மறக்கத்தகுமோ? 08.02.2017

1957 மாசித்திங்கள் 8 ஆம் நாள் தமிழீழம் என்ற தாயகம் தமிழனுக்கு கட்டாயமானது என்றும் அதற்கு அறநெறி முறைகளோ அமைதிவழிகளோ என்றும் உதவாது என்பதை புரிய வைத்த நாள். ஆயுதம் ஒன்றே எமக்கான தன்னாட்சி தனியுரிமை தாயகத்தை எமக்கு பெற்றுத்தரும் என்பதில் இளையவர்கள் உறுதி கொள்ள முதன்மை பெற்றதும் ஆயுதப்போராட்டத்தை கோடிட்டு காட்டியதும் இன்றைய நாள் தான்.
இலங்கையின் 1956இல் ஆட்சியைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கையில் எடுத்த ஆயுதம் 'சிங்கள-பௌத்த தேசியம்'. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பொறுத்தவரையில் "தனிசிங்களச்சட்டம்" என்று கூறப்படும் தனி சிங்கள மொழிமட்டும் அரசகரும மொழி என்ற புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி பெரிய வெற்றியை அடைந்தார்.1948ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின் இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என நம்பஇக்கை தரப்பட்டிருந்தது.
1949ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில்கூட இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
ஆனால் 1956 தேர்தலையொட்டி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது 'சிங்கள-பௌத்த' தேசியவாதக் கொள்கையைப் பலப்படுத்துவதற்காக சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனம் செய்வேன் என சூளுரைத்தார். அதை அவர் ஆட்சிக்கு வந்தவுடனே நிறைவேற்றினார்.
இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட புள்ளியாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 'தனிச் சிங்களச் சட்டம்' அமைந்தது.
பண்டாரநாயக்கவின் புத்துணர்ச்சியுடன் எழுச்சிபெற்ற 'சிங்கள-பௌத்த' தேசியவாதம் ' எமது விடுதலைக்கான நியாயப்பாட்டை எடுத்துக்காட்டியது.
இந்த சட்டமே அன்றைய இளையவர்களை முதன்முதலாக தமிழ்தேசிய விடுதலைக்காக ஆயுதவழி பாதையை தேர்ந்தெடுக்க இனங்காட்டியது. இந்த சட்டம் இயற்றப்பட்ட பொழுது பிரித்தானியாவின் நேரடிக்கண்காணிப்புக்களுடன் உருவாக்கப்பட்டிருந்த யாப்புக்களின் சரத்துக்களை எல்லாம் மீறியே இந்த சட்டத்தை நிறைவேற்றினார் பண்டாரநாயக்க...
அதாவது இந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சோல்பரி யாப்பில் 29(2) சரத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றது. 29(2) சரத்தானது மதச் சுதந்திரத்தைத் தடுக்கும் எந்தவொரு சட்டத்தையும்; ஒரு குறிப்பிட்ட இனத்தை, சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறைபாடுகளுக்கு அல்லது தடைகளுக்கு உட்படுத்தும் எந்தவொரு சட்டத்தையும்; அல்லது குறிப்பிட்ட இனத்தை, சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏதேனும் சலுகை அல்லது சாதகத்தன்மை அளிக்கும் எந்தவொரு சட்டத்தையும், எந்தவொரு மதநிறுவனத்தின் யாப்பையும் அதன் இசைவின்றி மாற்றும் எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் உருவாக்க முடியாது என்கிறது. இதை விட முக்கியமாக 29(2) சரத்தை மீறி இவ்வாறு குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்படுமானால் அவை வலுவற்ற சட்டமாகும் என 29(3) சரத்து கூறியது.
ஆனால் இவற்றை எல்லாம் மீறி தனிச்சிங்களச்சட்டம் என்ற புதிய வரைவு ஒன்றை தமிழினத்துக்கு எதிராக அறிமுகப்படுத்தி சிங்கள இனத்துக்கு சாதகமான விளைவுகளை உருவாக்கினார் குமாரதுங்க. இதன்மூலம் தமிழ் இனத்துக்கு பாரிய துரோகத்தை செய்தார்.
இதை எதிர்த்த அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை செய்தனர். ஆனால் போராட்டத்தை முடக்குவதற்கு அன்றைய அரசு பல முறைகளை கையாண்டது. உண்ணாநிலை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட இடங்கள் வன்முறையாளரால் அடித்து நொருக்கப்பட்டு போராட்டக்காறர்கள் அடித்து வதைக்கப்பட்டனர். அவர்களின் வாய்களில் சிறுநீரை கழித்து சிங்கள ஆட்சியாளர்களின் படு கோர முகத்தை வெளிக்காட்டினர் வன்முறையாளர்கள். அன்று தமிழர் தலைவர்களாக இருந்த ஜீ.ஜீ பொன்னம்பலம், சுந்தரலிங்கம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் எதுவுமே பலன்றறு போனது
எமது தலமைகளோ இந்தியாவை மட்டும் நம்பி இருந்தார்கள். இந்திய அரசு இலங்கை விவகாரங்களில் தலையிட்டு தமக்கு பெரும் சாதக பதிலை தரும் என்று நம்பினார்கள். ஆனால் 1958 ஆம் ஆண்டு கொழும்பில் வசித்த தமிழர்கள் வன்முறையாளர்களால் அடித்து வதைக்கப்பட்டு இனக்கருவறுப்பு ஆரம்பித்த போது, இனக்கலவரம் என்ற பெயரில் தார்ப்பீப்பாக்களில் தமிழ் குழந்தைகள் உருகிய போது இன்று எப்படி மௌனித்து இருக்கிறதோ அதே பொலவே இந்திய அரசு சத்தமற்று மௌனித்து கிடந்தது.
இந்த காலங்களில் பிறந்து நான்கு வயதாகி இருந்த தமிழீழ தேசியத்தலைவர் இவற்றை எல்லாம் கற்றுக் கொள்ளக்கூடிய வயது வந்த போது மொழிச்சட்டம் அதன் பின்பான இனக்கருவறுப்பு என்பதை எல்லாம் அறிந்து திடமாகினார். இங்கே ஏற்படுத்திய முதல் தாக்கம் அதன் பின்பான காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கான பாதையை திறந்து விட தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தம்மை அதி உன்னத இலட்சியத்துக்கான பாதையில் ஈடுபடுத்தி கொண்டார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். தமதுயிரை துச்சமென மதித்து தம் மொழிக்காக ஆயிரம் ஆயிரம் இளையவர்கள் விழி மூடி போனார்கள். தமது உன்னத இலட்சியமாம் தனித்தாயகத்துக்கான போராட்டத்தில் சிங்களத்தை எதிர்த்து நின்ற வேங்கைகள் விழி மூடினார்கள்...
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை விடிகின்ற தமிழாகி விழுதாகி நிற்கும் இந்த மாவீரர்களுக்கெல்லாம் இன்றைய நாளே போராட்ட பாதையை இனங்காட்டிய நாளாகும்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக