பதில் சொல் சர்வதேசமே...!

சர்வதேசமே...,
நான் இன்று உன்னோடு தான்
பேசப் போகிறேன்...
உன்னிடம் மட்டும் தான் இன்று
வினா தொடுக்க போகிறேன்
நீ அறிவாயா நீ யார் என்று?
நீயும் இனவழிப்பாளிதான்.
உன் மேலே நான் சான்றிதழ் குத்துகிறேன்.
மனித குலத்தின் அவல உச்சத்தின்
எவரஸ்ட் விருதுக்கு தகுதி பெற்ற
வல்லரசுகளே... நீங்கள்
காட்டிக்குடுத்து...
கலைகள் குடுத்து கருவிகுடுத்து
உலகின் மூத்த குடியை
அடி பணிய வைக்க
சிங்களத்தை தட்டிக் கொடுத்த
குற்றவாளிதான்
வீச்சுக்கள் மேலெழ
மூச்சற்று தவித்து கிடந்த
தமிழினத்தின் கருவறுக்க
வைத்த அச்சாணிகள் தான்
தமிழின் வீரத்தை, எங்களின் தியாகத்தை,
விலை மதிப்பில்லாத தமிழின் உதிரத்தை உறிஞ்சி குடிக்க முனைந்த
களவாணிக் கூட்டம் தான்
கூடி நின்று நாடி வந்த வெள்ளை புறாக்களை
உரித்து தின்ற கொடூர கொலையாளிகள் தான்
நந்திக்கடல் எங்கள் குருதியால்
நனைந்து சிவப்பாகிய போது
உன் விழியும் செவியும்
அரசியல் விபச்சாரியோடு கூடாலா கொண்டது?
சொல் சர்வதேசமே...
எங்கள் பிள்ளைகள் வன்பறிப்பாளரால்
கிழித்தெறியப்பட்ட போது உன்
உணர்வுகள் என்ன சிங்களத்தின்
பிச்சைக்காய் ஏங்கியா கிடந்தது?
ஆண்டுகள் ஏழு ஆகியே போனது
மாண்டு போனாரா மீண்டு வருவாரா
நிலையறியாது எம்மவர் இருப்பு நகருது
தீண்டிடும் வலிகளை சுமந்தவர் நாம்
எம் மீது சர்வதேசமே ஏன் நீ மௌனத்தை விதைக்கிறாய்?
ஏன் தவறிழைத்தாய்?
எம்மை சாவுக்குள் தள்ளி ஏன் ஏப்பம் விட்டாய்?
உன் தலமை வீட்டு வாசல் ஜெனீவாவில் நாம்
கூடி நின்று தீயினில் எரிந்த போது
பிண சாம்பல் தின்னும் சுடலை புழுக்களாய்
நீ ஏன் கிடந்தாய்?
எமக்கு தடை விதிக்கும் உன்னால் எங்கள் சாவுகளை கணக்கிட முடிந்த உன்னால்
எம் சாவுக்கு தடைவிதிக்க முடியாது
போனது எதனால்
உயிரற்ற உடல்களை புணரும் பன்றி கூட்டம் சிங்களத்தின்
வகையறைகளை கருத்தெடுக்கும் உன்னால்
எங்கள் கலி நிலையை கவனிக்க முடியாது கிடப்பது எதனால்?
வாயினிக்க தேனினை ஊற்றி
தேனோடு கலந்த விசத்தினை ஈழ
மண்ணுக்கு ஏன் ஊற்றி கொன்றாய்.
நாங்கள் தமிழர்கள்.
என்ற இழி நிலையோ?
மூத்தவினம் அழிவினை நோக்க வேண்டும் என்ற உயர்நிலையோ?
வருடம் இருமுறை பட்ட புண்ணாற
இனக்கொலை விசாரணை என்பாய்
சாகடித்த கொலையாளியை
சிரித்து சிகப்பு கம்பளத்தில் வரவேற்பாய்
நாங்கள் சிரிக்க முடியாது ஏக்கத்தோடு
உன் வாழ்விடம் தேடி வந்து வேண்டுகிறோம்
எங்கள் சிறகுகளை தந்துவிடு
நாம் சுயமாய் பறக்க எம்மை விடு
என்றோம்
நீயோ முன் வழியே வா என்றழைத்து
பின்வழியே
நீண்ட கூராயுதத்தால் குத்திக் கிழிக்கின்றாய்
நாங்கள் அன்று செத்து கொண்டிருந்தோம்
இன்று குற்றுயிராய் துடித்து கொண்டிருக்கிறோம் எம்மை தேடுவாரில்லை
தேற்றுவாரில்லை காணாமால் போவதுவும்
மறைமுக கைதுகளும் இன்றும்
உச்சம் கண்டு கிடப்பதை நீ
ஏன் அறியாமல் கிடக்கிறாய்?
எம்மை கை விட்டு
சாணாக்கியம் பேசுகிறாய். நல்லாட்சி மைத்திரியோடு
உன் ஊருக்கு அழைக்கிறாய்
உத்தமனாய் பழகுறாய்
எங்கள் வலிகளின் மேல் நின்று நீ
சங்கீதம் இசைக்கிறாய்
புரிந்து கொள் சர்வதேசமே...
நாங்கள் இறகுகள் வெட்டப்பட்ட
பறவையாக துடிக்கிறோம்
எழுந்து பறக்க எம்மால் முடியவில்லை
எமக்கான இறகுகளை தா என்று தானே
இறைஞ்சுகிறோம்...
உலகே நீ எம்மை ஏறி மிதிக்கிறாய்
கிடங்குகளில் திமிற திமிற போட்டு
மூடுகிறாய்
நாங்கள் அழும் குரல்கள்
நல்லாட்சி தாண்டி வெளியில் வராது
உன் பரந்த கரங்களால் முடக்குகிறாய்
நாங்கள் முனகுகிறோம்.
நாங்கள் முனகுகின்றோம்
கட்டப்பட்டு கிடக்கும் கரங்களையும்
கால்களையும் விடுவிக்க துடிக்கிறோம்
முடியவில்லை
உன்னால் போடப்பட்டிருக்கும் அடக்குமுறை
அந்த நிலக்கிடங்குகளில் அடங்க வைத்து
விழிகள் மட்டும் எங்களை மூடிய
மண்ணை நனைத்து கொள்கிறது
அந்த ஈரத்தையும் நீ இல்லாமல் செய்து
தவிக்கும் எம்மை பூண்டோடு சாய்க்கிறாய். சர்வதேசமே
யாரிடம் சொல்லியழ இந்த துயர்நாளை?
நீதான் எம் இறுதி நம்பிக்கை
உன் பார்வைக்காகவே சிதைக்கப்பட்ட எங்கள் வீர விதைகளை உன் முற்றத்தில் விதைத்தோம் நிர்வாணமாக்கப்பட்ட எங்கள் உறுதி குரல்களை உன் சந்தியலே ஒலிக்க விட்டோம்.
செத்த தாயின் முலைப்பாலை உறிஞ்சிய
சிசுவின் தவிப்பை
உன் வீட்டோரம் காட்டி நின்றோம்
பருகிய பால் ஈரம் காயுமுன்னே
சரிந்து கிடந்த சிசுவை உன் மூஞ்சைக்கு நேரே கிடத்தி சென்றோம்
எதையும் காணவில்லை உன் விழிகள்
ஆர்வமாய் எங்கள் சாவுகளை நீ
தின்று மென்றாய்
வினையை விதைத்தவன் வரைந்த வரவிலக்கணத்தில்
எங்கள் வலிகளுக்கு நாமே காரணம் என்கிறான்.
நீ சந்தோசமாய் ஏற்று
தருவான் நீதி வாங்கு அவனிடம்
என்று புது கதை புனைகிறாய் சர்வதேசமே...
புலிமகன் புகுத்திய புது கொள்கைகள் போர்குற்றம் என்கிறான் அவன்
நீ புதுவகை செய்யும் சட்டங்கள் இயற்றி
எம்மை தடுக்கிறாய்
ஏன் உலகே...?
உன் மனிதமும் உரிமையும் எங்கோ அடகு வைக்கப்பட்டுவிட்டனவா?
சுகங்கள் அற்று திறந்த சிறையில்
விலங்குகள் அற்ற விலங்குகளாய்
உயிரை மட்டும் கொண்டலையும்
எங்கள் ஏக்கங்களின் விடியல்
விடியாமலே கிடக்கிறது
சர்வதேசமே...
உன் கண்களை திறந்து பார் 
இல்லை எங்கள் சாவுகள் தான் 
நீ பசியாறும் பிக்‌ஷாக்கள் என்றால் 
எங்கள் நெஞ்சை பிழந்து வரும் குருதியாற்றில் 
நீராடி வா எங்கள் உடல்களை தருகிறோம் சுவை மிக்க பிக்‌ஷாக்களாக....
******************************************
தேச உணர்வுடன் ஆக்கம்  கவிமகன்.இ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக