பவித்ரா நந்தகுமார் எழுதிய இரவோடு இரவாக


கனப்பொழுதும் 
நினையேன்
எனக்கும் நடக்கும் என்று

இதயம் சுக்குநூறாக
செத்த உடலங்களின்
மேல் ஏறி
நடந்து வந்த வலி
மறவேன்
உடலை எமக்கு
பாதையாக்கி
மடிந்து கிடந்த 
என் உறவுகளின்
உதிரம் இன்னும்
கறையாக 
படிந்திருக்கிறது
என் பாதங்களில்


முரட்டு வஞ்சனை 
செய்து 
வகை வகையாய் 
கொன்று குவித்த 
புத்தனின் கூட்டம்
அதன் மீதேறி 
ஆனந்த தாண்டவம்
ஆட 
எம் குருதி 
மட்டுமா
ஆயுதமும் மௌனித்து 
போனதே!

இரவிரவாக
சரண்டைய மனமின்றி
போகும் உயிர் போகட்டும்
என தைரியம் 
எனக்கூட்டி
எனைச்சுமந்து
வந்த சகோதரனின்
கையை கட்டி போட்டது
என் பாவம் 
என்பேன்
களத்தில் மடியாமல்
இன்று வெற்று 
வீரவசனங்கள் 
பேசும் போது 
வெட்கத்தால் 
தலைகுனிகிறேன்

வெறிச்சோடிய 
எம் சாலைகளும்
அழுது புலம்பிய 
உறவுகளும் 
கண்ணில் நிழலாடுவதை 
காண்கிறேன் தினமும்

இரவோடு இரவாக 
வெளியேறி 
எம் மண்ணில் 
ஒழிந்து 
அயல் தேசம் வந்து
அழுது புலம்புகிறேன்
ஈழத்து மகள் எனும் 
நாமத்துடன்


ஆக்கம் பவித்ரா நந்தகுமார் 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக