சிந்துவெளியில் எங்கள் ஈழம்!….. – வருணகுலத்தான்

ஈழம் என்பது தூயதமிழ்சொல்லாகும். கிறிஸ்துவிற்கு முன்னும்பின்னுமான காலத்தில் ஈழம்என தனியான பிரதேசம் இருந்ததைக் காட்டும் ஆதாரங்களாக சங்க கால இறுதியில் எழுந்த நூலான ‘பட்டினப்பாலை’ யின் புகழ்பெற்ற 190 – 191ம் அடி களில்
கங்கை வாரியும் காவிரிப்பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்!…
என இலங்கையானது ஈழம் என்றே குறிக்கப்டுகின்றது. இதனைவிட கிறிஸ்துவிற்குமுன் மூன்றாம் நூற்றா ண்டை சோந்த கல்வெட்டொன்று அநுரதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் காணப்படும் வசனத்தொடர் பின்வருமாறு….
ஈ(இழ…பரத்…தில்வாழும்…சமண…என்னும்…தமிழன்…
செய்வித்…தமிழ்க்குடும்பிகனின்…மாளிக…
(S.Paranavithanne Inscription of Ceylon vol.1 page 7)
மேற்குறிப்பிட்டவை போன்று தென்னிந்தியாவின் திருப்பெருங்குன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்றில்
எரு..கா..டுர் ஈ(இ)ழ குடும்பிகன் பொலாலையன் செய்தா ஆய்சயன் நெடு… சாதன்
(EarlyTamil Epigraphy page 93 Iravatham Mahadevan)
எனவும் காணப்படுகின்றது. எனவே இச்சான்றுகளின் மூலம் கிறிஸ்துவிற்கு முன்னும்பின்னுமான காலத்தில் ஈழம் என்னும் பிரதேசம் இருந்துள்ளதும் அப்பிரதே சத்தை ஆள்பவன் எனும் காரணத்தால் அவ்வரசன் ‘ஈழாளன்’ அல்லது ‘ஈழராசா’ என அழைக்கப்பட்டுள் ளமையும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
ஆரம்பம் முதல் இலங்கையானது ஈழம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடலில் மூழ்கிப்போன குமரிக்கண்டத்தின் ஒருபகுதியாகிய ஏழ் பனைநாட்டின் எஞ்சியபகுதியே ஈழமாகும். கடலுக்குள் மூழ்கிவிடாமல் இலங்க(இலங்குதல்-தெரி தல்) நின்ற தீவாகையால் இது இலங்கும்தீவு – இலங்கைத்தீவு என்றும் இலங்கை என வும் வழங்கப்படலாயிற்று. எனினும் ஏழ்பனை நாட்டின் தொடர்ச்சியே ஈழமா கும்.(இக்கட்டுரையின் நோக்கம் கருதி இதுபற்றிய மேலதிகவிளக்கம் இங்கே தவிர்க்கப் பட்டுள்ளது) ஆரம்பத்தில் முழுஇலங்கையையும் குறிக் கப் பயன்பட்ட இச்சொல்லானது இன்று வடகிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது சோகவரலாறாகும். ஈழம் என்பதனை அடியொற்றிப் பிறந்த இலங்கா என் பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல் லான ஈழம் என்பது இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளையே இன்றுகுறித்து நிற்கின்றது.
இன்றையஉலகில் மெக்ஸிக்கோ நாட்டின் தலை நகராக மெக்ஸிக்கோசிற்றி இருப்பதைப்போல் அன்றைய ஈழத்திலும் ஈழஊர் என்னும் ஓரிடத்தை நாம் காண முடியும். இதுஇன்றைய பூநகரிப்பகுதியின் வேரவில் எனப்படும் பிரதேசமாகும். இதற்கு அண்மை யில் அமைந்நிருந்த குடா ஈழவன்குடா என அழைக்கப் பட்டது. இப்பகுதியின் இன்னொரு பிரதேசத்தின் பெயர் ஈழநல்லூர் ஆகும். ‘வரலாறுகள் மௌனமாகும்போது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக்கூடும்’. என்பதற் கிணங்க மேற்படி பெயர்கள் யாவும் ஈழம்என்னும் இடப்பெயரிற்கு சான்றாக இன்றும் விளங்குகின்றன. போத்துக்கேயர் காலத்திலும் இப்பகுதி ஈழஊர் என அழைக்கப்பட்ட வரலாற்று குறிப்புகள் எம்மிடம் உண்டு.(The tempral and Spiritul Conquest Of Ceylon – Fernao De Queyroz)
இத்தகைய ஈழ(ள)ம் என்னும் பெயர் மூவாயிரம் வருடங்களிற்கு முந்தைய சிந்துவெளி நாகரீகத்திலும் பயன்பாட்டிலிருந்ததை பின்வரும் ஆய்வுப்படம் எமக்கு அறியத்தருகின்றது. சிந்துவெளியில் வாழ்ந்தமக்களே இயற்கைப்பேரிடர்களால் தெற்கு(ஈழம) நோக்கி இடம் பெயர்ந்ததாக கூறும் ஆராய்சியாளர்கள் தொடர்ந்து அது பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழரின் நாகரீகமே சிந்துவெளி நாகரீகம் என்பதை யும் அவர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர். இவ்வழி யில் வன்னி பனை போன்ற ஈழத்தமிழரின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள இடப்பெயர்களும் அன்று சிந்து வெளியில் வழங்கிவந்திருப்பதை எம்மால் இங்குகாண முடிகின்றது. இத்தகைய அரிய இடப்பெயராய்வை புரியும் பாலகிருஸ்ணணுக்கு எமது நன்றிகள். அவரது முழுமையான கட்டுரையும் கீழேதரப்படுகின்றது.
(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ்இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர் களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர் சிந்துவெளி ஆய்வு பற்றிய தன்கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)
1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒருஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்தப்பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடி கள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக் கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச்சென்றேன்.
மானுடவரலாறு என்பது பயணங்களால் இடப்பெயர் வுகளால் ஆனது. மனிதன் ஒருஊரை விட்டு இடம் பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதியஇடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப்பெயரை அங்கே வைக்கிறான். இது ஒருபாதுகாப்பு உணர்வைத்தருகிற சமூகஉளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனிதகுலத்தின் வரலாறு.
ஈரானில் ஒருகுறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப்பெயர்கள் அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப் பதைக் கண்டேன். இதன்சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
பின்னர் தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப்பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநி லங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர் களின் பெயர்கள் அப்படியே நைஜீரி யாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக் காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிறபகுதிகளுக்கு இடம் பெயர்ந்தான் என்றும் இன்றை க்கு நவீனமரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இதுபற்றிய எனது கட்டுரை உலகஅளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.
சுமார் 9ஆண்டுகளுக்குமுன், ஒருநாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக் கப்பட்ட பகுதியில்(தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்குஈரான் ஆகிய வற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப் பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டி ருந்தேன்.நான் முதலில் தேடியபெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி முசிறி மதிரை(மதுரை) பூம்புகார் கோவலன் கண்ணகி உறை நாடு பஃறுள என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில் ஆப்கா னிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக்கொண்டே இருந்தது…
4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத்தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கி யத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.)
இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக் கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம்பெயர்ந்த பின், மிச்சம் இருந்த வர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள்மொழி யை, தனிஅடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்தஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப்பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பிவந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர் களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.
சங்ககாலப்புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்ய வில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்டகாலத்து பழையநிகழ்வுகளையும் வாய் மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை “வடவேங் கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லை யைக் கடந்தவை.
சங்கஇலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித் தேடி உண்ணும் என்றும் சங்கஇலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப்புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர்பிர தேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித்தெரிந்தது? பழையநினைவுகள், கதைகள், தொன் மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்கு களைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பலபகுதி களில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப் லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப்பயணி “வால்முடியைக் காப் பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராகஇருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)
தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார் , “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக்குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்தசெய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்லவேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம்பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல் கின்றன. மணல்மழை பாலைவனத்தில்தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங் கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக்கூறுகள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்டஇடமும் தமிழ்ச்சங்க இலக்கியம் தொட்டஇடமும் ஒன்று டன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.
தமிழனின் பழையவரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார்? என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டுபக்கங்கள்.
ஊர்ப்பெயர்கள் சாகாவரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர்பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவு பூர்வமான ஆய்வுகள், இந்தியவரலாற்றை உண்மையின் ஒளிகொண்டு மீட்டெடுக்க வழிசெய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆர்.பாலகிருட்டிணன் குடிமைப்பணியியல் அதிகாரி (ஐ.ஏ.எஸ்)
Varnakulattan Valvettithuraiyan's photo.
Varnakulattan Valvettithuraiyan's photo.
Varnakulattan Valvettithuraiyan's photo.
Varnakulattan Valvettithuraiyan's photo.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக