய குற்றங்களுங்காக சிறையில் வாடுவோரின் குடும்பங்களும் தான் என்கிறது வசந்தம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு ஒன்று.
இதிலிருந்து சற்று மாறுபட்டு புலிகள் அமைப்பில் இருந்த 15%வீதமான போராளிகள் இன்றைய செல்வந்தர்களாக இருக்கின்றனர் என்கிறது இலங்கையின் சுயாதீனத் தொலைக்காட்சியான. Eye தொலைக்காட்சி. உண்மை நிலைப்பாடு என்னவென்று பார்த்தால் புலிகள் அமைப்பு தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்ட நாளிலிருந்து அதிலே நாட்டுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்துப் போராடிய போராளிகள் சமூக வாழ்வியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் செய்த மாபெரும் தவறு மக்களுக்காகப் போராடியது மட்டும் தான். அவர்கள் தமது உறவுகள் தமது குடும்பம் என்று இருந்து தமது கல்விச் செயற்பாட்டைத் தொடர்ந்து தங்களது திறமைக்கேற்ற உத்தியோகத்தில் இருந்திருந்தால் சமூகம் அவர்களை மதித்திருக்கும்.
கோயில் திருவிழா ஒன்றில் கச்சான் விற்றுக் கொண்டிருந்த ஒரு முன்னாள் போராளி அதுவும் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் அவரிடம் போய் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்கிறார்.
“இந்தத் தொழில் உங்களுக்கு எப்படி இருக்கிறது”
முகத்தில் அறைந்தது போல் பதில் வந்தது
” இது நிறைந்த நிம்மதியைத் தருகிறது இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடலும் குற்ற உணர்வும் இருக்கத் தான் செய்கிறது.
என்ன நெருடல்? என்ன குற்ற உணர்வு?
நாட்டுக்காக மக்களுக்காக என்று என் கல்வி உறவுகள் அனைத்தையும் உதறி விட்டு என் மக்கள் நின்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக மழை வெயில் பனி அத்தனையினையும் தலையில் சுமந்து ஏறியிறங்காத காடுகள் மேடுகளில்லை உடலில் தாங்காத விழுப்புண்களில்லை. அப்பிடி எல்லாம் கஸ்ரப்பட்டதை விட இந்தத் தொழில் எனக்குத் திருப்தியாக இருக்கிறது. நின்மதியைத் தருகின்றது. ஏனெனில் இது நான் வாழ வேண்டும் என்பதற்கான போராட்டம்.
ஏதோ நெருடல் என்றீர்களே? ?
ஆமாம் இப்பிடியான ஒரு தொழிலை செய்வதற்கு நான் என் கல்வியை இடைநிறுத்திக் கொண்டது தானே உண்மைக் காரணம் அண்ணா நமக்கு பாடசாலைக் கல்வியை விட பன் மடங்கு அதிகமாகவே படிப்பிச்சார் ஆனால் அது இங்கே எடுபடாது எங்களுடைய அமைப்பில் சத்திரசிகிச்சை நிபுணராக இருந்த போராளி மருத்துவர் இப்போது மாடு தான் மேய்க்கிறார் . அதனால் தான் மனதுக்குள் நெருடல் என்றேன்.
அப்போ குற்ற உணர்வு….?
ஓமோம் ஒட்டு மொத்தத்தில் நான் போராளியாகியிருக்கவே கூடாது பாருங்கோ. இந்த நன்றி கெட்ட சமூகமும் மக்களும் சந்தர்ப்பத்துக்கேற்ப மாறும் பச்சோந்திகள் இதுகளுக்காக நான் என் வாழ்வை அழித்தேன் என்பதே நான் செய்த மாபெரும் குற்றம் என நினைக்கிறேன் .
அவர் தன் வியாபாரத்தைக் கவனிக்கிறார் எதையும் எழுத மனமின்றிப் பத்திரிகையாளன் நகர்கிறான் ஏதோ சிந்தனையில் மறுபடியும் அவரிடம் வந்து அண்ணே வேற யாரிட்டயும் இப்பிடி சொல்லாதையுங்கோ நமக்கு அது நல்லதல்ல.
கச்சான் வியாபாரி சற்றுக் கோபமாக கேட்கிறார் அப்போ நீங்க யார்?
மெலிதான புன்னகையுடன் நானும் உம்மை மாதிரி ஒருத்தன் தான் எனக்குள்ளும் அந்த வலி இருக்கத்தான் செய்கிறது.
இதை எழுதி ஒரு 200 ரூபா காசு வாங்குவதற்கு பிச்சை எடுப்பதே மேல் தம்பி இனியாவது துணிச்சலாக நம்ம குடும்பம் உறவுகள் என்று வாழுவம் மீறினால் மீண்டும் இதனை விட மோசமான நிலையைத் தான் சந்திப்போம்.
இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு தூக்கி வாரிப் போட்டது போல இருந்தது.எதுவுமே கேட்காதது போல எழுந்து நடந்து விட்டேன்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக