மறக்கத்தகுமா? மேஜர் பகலவன்


1998.02.02 கிளிநொச்சி நகரை கைப்பற்றி அதனூடாக சிங்களத்தின் சுதந்திர தினக்கொண்டாட்டத்திற்காக மக்களை கண்டி வீதியால் கொண்டுவருவோம் என்று இறுமாப்பு கொண்ட சிங்களத்தை கிளிநொச்சி நகரை அண்மிக்க கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. தமிழீழத்தை கட்டி எழுப்புவதற்காக தமது இன்னுயிர்களை கொடுத்து எங்கள் தேசத்தின் இருப்பை நிலை நிறுத்தினார்கள் மானமாவீரர்கள்.

சிங்களத்தின் அனைத்து திட்டங்களையும் உடைத்தெறியும் வல்லமை மிக்க படைத்தளபதிகள் அனைவரும் தமது அணிகளோடு காத்திருந்தார்கள். கிளிநொச்சி பரந்தன் படைமுகாமை தாக்கி அழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி சிங்களத்தின் எண்ணத்தில் தீயை வைத்தனர்.
சண்டை எமக்கு சாதகமற்று போனாலும் சிங்களத்துக்கு புலிகள் பலம் இன்னும் குறையவில்லை நாம் இன்றும் பலமானவர்களாகவே இருக்கின்றோம். உன் அதீத பாதுகாப்பு வளையங்களை தாண்டி உன் பிடரியில் கைவைக்க எம்மால் முடியும் என்ற செய்தியை சொல்லி சென்ற சண்டையாக இது அமைந்தது. இச்சண்டையில் 150 போராளிகளுக்கு மேல் களச்சாவு அடைந்தனர்.

இதில் மேஜர் பகலவன் என்ற மாவீரனும் ஒருவன். பெயருக்கேற்ற பண்புள்ளவன் தமிழீழ கலையுணர்வுகளுக்கு வெளிச்சமூட்டும் நல்ல ஒளியாளனாக பகலவன் மிளிர்ந்தான்.

சிறுவயது முதல் தமிழ் தேசியம் மீது பற்று கொண்டவனாகவும் கலைகள் மீது ஈடுபாடு கொண்டவனாகவும், நல்ல அரசியல் பேச்சாளனாகவும் இருந்தான் நாகராசா பாஸ்கரன் என்ற இளைஞன். பள்ளி காலத்தில் தமிழின் கலைகள் அத்தனையையும் வெளிக்காட்டும் ஒரு நற்பண்புள்ள மாணவன். கறுத்த உருவமெனிலும் வெண்மையான உள்ளம் கொண்டவன். வடமராட்சி மண்ணின் கரவெட்டி மண் பெற்றெடுத்த நல்ல புதல்வனாக நாகராசா மணவிணையரின் மகனாக தவழ்ந்தான் பாஸ்கரன். இரு தங்கைகள் இரு தம்பிகளின் அண்ணனாக பிறந்தாலும், தமிழீழ மக்கள் அனைவரினதும் நேசத்துக்குரிய அண்ணனாகவே வளர்ந்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு விழுதாக தன்னை மாற்ற வேண்டிய தேவையை பள்ளிக்காலத்தில் உணர்ந்து கொண்டான்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதியான சூசை அவர்களின் கீழ் வடமராட்சி பகுதி நடவடிக்கைகள் இருந்த காலம் தொட்டு பள்ளி மாணவனாக கலைத்திறன்களூடாக தனது போராட்ட பணிகளை செய்ய தொடங்கினான். திரைப்படம் தொடக்கம் மேடைப்பேச்சு, கவியாடல் , நாடகங்கள் என்று தனது போராட்ட பணிகளை கலைகளூடாக செய்து வந்தவன் அதோடு மட்டும் இருந்து விடாது தனது இயக்க வாழ்க்கையை கழுத்தில் நஞ்சை கட்டிய போராளியாக தொடங்க ஆசை கொண்டான். சிறப்புத்தளபதி சூசை அவர்களின் நெறிப்படுத்தலில் பகலவன் என்ற பெயரைத்தாங்கி விடுதலை பாரத்தை சுமக்கும் பெரு விருட்சத்தின் விழுதாக பகலவன் மாறிப்போனான்.

சிறிது காலத்திலேயே கலைபன்பாட்டுக்கழகத்தின் வடமராட்சி கோட்ட பொறுப்பாளனாகி எமது கலையுணர்வுகளை வளர்க்கும் பெரும் பணியை செய்து வந்தான் பகலவன். தமிழீழ கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை அண்ண தொடக்கம் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணை முதல் தேசியத்தலைவர் வரை கலையுணர்வுகள் மூலம் கவனத்தை பெற்றவனாக தனது பணியில் இருந்தான் பகலவன். அடிக்கடி தேசியத்தலமை தனிப்பட்ட ரீதியில் சந்திப்புக்கள் மூலம் கலை பண்பாட்டை கட்டி எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்திய போதெல்லாம் அதற்கு செயல் வடிவம் கொடுத்த பெரு வேங்கை.

சிங்களத்தின் கைகளில் யாழ்ப்பாணம் வீழ்ந்த போது நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்தும் வன்னிக்கு நகர்த்திய புலிகளின் அணியில் பகலவனும் நகர்ந்திருந்தான். பரப்புரைகள், ஆற்றுகைப்படுத்தல்கள் என்று வன்னியில் தொடர்ந்த இயக்கப்பணிகள் அனைத்திலும் ஒரு மக்கள் சேவையாளனாக மக்களோடு மக்களாக நிற்கும் தோழனாக நின்றான். அவனை சிறந்த கலையாளனாக இனங்காட்டியது அவன் நடித்த திரைப்படமான "திசைகள்வெளிக்கும்" சமூகவியல் முழு நீள திரைப்படம். இவ்வாறான கலையுணர்வு மிக்க போராளி சண்டைக்கான தருணத்தை எதிர்பார்த்திருந்த போது,

கிளிநொச்சி பரந்தன் இராணுவ முகாம் தகர்ப்பு நடவடிக்கைகளுக்காக அணிகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆயுத தளபாட மருத்துவ வழங்கல் அணி ஒன்றுக்கான வேலை இவரிடம் கொடுக்கப்படுகிறது. சண்டை அணிகளுக்கு தேவையான ஆயுத வழங்கல் மற்றும் மருத்தவ வழங்கல் போன்றவற்றை ஒழுங்கு படுத்துதலே இவர்களின் பணி.

ஒரு சண்டைக்கு தேவையான வளங்கள் தடைப்படும் போது அந்த சண்டை அணி வென்றதான சரித்திரம் உலக போரியலில் இல்லை. அதே போலவே எமது படையணிகளுக்கு தேவையானவற்றை தேவையான இடங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி அவர்களுக்கான சகல வளங்களையும் நிறைவுபடுத்த வேண்டிய முக்கிய பணி இவர்களுடையது. ஒரு ஆயுத ரவைப்பெட்டி கிடைக்க வேண்டி இடத்திற்கு போய் சேரவில்லை என்றாலும் அந்த சண்டையின் போக்கே மாறிவிடும் அத்தகைய முக்கிய பணியில் இருக்கும் வழங்கல் அணியினரே எதிரியின் முக்கிய இலக்குகளும் கூட. அத்தகைய முக்கிய பொறுப்புடன் சண்டைக்கு சென்ற யான் பகலவன்.

சண்டை தொடங்கி குறிகிய நேரத்திலையே களத்தில் இருந்து பின் கொண்டுவர வேண்டிய காயமடைந்த போராளிகளை நகர்த்தி கொண்டு மருத்துவ தேவைகளை நிறைவேற்றி கொண்டிருந்த போது, நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போல சிங்களத்தின் விமான மற்றும் எறிகணை செலுத்திகள் இவர்களது இலக்கை இனங்காணுகின்றன.

ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாக மருத்துவ உதவிகள் மற்றும் வழங்கல் அணியினர் மீது சிங்களம் பெரும் தாக்குதல் ஒன்றை செய்கிறது. அங்கு வீழ்ந்து வெடித்த சிங்களத்தின் எறிகணைகள் மற்றும் விமானங்களின் குண்டு சிதறல்களை தனது உடலில் தாங்கிய தன் அணியனரை மீட்க முன்னரங்கப்பகுதில் இருந்து வந்த பகலவனும் சண்டை வெற்றிக்காக தம் தோழர்களோடு விழி மூடிப்போனான். தாகம் தமிழீழம் என்று தனது நெஞ்சில் சுமந்த வீர வேங்கை தன் கனவுகளை கிளிநொச்சி மண்ணில் விதைத்து தமிழீழ தேசத்துக்காக விழி மூடிப் போனான்....
நினைவு பகிர்வு கவிமகன்.இ
02.02.2017

0 கருத்துகள்:

கருத்துரையிடுக