‎ஈழத்துப்பித்தனின் ‬சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்

மீண்டும் மீண்டும் உருவேற்றி
மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
சொல்லவும் மெல்லவும் முடியாமல் 

உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
அணையாமல் காப்பது நம் கடனே


அடையாளம் அத்தனையும் தொலைத்து
அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் 
எங்கள் அன்னைத் தமிழீழ பூமி
உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு

இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
இல்லாமல் செய்தனர் அதைக் கூட
தினம் அங்கு தடம் அழித்து அழித்து
திருவிழா பூமியாய் மிளிருது இன்று
பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு

கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட 
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்

மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று

இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே
உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம்.

ஆக்கம் ‎ஈழத்துப்பித்தன்‬

0 கருத்துகள்:

கருத்துரையிடுக